Sunday 15 May 2011

செய்திகள் 15/05



விசாரணைக்குத் தயாராகும் ஸ்ரீலங்கா?

சிறிலங்காப் படையினருக்கு எதிராக .நா அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஒருங்கிணைந்ததாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைப்பது தொடர்பாக .நா பொதுச்செயலருடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது.
இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால், உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்காணிப்பில் விசாரணைகள் நடத்தப்படும்.
.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் சிறிலங்காவின் .நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இதுகுறித்து ஆராயப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது .நா நிபுணர் குழுவின் அறிக்கையின் சில குறிப்பிடத்தக்க பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக .நா பொதுச்செயலரிடம் சிறிலங்கா அரசு சார்பில் பாலித கொஹன்ன உறுதிமொழி அளித்துள்ளதாகவும் இராஜதந்தர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
**************

ஐநா அறிக்கைக்கு சுவிஸ் ஆதரவு

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் .நா நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக சிறீலங்காவுக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும், சிறீலங்காவுக்கான சுவிற்சலாந்து தூதுவர் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
.நாவின் கருத்துக்களை சுவிஸ் அரசு வரவேற்கின்றது. பொதுமக்களை பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பில் .நா பாதுகாப்புச்சபை ஆராய்ந்துவருகின்றது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதும் பொதுமக்களை பாதுகாப்பதற்கான வழியாகும்.
2009 ஆம் ஆண்டு சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் .நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சலாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் .நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தை சுவிஸ் அரசும், கனடாவும் இணைந்து மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சிறீலங்காவை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது நட்புரீதியற்றது எனவும் சிறீலங்கா அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவது தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஓட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் லெவி தெரிவித்துள்ளார்.
**************

இந்தியாவுக்கு பறக்கும் பீரிஸ்

இந்தியாவிற்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வெளி விவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் நாளை செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர், .நா நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்தைகளை மேற்கொள்வார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் குறிப்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, நிதியமைச்சர் பிரணாப் முக்கர்ஜி, மற்றும் உட்துறை அமைச்சர் பீ. சிதம்பரம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விஜயத்தின் பின்னர் அமைச்சர் ஜீ எல் பீரிஸ், சீனாவிற்கான விஜயம் ஒன்றினையும் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**************

ஐநா மீது கண்டனக் கணைகளை அடுக்கும் ஸ்ரீலங்கா
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, பாதுகாப்புச் சபையில் .நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் பரோனெஸ் வலேரி ஆமொஸ் அம்மையார் வெளியிட்ட கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று பாதுகாப்புச்சபையில் பொதுமக்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வலேரி ஆமோஸ் அம்மையார் கூறியுள்ள இந்தக் கருத்து உறுதிசெய்யப்படாத புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
அவரது இந்தக் கருத்து .நாவின் நிபுணர் குழுவினது அறிக்கையின் அடிப்படையிலானது- .நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
சரியான தகவலைக் கொண்டிருக்கவில்லை என்பதால் ஏற்றுக் கொள்ளாத அந்த அறிக்கையை வலேரி ஆமொஸ் அம்மையார் மேற்கோள்காட்டியுள்ளதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது.
இதுதொடர்பாக .நாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
உணர்ச்சி வசப்பட்டு குற்றம்சாட்டியுள்ளதாகவும், ஏற்றுக் கொள்ளப்பட முடியாத தருஸ்மன் அறிக்கையின் அடிப்படையில் அவர் புள்ளிவிபரங்களை எடுத்துக் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
.நாவின் சாசனங்களைப் பாதுகாக்கும் ஒர் .நா அதிகாரி போல் அன்றி, வலேரி ஆமொஸ் அம்மையார் ஒரு துணைவலிமை கொடுக்கும் பாத்திரத்தை வகிப்பதாகவும் சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.
*****************

ஜெயலலிதாவின் கருத்தை மகிந்த பொருட்படுத்தவில்லை - கெஹலிய

அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதாக ஜெயலலிதா கூறும் கருத்துகளை தாம் பொருட்படுத்தப் போவதில்லையென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா ஜெயராம் கூறும் கருத்துகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் பொருட்படுத்தாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே ஸ்ரீலங்கா அரசாங்கம் பார்க்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறது.
தமிழ் நாடு என்ற மாநிலத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கோ தமது நாட்டு அரசுத் தலைவருக்கோ எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்தார்.
***************

ஸ்ரீலங்காவில் பெருகும் நோய்கள்

கொழும்பு உட்பட ஜன நெரிசலான பிரதேசங்களில் வாழும் மக்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வாழ்க்கை முறைமை, உணவு பழக்கவழக்கங்கள், மற்றும் சமூக நடத்தைகள் போன்றன காரணமாகவே, இந்த நோய்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு நகரில் வசிக்கும் ஒவ்வொரு 10 பேரில் 5 பேருக்கு ஏதாவது நோயினால் பாதிப்படைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நீரிழிவு, புற்றுநோய், மனநல பாதிப்பு நோய்கள் போன்ற நோய் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, கிராமிய மட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
******************