Sunday, 22 May 2011

செய்திகள் 22/05


அர்த்தமற்ற பேச்சுவார்த்தை!
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்களை அரச தரப்பே பலவீனப்படுத்தி குழப்பி வருகிறது.
இந்த இடத்தில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுபவர்களாக தமிழர் தரப்பு இருக்க வேண்டும் என சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
எமக்கு ஒரு இராஜதந்திரம் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
றோஸ் மரிக், செரன தென்னக்கோன் ஆகியோர் எழுதிய இலங்கை இனத்துவ முரண்பாட்டின் பின்புலத்தில் அபிவிருத்தி, அரசியல், வெளிநாட்டு உதவிகள், என்ற புத்தகத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு திருகோணமலை சமூக அபிவிருத்தி நிறுவனத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில் கொழும்பு அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை ஆறு தடவைகள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இனப்பிரச்சினையை மையமாக வைத்தும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மீ;ள்குடியேற்றம் உட்பட ஏனைய அவசியப்பிரச்சினைகள் பற்றியுமே பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது.
ஒவ்வொரு தடவையும் முதல் அரை மணிநேரம் அரசியல் தீர்வு பற்றியும் மற்ற அரை மணிநேரம் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்தும் பேசிவந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இதுவரை பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் எவற்றையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
சொந்த நலனுக்காகவே அரசாங்கம் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்துகின்றது.
கூட்டமைப்பு நம்பிக்கை வைத்து அரசுடன் பேசுகின்றது.
ஆனால் அரசாங்கம் தனது சொந்த நலனுக்காக பேச்சுவார்த்தையை நடத்துகின்றது என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் பேச்சுவார்த்தையை நடத்துகின்றது.
சிங்களக்கடும்போக்காளர்களைக் கொண்ட இந்த அரசிடமிருந்து சரியான அரசியல் தீர்வு தமிழர் பிரச்சினைக்கு வரும் என்று தாம் நம்பவில்லை எனவும் அவ்வாறான சரியான தீர்வு வரும் என்று எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
முழுமையான சுயாட்சித் தீர்வையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
***************

அவசரகாலச் சட்டத்தை நீடிக்க முயற்சி!
அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காகவே மட்டக்களப்பில் சுற்றிவளைப்பு தேடுதல்கள், கைதுகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்ற இரு வௌ;வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை அடுத்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவமும் காவல்துறையினரும் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு நகர பகுதியில் அடிக்கடி இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெறுகின்றன.
அடிக்கடி மேற்கொள்ளப்படும் இவ்வாறான இராணுவ நடவடிக்கையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளதுடன் தங்களின் அன்றாட நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மக்களை மென்மேலும் அச்சத்திற்குள்ளாக்கி அவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர் என அரியநேத்திரன் குற்றம் சாட்டினார்.
பூரண சமாதானம் நிலவுவதாக கூறுகின்ற இந்த அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்காகவேதான் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைளை மேற்கொள்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
************

தோல்விப் பயணம்!
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணம் சிறிலங்காவுக்கு வெற்றிகரமானதாக அமையவில்லை என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றின் அரசியல் விவகாரப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பீரிஸ் தன்னுடன் வெளிவிவகாரச் சேவையில் உள்ள அதிகாரிகள் எவரையும் புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லாததே என்றும் அந்த வாரஇதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
வழக்கமாக வெளிவிவகார அமைச்சர் இத்தகைய பயணங்களின் போது வெளிவிவகாரச் சேவையில் உள்ள அதிகாரிகளை அழைத்துச் செல்வார்.
ஆனால் பீரிஸ், இம்முறை முதல்முறையாக உயர்நிலையிலான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றுக்கு வெளிவிவகாரச் சேவை அதிகாரிகள் எவருமின்றிச் சென்றிருந்தார்.
பிரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சரை மட்டுமன்றி இந்தியப் பிரதமரையும் இந்திய பொதுச்சேவையில் ஆதிக்கம் செலுத்தும் மூத்த அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.
இதன்போது பிரிஸ், தன்னுடன் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவையே அழைத்து சென்றிருந்தார்.
அதன் விளைவுகளை பின்னர் தெரிந்து கொள்ள முடிந்தது.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு விவகாரம் தொடர்பாக அழுத்திக் கூறுவதை பீரிஸ் தனது கைகளைப் பிசைந்தபடி கேட்டுக் கொண்டிருப்பதை, இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம், தெளிவாகக் காண்பிக்கிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சு, ஒருபக்கப் பேச்சுகளாகவே அமைந்து போனதை அந்த ஒரு ஒளிப்படம் மட்டுமன்றி அதன் பின்னர் வெளியான கூட்டறிக்கையும் எடுத்துக் காட்டுகிறது.
மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக வெளிநாட்டு விசாரணைகள் தேவையில்லை- உள்ளக விசாரணகளே போதும் என்ற விடயத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரால் இந்தியாவிடம் இருந்து வாக்குறுதியைப் பெற முடியவில்லை.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகளைக் கோரும் மேற்கு நாடுகளின் நடவடிக்கைகளைத் தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவுக்கு இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு.
.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் இறுதிப்போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது குறித்து இந்தியாவிடம் இருந்து எதிர் கருத்தொன்றைப் பெறும் முயற்சியிலும் சிறிலங்கா தோல்வியடைந்து விட்டது என்றும் அந்த வாரஇதழ் கருத்து வெளியிட்டுள்ளது.
**************

பரப்புரை ஆரம்பம்!
சிறிலங்கா அரசுக்கு அடுத்தவாரம் தொடங்கப் போகும் புதிய தலைவலியை சமாளிக்க முன்கூட்டியே பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
அடுத்தவாரம், .நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மே 30ம் நாள் தொடக்கம் ஜுன் 17ம் நாள் வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறான தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது போனாலும்- அதனைச் சமாளிப்பதற்கான தயார்படுத்தல்களில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது.
இந்தக்குழு விரைவில் ஜெனிவா சென்று முன்கூட்டிய தற்பாப்பு பரப்புரை நடவடிக்கைளில் இறங்கவுள்ளது.
இந்தப் பரப்புரைகளின் ஒருகட்டமாக சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொலிப் பதிவு போலியானது என்று வெளிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அது ஒரு படைச் சிப்பாயால் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டது என்றே கூறப்பட்டிருந்தது.
ஆனால் அது ஒரு தரமான ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டதென்று சிறிலங்கா அரசு கூறியுள்ளது.
இந்தநிலையில் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள சண்டே ரைம்ஸ் சிறிலங்கா அரசுக்கு புதியதொரு தலைவலி அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடருக்கு தாய்லாந்து தலைமை தாங்கவுள்ளது. 47 நாடுகளில் இதில் பங்கேற்கவுள்ளன.
*************

இந்திய துறைமுகம் காங்கேசன்துறையில்?
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான இந்தியப் பொருள்களை இறக்குவதற்கான முக்கியமான ஒரு பிராந்தியத் துறைமுகமாக காங்கேசன்துறைத் துறைமுகத்தை மாற்றுவதே அதனை அபிவிருத்தி செய்வதற்கான அரசின் முக்கிய நோக்கமாகும் என்று அரச ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் வடக்கு, கிழக்குக்கான உதவித்திட்டத்தின் கீழ் இந்தத் துறைமுக அபிவிருத்திக்கான நிதி வழங்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் யாவும் இரண்டு வருட காலத்தினுள் நிறைவுபெறும்.
இது தொடர்பாகத் துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியத் பண்டு விக்கிரம கூறும் போது இந்தியத் துறைமுக நகரங்களான தூத்துக்குடி, சென்னை ஆகிய நகரங்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களுக்கு எடுத்து வரப்படும் பொருள்களான சிமெந்து, உரவகைகள், வெங்காயம் ஆகியவற்றைக் காங்கேசன்துறைத் துறைமுகமே கையாளும் எனத் தெரிவித்தார்.
மேலும் எட்டு அடி ஆழமாக்கப்பட்டு இதனைப் பூரணமாக அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்படும்.
இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தை உள்ளடக்கிய இந்திய அதிகாரிகள் தற்போது காங்கேசன்துறையில் உள்ளனர்.
இந்திய அரசு ஆரம்ப சாத்தியமான விடயங்களை ஆராய்வதற்கென 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
************

கல்விச் சீரழிவு தொடர்கின்றது
வவுனியா மெனிக்பாம் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள ஆனந்த குமாரசாமி இடைத்தங்கல் முகாமிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக இடம்பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அரச மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் முகாமிலுள்ளவர்களால் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் காலம் தாழ்த்தியே பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர் எனவும் அநேகமான நாட்கள் இவர்கள் விடுமுறையில் நிற்பதால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுகின்றது எனவும் முகாமில் உள்ள பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த தவணைகளுக்கான பரீட்சைகளும் சீரான முறையில் நடைபெறவில்லை.
இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்தக் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லாத மாணவர்கள் தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகள் ஊடாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
***********