இந்தியக் குழுவின் ஸ்ரீலங்காப் பயணம் ரத்து?
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை செல்லவிருந்த இந்திய மூவரணியின் பயணம் நிறுத்தப்பட்டு விட்டதாகப் புதுடில்லி ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த வார ஆரம்பத்தில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து மூவரணியின் பயணம் கைவிடப்பட்டுள்ளது.
மூவரணியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சுச் செயலர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இலங்கை இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நல்லுறவு ஆகியன தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக மாத இறுதியில் இந்த மூவரணி கொழும்பு செல்ல இருந்தது.
இனப் பிரச்சினை தீர்வு, அவசர காலச்சட்ட நீக்கம் மீனவர் பிரச்சினை மனித உரிமை மீறல் என்பன குறித்து ஆராயவே மூவரணி முதலில் திட்டமிட்டிருந்தது.
குறிப்பாக நிபுணர் குழு அறிக்கையின் பின்னரான களச்சூழலில் இந்தியாவின் உதவியை ஸ்ரீலங்கா அதிகம் எதிர்பார்த்திருந்தது.
எனினும் அமைச்சர் பீரிஸின் பயணத்தின் போதே இந்த விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டு விட்டதாக புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
மேற்கொண்டு எடுக்கவேண்டிய நகர்வு குறித்து இனிமேல் ஸ்ரீலங்கா தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய நிலைப்பாடு என்ன என்பது தெளிவு படுத்தப்பட்டு விட்டது. அதற்கான ஸ்ரீலங்கா அரசின் பதிலைப் பொறுத்தே இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.
எனவே இப்போதைக்கு இந்தியக்குழு இலங்கை செல்லவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர் பீரிஸ் இந்தியாவில் தங்கியிருந்த மூன்று நாள்களில் ஒரு நாள் முழுவதும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.கே. கிருஸ்ணாவுடனும் மறுநாள் மூவரணியுடனும் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்குடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
இந்தியாப் பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் பீரிஸ் சீனா, வியட்நாம், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு பயணமாகியுள்ளார்.
அவர் நாடு திரும்பிய பின்னே இந்தியா விவகாரத்தில் மேற்கொண்டு ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*************
ஸ்ரீலங்கா அரசைக் கவிழ்கும் அவசியம் எழவில்லை - ஐரோப்பா!
இலங்கையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான தலையீடுகள் எதனையும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவில்லை என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேனாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக ஸ்ரீலங்காவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவினுடை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்காவுக்கு உண்டு.
ஆனால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கவிழ்க்கின்ற முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டுள்ளதான கருத்தில் எவ்வித உண்மையில்லை.
அதை தான் முற்றாக நிராகரிக்கிறேன் என்று பேனாட் சவேஜ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசின் மீது மட்டுமன்றி வேறும் பல நாடுகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
*************
கூட்டறிக்கை நாட்டைக் காட்டிக் கெ(ர)டுத்து விட்டது - தேதேஇ!
இந்தியாவுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டதன் மூலம் இராணுவம் வென்றெடுத்த யுத்த வெற்றியை மீண்டும் காட்டிக் கொடுத்துவிட்டதாக ஜீ.எல்.பீரிஸ் மீது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், அவசரகாலச்சட்டத்தை நீக்குதல், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தல், இதன்மூலம் காணி, காவல்துறை அதிகாரங்களை பகரிந்தளித்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றல், சீபா உடன்பாட்டை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸ், இந்தியாவுக்கு அளித்துள்ள உறுதிமொழிகள் மூலம் ஸ்ரீலங்காவின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
இந்த உடன்பாட்டில் அரசுத் தலைவரின் சம்மதத்துடனேயே கையெழுத்திட்டுள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட ஜீ.எல்.பீரிஸ{க்கு எப்படி அதிகாரம் வந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பீரிசின் கடந்தகால செயற்பாடுகளால் அவர் மீது தேசப்பற்று தேசிய இயக்கத்துக்கு நம்பிக்கை இல்லை. இவர் ஒஸ்லோ சமஸ்டி உடன்பாட்டிலும் தொடர்புபட்டிருந்தவர்.
போர் சிப்பாய்களால் பாதுகாக்கப்பட்ட தாய்நாட்டை பீரீஸ் காட்டிக் கொடுத்துவிட்டார்.
இதன்மூலம் இலங்கையின் தலைவிதியை இந்தியாவும் தமிழ்இனவாதிகளும் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குணதாச அமரசேகர மேலும் கூறியுள்ளார்.
**************
ரணிலுக்கு ஜெயா அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தபோதே பிரஸ்தாப அழைப்பையும் விடுத்துள்ளார்.
கடந்த 17ம் திகதி இரவு இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
நீண்ட நேரம் வரை தொடர்ந்த அவர்களின் தொலைபேசி உரையாடலின் போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தே அதிகமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அதிகாரப் பகிர்வொன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என்பதுடன், அதனை அனைத்துத் தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அழைப்பையேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் தமிழ்நாட்டுக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
*****************
இராணுவ முகாம் பயிற்சி கைவிடப்படாது - சூளுரைக்கும் அமைச்சர்!
எவ்வளவு தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு திட்டமிட்டவாறு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இராணுவ முகாம்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்ட மாத்திரத்தில் அது இராணுவ பயிற்சியாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜுன் மாதம் 23ம் திகதி இந்த பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக பத்தாயிரம் மாணவர்களுக்கு 21 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
******************
ஊமையல்ல, உண்மையைச் சொல்வேன் - சரத் பொன்சேகா
தான் ஊமையல்ல, மிக விரைவில் உண்மைகளை வெளியிடுவேன் என்று முன்னாள் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக நேற்று கடுங்காவலுக்கு மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட பின் மீண்டும் சிறைச்சாலைக்குத் திரும்பும் வழியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தனது தொண்டையில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் காரணமாக தான் மௌனமாக இருக்க நேர்ந்துள்ளதாகவும், தொண்டையில் ஏற்பட்டுள்ள வியாதி சுகமானதும் தான் அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் தொண்டை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக அவருக்கு தொடர்ந்தும் விசேட வைத்திய மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையைப் பெற்றுக் கொடுக்குமாறு பணித்துள்ள நீதிமன்றம், எதிர்வரும் 23ம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
******************