கேட்கும் அமெரிக்கா விசாரணை நடத்துமா?
இராணுவத்தினரும் அவர்களது புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க யுத்தகாலத்தில் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாக தென்னாசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிகார அமைச்சர் தலைமையிலான குழு இரகசிய இடத்தில் வைத்து பொதுமக்களோடு பேசியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த இக்குழு அங்கு வேலை வாய்ப்புப் பணியகத்திற்குச் சென்று இளைஞர்களிடம் கலந்துரையாடியது.
பின்னர் நடைபெற்ற விவசாயிகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமெரிக்காவின்; நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட சில திட்டங்களை இக் குழு பார்வையிட்டது.
நிகழ்வின் முடிவில் பிரத்தியேகமான இடத்தில் பொதுமக்கள் சிலரை சந்தித்து யுத்தகாலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கேட்டறிந்தது.
இதன்போது அரச அதிகாரிகள் உட்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை மேலும் இந்த நிகழ்வில் மூக்கை நுழைக்க இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர் முயற்சித்தபோதும் அது பலிக்கவில்லை.
அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களிடம் யுத்தகாலத்தில் மக்கள் எப்படி பார்க்கப்பட்டார்கள்? இராணுவத்தினராலோ புலிகளாலோ மக்கள் யுத்தத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டர்களா? புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா? இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றபோது எப்படி நடத்தப்பட்டீர்கள்?
போன்ற கேள்விகளும் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் தற்போது மக்கள் எவ்வாறான நிலையிலுள்ளனர்? சுதந்திரமாக நடமாடும் நிலையுள்ளதா? போன்றனவும் கேட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு விளக்கமளித்த பொதுமக்கள் நடந்த சம்பவங்களை அப்படியே தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்முன்னால் தங்கள் பிள்ளைகள் சொந்தங்கள் இறந்து போனமை கணவன்மார் பிள்ளைகளை கண்முன்னால் கையளித்தபோதும் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாமை தற்போது முறையான வீட்டுத்திட்ட வசதிகள் கிடைக்கப்பெறாமை வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் தடுப்பிலுள்ள பிள்ளைகள் தொடர்பாகவும்; கூறினார்.
சந்திப்பின் பின்னர் இராணுவப் புலனாய்வாளர்கள்; விளக்கமளித்த பொதுமக்களிடம் என்ன கேட்டார்கள் பேசினார்கள் என கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்விற்கு காலையிலிருந்தே பெருமெடுப்பில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத்தளபதியும் கலந்து கொண்டிருந்தார்.
**************
பொறுப்பு யாரிடம்?
போர் பங்காளியாக அமெரிக்கா தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தமது பொறுப்பை இன்னும் நிறைவேற்றவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளக், இரகசிய செய்தியுடன் இலங்கை சென்றுள்ளார்.
எனினும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தும் வரை அவர் அதனை வெளியிடமாட்டார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இலங்கை தொடர்பில் இரண்டு அனுகுமுறைகளை கையாள்கிறது.
ஒன்று இலகுவான அணுகுமுறை இரண்டாவது கடுமையான அணுகுமுறை.
இதில் பிளேக் மற்றும் இராஜாங்க திணைக்களம் இலகு அணுகுமுறையையும் அரசுத் தலைவர் ஒபாமாவின் நிர்வாகம் கடுமையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்கவுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
*****************
அரசியல் ஆதாயத்துக்கான அலைவு!
பான் கீ மூனின் நிபுணர் குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க தாம் தயாராவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போரின் போது தமக்கு கீழ் பணியாற்றிய படையினர் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவன் என்ற வகையில் தாம் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்க தயாராவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கே தாம் பதிலளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையால் ஸ்ரீலங்கா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒஸாமா பின் லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டமை குறித்து கருத்துரைத்த அவர், மிகவும் நேர்த்தியான படை நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
பின்லேடனைக் கொன்றதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பதாகைகளை வொசிங்டனில் வைக்கமாட்டார் என்றும், இராணுவத் தளபதியை வீட்டுக்கு அனுப்பமாட்டார் என்றும் தான் கருதுவதாகவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்திருந்த சரத் பொன்சேகா, தமது தலைமையின் கீழ் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை.
எனினும் போர்க்குற்றம் தொடர்பில் குற்றம் காணப்படுபவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
************
குழம்பிப் போன அமைச்சர்?
ஸ்ரீலங்கா அரசாங்கம், பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்காது என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. செயலரின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நேற்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நிபுணர் குழு வெளியிட்டது ஐ.நா. சபையின் அறிக்கை அல்ல எனவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தனிப்பட்ட முறையில் அவருக்கு நம்பகமான மூன்று நபர்களினால் தன்னிச்சையாகத் தயாரிக்கப்பட்டது என்பதால் இந்த அறிக்கைக்குப் பதில் அளிக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையாகவே இது காணப்படுகின்றது என்பதால் அது தொடர்பாக அக்கறை கொள்ள வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முற்றும் முழுதாக குரோத மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை இலங்கை அரசு முழுமையாக நிராகரிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முன்னதாக ஸ்ரீலங்கா அரசாங்கம், இந்த அறிக்கைக்கு பதிலளிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***************
சர்வதேச ஆதரவை கோரும் கோத்தாபாய!
அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுமாலை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை அழைத்துப் பேசியுள்ளார்.
இதன்போது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள், புனர்வாழ்வு முகாம்களில் உள்ள வசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, சீனா, அவுஸ்ரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட 30 இற்கும் அதிகமான நாடுகளின் இராஜதந்திரிகளும், ஐ.நா மற்றும் அதன் முகவர் அமைப்புகளினது பிரநிதிகளும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் ஆகிய அனைத்துலக அமைப்புகளினது பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா இராணுவ புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா அரசதரப்பு கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்காக நடத்தியுள்ள மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
*************
வாக்காளர் நீக்கம்
யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி, 2009 ம் ஆண்டு இடாப்பில் இருந்த சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர் என யாழ். தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் 93 ஆயிரம் புதிய வாக்காளர்கள் 2010 ம் ஆண்டைய பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இம் மாதம் 31ம் திகதியே வெளியாகும் என திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2009 ம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது.
இதன் பிரகாரம் 2010 ம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணிகளில் 90 வீதமானவை நிறைவு பெற்றுள்ளன.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று விடும்.
புலம் பெயர்ந்தவர்கள், மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடப்பெயர்ந்தவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் 2009 ம் ஆண்டு இடாப்பில் இருந்த சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர்.
இந்த மீளாய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இந்த மாதம் 31 ம் திகதி 2010 ம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அந்த வாக்காளர் இடாப்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2009 ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 8 லட்சத்து 16ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
****************