Saturday 14 May 2011

செய்திகள் 14/05


மீண்டும் படுகொலைக் கலாச்சாரம்!

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
எருவில் பாடசாலை வீதியைச் சேர்ந்த முருகேசு இளங்குமரன் என்ற வர்த்தகரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
நேற்று மாலை 6.55 மணியளவில் அவர் வீட்டில் இருந்த போது உந்துருளிவில் வந்த இருவர் இவர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த வர்த்தகர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு மரணமானார்.
மூன்று நாட்களுக்குள் மட்டக்களப்பில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிவுக்கு வந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்து இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில் நடைபெற்றுள்ள இந்தக் கொலைகளுக்கான காரணம் என்னவென்பது பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.
*************
மன்மோகன் சிங்கை சந்திக்க முயற்சி?
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
.நாவின் போர்க்குற்ற அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடிகள் குறித்துக் கலந்துரையாட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசும், சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் நாளை புதுடெல்லி செல்லவுள்ளனர்.
மூன்று நாட்கள் புதுடெல்லியில் தங்கவுள்ள இவர்கள் இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
.நா அறிக்கை விவகாரத்தில் சிறிலங்காவுக்கு சாதகமாக முறையில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுக்க வைப்பதே இவர்களின் நோக்கமாகும்.
இவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவை சந்திக்கவே புதுடெல்லி செல்வதாக முன்னர் கூறப்பட்ட போதும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கும் அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை நேரம் ஒதுக்கி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்தச் சந்திப்பு நடக்குமா நடக்காதா என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியாது என்று புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************

விசாரணைக்கான சர்வதேச கண்காணிப்புக் குழு அமைக்க ஆதரவு
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் விசாரணைகளை கண்காணிப்பதற்கு அனைத்துலக குழு ஒன்று அமைக்கப்படுவதற்கு தாம் தமது பூரண ஆதரவை வழங்குவோம் என .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள .நா பாதுகாப்புச் சபை கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் .நா செயலாளர் நாயகம் அமைத்த நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தான் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு நடைபெற்ற போரில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே .நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அமைதிக்கும், நீண்டகால நல்லிணக்கத்திற்கும் அது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
********************
தமிழ் கைதிகள் மீது தாக்குதல்
வவுனியா சிறைச்சாலையில் மூன்று சிறைக்கைதிகள் காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதன் காரணமாக அங்கு மீண்டும் கடும் பதட்டம் தோன்றியுள்ளது.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சிறுபான்மையினக் கைதிகள் நேற்று காலை 10 மணியளவில் சிறைக்காவலர்களினால் கடுமையாகத்தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
அச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு வரை வவுனியா சிறைச்சாலையில் சக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட கைதிகள் நேற்று மதியநேரம் தாண்டியும் மீண்டும் சிறைக்குள் கொண்டுவரப்படவில்லை.
அதனைக் கண்டித்தே ஏனைய சிறைக்கைதிகள் காவலர்களை உள்ளே விடாது கதவுகளை மூடி மதிய உணவையும் பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருந்தபோதும் தாக்கப்பட்ட கைதிகள் தொடர்பாக எவ்வித தகவலும் இன்னும் வரவில்லை.
வவுனியா சிறைச்சாலையின் தகவலின்படி குறித்த மூன்று கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
*****************
தமிழ்நாடு தேர்தல் களம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பெருவெற்றி பெற்றுள்ளது. ஆளும் திமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு - போட்டியிட்ட 160 தொகுதிகளில் 147 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 இடங்களில் அதிமுக கூட்டணி 203 இடங்களைக் கைப்பற்றியது.
திமுக கூட்டணியால் 31 இடங்களையே கைப்பற்ற முடிந்துள்ளது.
அனைத்துத் தொகுதிகளினதும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.
ஆளும்கட்சியாக இருந்த திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியுள்ள இந்தக் கட்சியே பிரதான எதிர்க்கட்சியாக அமரவுள்ளது.
அதிமுக அணியில் 10 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும், 12 இடங்களில் போட்டியிட்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியன தலா 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி , இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பர்வர்ட் புளொக் என்பன தலா 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதேவேளை திமுக கூட்டணியில் 119 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவினால் 23 இடங்களையே தக்க வைக்க முடிந்தது.
63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களையே கைப்பற்ற முடிந்தது.
30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், இந்திய முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெரியார் மக்கள் கட்சி போன்ற திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வி கண்டுள்ளன.
சிறிரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் 30,375 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென்காசி தொகுதியில் சரத்குமார் 22,967 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் கடும் இழுபறிக்குப் பின்னர் 2819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 ஆசனங்களைக் கைப்பற்றிய தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ளார்
******************
தமிழக முதல்வரை வாழ்த்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஜெயலலிதா அவர்கள் மூன்றாவது முறையாகத் தமிழகத்தின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டதையிட்டு ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமது உளங்கனிந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகங்கொடுத்து, லட்சக்கணக்கான உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் காணமுடியாமல் இன்றும் அநாதரவான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
80,000க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகளாகியுள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கவீனமுற்றவர்களாக உள்ளனர்.
பலநூறு சிறுவர்கள் தாய்தந்தையற்ற அனாதைகளாகி இருக்கின்றார்கள்.
இவற்றிற்கெல்லாம் மேலாக ஆயிரமாயிரமானோர் தமது கணவன்மாரை, குழந்தைகளை, பெற்றோர்களைத் தேடியலைகின்றார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எமது தாய்த் தமிழகத்து உறவுகள் உங்களுக்கு அமோக ஆதரவளித்து முதல்வராக்கியுள்ளார்கள்.
நீங்கள் வெற்றிபெற்றவுடன் ஈழத்து நிலை தொடர்பாக பத்திரிகைகளுக்குக் கொடுத்த செய்திகள் எமக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகின்றது.
ஈழத் தமிழ் மக்கள் தமது முழுமையான சுயாட்சியைப் பெற்று, சுயமரியாதை, சுயகௌரவம் உடையவர்களாகத் தமது சொந்த மண்ணில் வாழ்வதறகு உங்களது பேராதரவை நாடி நிற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழத்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
************
முதல்வருக்கு வாழ்த்து - பிரித்தானிய தமிழர் பேரவை
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறுதிப்போரில் மட்டும் மிக மோசமாகப் படுகொலை செய்யப்பட்டு, அல்லது காணாமல் போயுள்ளனர்.
அநீதி இழைக்கப்பட்ட ஈழத்தமிழினம் ஒரு முக்கிய வாழ்வுரிமைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், ஆறரைக்கோடி மக்களின் தலைமையை ஏற்கவுள்ள தாங்கள், ஈழத்தமிழ் மக்களின் நீதிப் போராட்டத்திற்கு முக்கிய பங்களிப்பீர்கள் என நம்புகின்றோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************