Tuesday 3 May 2011

செய்திகள் 03/05


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ரொபேர்ட் பிளேக் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் பிளேக் நேற்று மாலை கொழும்பை சென்டைந்தார்.
உடனடியாகவே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலைவரம் குறித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இரவு 8 மணி முதல் ஒன்றரை மணி நேரம் இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் .நா. நிபுணர் குழு அறிக்கை வெளியாகி உள்ள பின்னணியில் அரசியல் சூழல் என்பன குறித்து தாம் பிளேக்குக்கு விளக்கியதாக சந்திப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த எம்..சுமந்திரன் தெரிவித்தார்.
மாலைதீவுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு சென்ற பிளேக், முதன் முதலில் கூட்டமைப்புப் பிரதிநிதிகளையே சந்தித்துக் கலந்துரையாடினார்.
பிளேக் இன்று, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரையும் அரச தரப்பு மற்றும் எதிர்த் தரப்பு முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
இந்தப் பயணத்தில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிளேக்கைச் சந்திக்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் யுஎஸ் எய்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களைப் பார்வையிடும் நோக்கோடு அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளூர் தலைவர்களுடனும் அவர் அரசியல் நிலை குறித்துக் கலந்துரையாடக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
******************

அமெரிக்க தூதரகத்தை சுற்றி படைக் குவிப்பு

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி சுமார் 300 படையினரை சிறிலங்கா அரசாங்கம் குவித்து வைத்துள்ளது.
.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பின்லேடனின் மரணத்தை அடுத்து பேரணிகள் நடைபெறலாம் என்று கருதப்படுவதாலேயே, அவற்றை முறியடிக்கும் நோக்கில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா காவல்துறையின் கலகம் அடக்கும் பிரிவு, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 300 படையினரே அமெரிக்கத் தூதரகப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகளவு படையினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள சூழலில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் பிளேக் கொழும்பு வந்துள்ளதால், பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.
என்னும், .நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் முக்கிய கலந்துரையாடல் மையமாக அமெரிக்கத் தூதரகம் மாறியுள்ள நிலையில், அதனைச் சுற்றி படையினரைக் குவித்துள்ள சிறிலங்கா அரசின் நடவடிக்கை சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
***************

சிங்கள குடியேற்றம் தீவிரம்

சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னோடியாக வன்னிப் பகுதியில் அதிகளவான பிரதேசங்களை தற்போது இராணுவம் தமது தேவைகளுக்காக கையகப்படுத்தியுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக, சமய நிறுவனங்கள் குரல்கொடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் புவியியல் துறைப் பேராசியர் இரா.சிவசந்திரன் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
யாழ். நகரிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.
கிழக்கில் அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதியில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வவுனியாவிலும் 30 வீதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னார் பூநகரி வீதி நவீன முறையில் செப்பனிடப்பட்டு வருகிறது.
அந்தப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.
பூநகரியில் மர முந்திரிகை செய்கைக்காக 2 ஆயிரம் பரப்பளவு நிலத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.
மல்லாவி, துணுக்காய்ப் பகுதியில் விவசாயப்பண்ணைக்கு என அதிகளவு நிலத்தை இராணுவம் எடுத்துள்ளது.
கிளிநொச்சி அறிவியல் நகரை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 ஆயிரம் இராணுத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதே வேளை அங்கு 70 ஆயிரம் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மக்களும் இராணுவமும் சம அளவில் உள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் எப்படி மக்கள் நிம்மதியாக வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
எனவே வன்னிப் பெருநிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
அந்தப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாகச் சென்று பணியாற்ற அனுமதி கிடைக்க வேண்டும்.
இவற்றுக்காக பல நிறுவனங்கள், அமைப்புகள் உருவாகி குரல் கொடுக்க வேண்டும்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மறக்கப்பட முடியாதவை.
தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
******************

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும் ரணில்

நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல ஊடக சுதந்திரம் அத்தியாவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலக ஊடக சுதந்திர தினம் அனுட்டிக்கப்படுவதை முன்னிட்டு ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உண்மையான ஊடக சுதந்திரம் இருக்கின்றதா என்பது குறித்து நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கின்றோம் எனவும் அந்தளவுக்கு இலங்கையில் ஊடக சுதந்திரம் நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டு போகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் கடத்தப்படுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றார்கள்.
சிலர் காணாமலே போய் விடுகின்றார்கள்.
ஆனால் அவ்வாறான சம்பவங்களின் போது சட்டம் சரிவர செயற்படுத்தப்படுவதில்லை.
ஆனால் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் நாடொன்றுக்கு ஊடக சுதந்திரம் அத்தியாவசியமானது.
அதற்கான வழிகளை ஏற்படுத்துவது இலங்கையின் ஊடகவியலாளர்கள் முன்னுள்ள பாரிய சவாலாக விளங்குகின்றது என்றும் அவர் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
****************

ஊடக பாதுகாப்பு அவசியம் - ஆசிய அமைப்புக்கள்

இணைய தளங்களை முடக்குதல், இணைய தள உள்ளடங்களை முடக்குதல், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், சைபர் தாக்குதல்களை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு வழிகளில் இணைய ஊடக சுதந்திரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்காசிய சுதந்திர ஊடக கூட்டமைப்பு மற்றும் தெற்காசிய ஊடக ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு தெற்காசிய நாடுகளின் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணைய பாவனையாளர்களின் உரிமைகளை முடக்கக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என பிராந்திய வலய நாடுகளின் அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக ஊடக சுதந்திர தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரத்தன்மையை மதிப்பீடு செய்யவும், ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தவும், ஊடகப் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களை கௌரவிக்கவும் இன்றைய தினத்தைப் பயன்படுத்திக் கொள்வதாக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு செய்தி ஊடகங்கள் ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசாங்கங்கள் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
**********************

டென்மார்க்கில் இருந்து மிதிவண்டிப் போராட்டம்

டென்மார்க்கில் வாழும் தமிழீழத் தமிழர்களான திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்கும் மிதிவண்டிப்பயணத்தை மே முதலாம் நாள் முற்பகல் 9:00 மணியளவில் தொடங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான டென்மார்க் வாழ் தமிழீழ மக்களும், டெனிஸ் மக்களும் கலந்து கொண்டு இவர்களின் மிதிவண்டிப் பயணத்தை டென்மார்க் ஸ்ருவர் நகரின் மையப்பகுதியில் தொடக்கி வைத்தனர்.
மே 18ம் நாள் நெதர்லாந்து கேக் நகரைச் சென்றடையவுள்ள இவர்கள், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமது மிதிவண்டிப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இக் கோரிக்கைகளை முன்வைத்து டென்மார்க் தமிழர் பேரவையானது 2010 ம் ஆண்டிலிருந்தே நீதிகேட்கும் போராட்டத்தை நடாத்திவருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே போர்க்குற்ற நாளை முன்னிட்டு அனைத்துலக மக்களவைகள் இப்போராட்டத்தில் இணைந்துள்ள அதேவேளையில் இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
******************