இன்று ஊடகவியலாளர் நடேசன் அவர்களின் நினைவு தினமாகும்
2004ம் ஆண்டு மே 31ம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான நடேசன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.
நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.
இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது, ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும்.
இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப் பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.
20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், 'நெல்லை நடேசன்' என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.
பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.
அவரின் பணிகளை நினைவுகூரும் இந்த வேளையில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
**************
ஸ்ரீலங்காவின் வழக்கமான கூச்சல்!
ஐநா நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஸ்ரீலங்காவின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நேற்றைய கூட்டத் தொடரில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்குழு அறிக்கை கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை முற்றிலும் தேவையற்றது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க விமர்சித்துள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கு தேசிய நல்லிணக்கத்துக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவை படிப்படியாக பலன் தந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போர் குறித்த ஐநா செயலரின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக வேறுபல நாடுகளும் அங்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளன.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றதுடன், அதன் பரிந்துரைகளை இலங்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், இலங்கை விவகாரத்தை ஐநா மனித உரிமைக் கவுன்சில் மீண்டும் எடுத்திருப்பது ஐநாவின் இரட்டைப் போக்கைக் காண்பிப்பததாக கியூபாவின் பிரதிநிதியான றோடொல்ஃப் ரீயிஸ் றொட்ரிகஸ் சாடியுள்ளார்.
வளரும் நாடுகளை உலக சக்திமிக்க நாடுகள் அடக்கப் பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரீலங்கா அரசாங்கமும், இலங்கை மக்களும் தமது உள்ளுர் விடயங்களை தாமே கையாளும் வல்லமை உள்ளவர்கள் என்று கூறிய சீனாவின் பிரதிநிதி, அதற்கு ஐநா தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறினார்.
**************
யாருக்கு யார் ஆதரவு?
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அனைத்துலக சமூகம் இரண்டாகப் பிரிந்து நின்று மோதிக்கொண்டது
ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக சீனா, கியூபா, ரஸ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் குரல் கொடுத்துள்ளன.
ஸ்ரீலங்கா தொடர்பாக தீர்மானம் மீது மீள்விவாதம் நடத்துவதற்கு கியூபா எதிர்ப்புத் தெரிவித்தது.
சிறிலங்கா தனது சொந்த விவகாரங்களை தானே தீர்த்துக் கொள்ளும் என்று சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதுவர், அமைதியை வென்றெடுக்க சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை சிறிலங்காவுக்கு எதிராக சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரான்ஸ், மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற மேறகுலக நாடுகளின் கருத்தை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஐ.நாவுக்கான ஹங்கேரியின் பிரதிநிதி அன்ராஸ் டிகனி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே நல்லிணக்கம் மற்றும் இறுதியான சமாதானத்தை சிறிலங்காவில் ஏற்படுத்த முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும், ஐ.நாவின் அறிக்கையை வரவேற்றதுடன் சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சுவிற்சர்லாந்தும் வலியுறுத்தியுள்ளது.
*************
எச்சரிக்கும் ஸ்ரீலங்கா!
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஐ.நாவின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் நடந்து கொள்வதாக ஸ்ரீலங்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆரம்ப உரையாற்றிய போது நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை நியாயப்படுத்தும் முயற்சிகளில் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக ஐ.நாவுக்கான ஸ்ரீலங்காவின் வதிவிடப் பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வமற்ற நிபுணர் குழு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு நவநீதம்பிள்ளை கருத்துக்களை வெளியிட்டுள்ளார் எனவும் உறுதிப்படுத்தப்படாத தரவுகளின் அடிப்படையில் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை வெளியிடுவது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தொழில்சார் தன்மையை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில், அந்த விசாரணைகளில் திருப்தியில்லை என்று நவநீதம்பிள்ளை முன்கூட்டியே கருத்து வெளியிட்டுள்ளார் எனவும்,
நவநீதம்பிள்ளையின் விமர்சனப் பாங்கான இந்த நடவடிக்கை ஸ்ரீலங்காவுடனான ஐ.நாவின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
**************
இநதியாவில் பேச்சு
இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
புதுடெல்லியில் இடம்பெற்ற இந்தப் பேச்சுக்களின் போது சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை மற்றும் சரத் பொன்சேகாவின் நிலை தொடர்பாகவும் இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தியாவின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின் மூலம் சரத் பொன்சேகாவின் விடுதலை சாத்தியமாகலாம் என்று ஐதேக வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
*************
அடக்குமுறை புதிதல்ல!
கட்டுநாயக்கவில் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற மோதல்களில் உயர் காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தனியார் துறையினருக்கான ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் நேற்று கட்டுநாயக்கவில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது இந்த மோதல் வெடித்தது.
ஊழியர்கள் கற்கள் மற்றும் கையில் அகப்பட்ட பொருட்களைக் கொண்டு காவல்துறையினரைத் தாக்கினர்.
இதில் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி விஜேகுணவர்த்தன உள்ளிட்ட 15 காவல்துறையினர் காயமடைந்தனர்.
அதேவேளை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் பெருமளவு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் ராகம, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று கட்டுநாயக்க காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த ஆயுதங்களை அபகரிக்க முனைந்ததாகவும் அதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சிறிலங்கா காவல்துறைமா அதிபர் கூறியுள்ளார்.
இந்த நிலைமைகள் குறித்து அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளேயும், மேல் மாகாண அமைச்சர் லான்சாவும் அலரிமாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துக் கூறினார்.
இதையடுத்து நிலைமைகள் சிக்கலாவதைத் தடுக்க தனியார் துறையினருக்கான ஓய்வூதியத் திட்டத்தை இடைநிறுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
இந்த மோதல்களின் 230 ஊழியர்கள் காயமுற்றதாகவும், 100இற்கும் அதிகமான ஊழியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதேவேளை அமைதிநிலையை உருவாக்கும் வகையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை இன்று மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
வடஆபிரிக்க, மத்திய கிழக்குப் பாணியிலான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும் விரிவடையலாம் என்ற அச்சத்திலேயே சிறிலங்கா அரசாங்கம் தனியார்துறையினருக்கான ஓய்வூதிய திட்டத்தை கைவிடுவதற்கு முடிவெடுத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
****************