Thursday 29 September 2011

செய்திகள் 29/09


தஞ்சம் கோரும் ஸ்ரீலங்கா
ஐ.நா.வுக்கான பிரதிநிதி என்ற வகையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாக்கும் பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு உள்ளதென சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது தனியான வழக்கு தொடரப்பட்டுள்ள போதும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அவர் முகம் கொடுப்பதற்கான சகல உதவி ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.  
*****************

ஸ்ரீலங்காவை அச்சுறுத்தும் இரகசிய சந்திப்பு
அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான 'நாம் இலங்கையர்' அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரத்ன, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளரைச் சந்தித்துப் பேசியுள்ளார் என சிங்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்றும் அவை அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன எனவும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் நாம் இலங்கையர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.
*****************

தொடரும் மர்மனிதர்களின் தாக்குதல்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள மர்மநபர்கள் நடமாட்டத்தினால் அச்சமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
நேற்றைய தினம் திருவையாறு பிரதேசத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டில் தந்தையும், மகனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மர்மநபர்கள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு 5பேர் கொண்ட மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
வீட்டினுள் நுழைந்தவர்கள் உடனடியாகவே வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தந்தையான 60 வயதான பொன்னையா பாலசிங்கம், 32 வயதான மகன் பாலசிங்கம் தினேஸ் ஆகியோரை வாளால் வெட்டியுள்ளனர்.
இதில் தந்தைக்கு முதுகிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மகனுக்கு வயிற்றுப்பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டபோதும், அயலவர்கள் எவரும் உதவ வரவில்லை.
இதேவேளை காயமடைந்த மகனுக்கும் மர்மநபர்களுக்கும் இடையில் நடந்த சண்டையினால் தொடர்ந்தும் நிற்;க முடியாத மர்மநபர்கள் வீட்டிலிருந்த 9பவுண் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடைபெற்று மர்மநபர்கள் வெளியேறிச் சென்று அரை மணிநேரத்தின் பின்னரே காயமடைந்தவர்கள் மீட்;கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை கடந்தவாரமும் இதேபகுதியில் ஆசிரியர் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் 10பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
மேலுமொரு வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் 36ஆயிரம் ரூபாவைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை 5பேர் கொண்ட குழுவே இந்தக் கொள்ளை மற்றும் கண்முடித்தனமான தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டு வருவதாகவும், இவர்கள் காற்சட்டையும், ரீசேட்டும் அணிந்திருப்பதுடன் இவர்களில் ஒருவர் சிங்கள மொழிபேசுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இத்தகைய மர்மநபர்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மிகநெருக்கமாக இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.
*****************

உலகை மீண்டும் ஏமாற்ற முயற்சி
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் உலக நாடுகளுக்கு விளக்கமளிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து உலக நாடுகளுக்கு புரிய வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து சில நாடுகள் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
விசாரணை அறிக்கையை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கிளைக்கான இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தாருஸ்மான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
*****************

உண்மையை உணருமா?
நேற்று மதியம் மூன்று மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த ஐம்பது இலங்கை அகதிகளில் 36பேர் பிரித்தானியா சட்டத்தரணிகளின் அதிரடி நகர்வினால் தடுத்து நிறுத்தபட்டுள்ளனர்.
இருபது நன்கு மணித்தியாலங்கள் இவர்களது பயணம் பிற்போடப்பட்டுள்ளது.
ஆயினும் நாளையே இவர்களின் பயண விடயம் தொடர்பாக தெளிவாக தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகதிகள் தடுத்து நிறுத்தப்படுவதற்கு சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்கள ஆதாரம் சான்றாக உள்ளதுடன் மனித உரிமை அமைப்புகளின் ஆதாரங்களும் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.
அத்தோடு நாடு திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் காணமல் போவர் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டபட்டுள்ளது.
சனல் 4 இந்த தடுப்பிற்கு முக்கிய பணியாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து பிரித்தானியா அரசு கவலை கொள்ளவில்லை என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
50 இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்காக விமானத்தினை பிரித்தானிய எல்லை பாதுகாப்பு முகவரமைப்பின் அதிகாரிகள் தயார்படுத்திய போது பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இலங்கைத் தமிழர்கள் நாடு திருப்பப்படின் 50 இலங்கைத் தமிழர்களும் கொடுமைக்கு உள்ளாகலாம் என எச்சரித்திருந்தனர்.
இறுதி நேரத்தில் கூட நாடு கடத்தப்படுவோரின் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.ஓ.எம் என்ற சர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தினர்.
எனினும் அந்த அமைப்பு, நாடு கடத்தப்படுவோரின் பாதுகாப்பு குறித்து தம்மால் உறுதிப்பாட்டை தெரிவிக்கமுடியாது என்று தெரிவித்துவிட்டது.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் நாடு கடத்தப்படுவோரிடம் தமது கொழும்பு உயர்ஸ்தானிகர தொலைபேசி இலக்கங்களை கொடுத்துள்ளது.
எனினும் சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் தலைவர் கீத் பெஸ்ட், நாடு கடத்தப்படுவோர் தொடர்பில், பிரித்தானிய எல்லைப்பாதுகாப்பு சபையின் தலைவர் ரொப் வைட்மானுடன் தொடர்பு கொண்டு, நாடு கடத்தப்படுவோரின் தொடர்பு தகவல்களை பெற்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதேவேளை நாடு கடத்தப்படும் தமிழர்கள் நிச்சயமாக இலங்கையில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
*****************

நிராதரவான தமிழர்கள் - செஞ்சிலுவைச் சங்கம்
பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் வட இலங்கை மக்களுக்கு போதிய சர்வதேச உதவி கிடைப்பதில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முன்பு யுத்தப் பிரதேசங்களாக இருந்த இடங்களில் சாமானிய மக்கள் படுகின்ற கஷ்டங்கள் பற்றி இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம் குரல்கொடுத்துள்ளது.
யுத்தத்துக்கு பின் மீள்குடியேறிவருவோர் பெரும்பான்மையாக இருந்துவரும் இப்பிரதேசங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படையான வசதிகள்கூட இல்லை என்றும், சர்வதேச கொடையாளி நாடுகளும் இவர்களுக்கு போதிய அளவு உதவுவதில்லை என்றும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், வடக்கில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடும், வாழ்வாதாரமும், குடிநீர் கழிப்பறை வசதிகளும் உடனடியாகத் தேவைப்படும் நிலையே இருந்துவருவதாக செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேயசிங்க கூறினார்.
இலங்கையிலிருந்து மனித உரிமை பிரச்சினைகள் தொடர்ந்து காதில் விழுந்து வருவதால், கொடையாளி நாடுகள் உதவிகளை வழங்கத் தயங்குகின்றனவோ என்று தாங்கள் அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது அடிக்கடி மனித உரிமை தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததால், சர்வதேச சமூகத்தின் உதவி முயற்சிகள் நீர்த்துப் போயுள்ளன என்றும் அவர் விமர்சித்திருந்தார்.
ஆனால் செஞ்சிலுவை சங்கத் தலைவரின் விமர்சனத்தை தாம் ஏற்க முடியாது என இலங்கையின் முக்கியக் கொடையாளிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னார்ட் சேவெஜ் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான உதவிகள் வழங்கக் தாங்கள் தயங்குவதில்லை என அவர் கூறினார்.
இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் ஆதரித்து வரவே செய்கிறது என்றும், உறைவிடம், வாழ்வாதாரம், நிரந்தர வீடுகள் தொடர்பாக இலங்கையில் அடுத்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்படுகின்ற உதவித் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி வழங்கி வரவே செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் நிலவரம், மனித உரிமைகள் நிலவரம் இவற்றையெல்லாம் கண்டு மனிதாபிமான உதவிகள் விஷயத்தில் மாற்றங்கள் வர தாங்கள் அனுமதிப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் கொடையாளி நாடுகள் வழங்கும் உதவிகள் குறைந்து வரத்தான் செய்கின்றன.
ஐ.நா.மன்றம் மிகச் சமீபத்தில் வெளியிட்ட மனிதாபிமான உதவிப் பணிகள் பற்றிய அறிக்கையில், இலங்கை இந்த வருடம் ஐ.நா. முன்னெடுக்கவுள்ள உதவித் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியில் சர்வதேச கொடையாளிகளிடம் இருந்து நான்கில் ஒரு பங்கு நிதிதான் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
*****************

மறுக்கும் மாலைதீவு
நியுயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து மாலைதீவு உதவி அதிபர் மொகமட் வாகிட் ஹசன் கலந்துரையாடியதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை மாலைதீவு உதவி அதிபரின் செயலகம் நிராகரித்துள்ளது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது சிறிலங்கா அதிபரை மாலைதீவு உதவி அதிபர் சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் மனித உரிமை நிலைமைகள் குறித்து அதன்போது பேசப்படவில்லை என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதஉரிமை நிலைமைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதாக மாலைதீவு உதவி அதிபர், சிறிலங்கா அதிபருக்கு வாக்குறுதி அளித்ததாக ஹவீரு என்ற ஊடகத்துக்கு சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாலைதீவு உதவி அதிபரின் செயலகம், மகிந்த ராஜபக்சவை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாகவும், அதில் வர்த்தக உறவுகள் தொடர்பாகவும் ஐ.நாவில் வடக்கு, தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியுமே பேசப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பில் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து எதுவுமே பேசப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் முயற்சியில் பரப்புரைகளில் மாலைதீவு அதிபர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*****************

நோர்வையை கண்டிக்கும் ஸ்ரீலங்கா
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை ஒளிபரப்ப நோர்வேயின் என்ஆர்கே தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதுவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த ஆவணப்படம் முற்றிலும பக்கச்சார்பானது என்றும், இதில் சிறிலங்கா மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேக்கான சிறிலங்கா தூதுவர் றொட்னி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகைய ஆவணப்படத்தை ஒளிபரப்புவது அதனைக் குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுபோன்ற காட்சிகள் அடங்கிய காணொலியை ஒளிபரப்புவதன் மூலம் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மட்டுமன்றி அதன் பணியாளர்களுக்கும் நோர்வேயில் வசிக்கும் சிறிலங்கர்கள் அனைவருக்குமே பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ஆவணப்படத்தை ஒளிபரப்புவது குறித்து கவனம் செலுத்துமாறும் என்ஆர்கே தொலைக்காட்சியிடம் சிறிலங்கா தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் சிறிலங்கா துதரகத்தின் கடும் எதிர்ப்பை என்ஆர்கே தொலைக்காட்சி கண்டுகொள்ளவில்லை.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புக்களை புறக்கணித்து சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை என்ஆர்கே தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
*****************






Sunday 25 September 2011

செய்திகள் 25/09


கனேடிய முயற்சிக்கு நன்றி.
ஐ.நா. செயலாளர் நாயகம் திரு. பான் கி. மூனின் ஆணையின்பேரில் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திடம் மேல் நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பெற்றுள்ளது.
இதன்பாலான ஐ.நா.வின் முயற்சிகளை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ள அதேவேளையில் கடந்த சில தினங்களாக ஜெனீவாவிலும் கனடாவிலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அண்மையில் கனடா பிரதமர் திரு. ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்த இலங்கை தொடர்பான கொள்கை மாற்ற பேட்டியைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை கனடாவின் ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 19வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கொண்டுவருவதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.
இத் தீர்மானப்படி, எதிர்வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கையின் நல்லிணக்க ஆணையம் வெளியிடவுள்ள அறிக்கையையும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை எடுத்துள்ள, எடுக்கவுள்ள செயல்பாடுகளையும் சர்வதேச நாடுகள், சுயாதீன ரீதியில் உத்தியோகபூர்வமாக சம்பாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிப்பாடன இவ் நடவடிக்கை ஐ.நா. சபையின் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையை வலுப்படுத்தவதாக இருப்பதாகவும், ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலமே இலங்கை அரசாங்கம் மறைத்து வரும் மனித உரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட்டு ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அமைதியைப் பேண உதவும் எனவும் கனடிய தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றும் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகரும், கனடா சட்டவியலாளர் உரிமைகள் காப்பு நிறுவனத்தின் உறுப்பினருமான திரு. கேரி ஆனந்தசங்கரி, ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கருத்துத் தெரிவிக்கையில் கனடாவின் கொள்கை மாற்றத்தையும் , பிரதமர் திரு. ஸ்டீபன் ஹாப்பரின் வெளிப்பாடான கருத்துக்களையும் வரவேற்றுள்ளார்.
எனினும் புதன்கிழமை இலங்கை தொடர்பான தீர்மான முன்மொழியை கனடா உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் ஆணையத்தின் 18வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவில்லை.
கனடாவின் இத் திடீர் திருப்பம் பலரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இது தற்காலிகமானதா அல்லது ஒரு சாணக்கியத்தனமான அரசியல் நகர்வா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்டுகிறது.
*******************

மீண்டும் வலியுறுத்தும் பான் கீ மூன்?
சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு நம்பகமான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நியுயோர்க்கில் நேற்றையதினம் ஐ.நாவினது பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போதே போர்க்குற்றம் தொடர்பாக நம்பகமாக பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை சிறிலங்கா முன்னெடுக்க வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் கடந்த கால மோதல்களுக்குக் காரணமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றும் அதிபர் மகிந்தராஜபக்சவிடம் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*******************

சவால் விடும் சவேந்திர சில்வா?
உலகின் எந்தவொரு நீதிமன்ற விசாரணையையும் சந்திக்கத் தயார் என போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
தமக்கும், தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு சவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட இருப்பிடத்திற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நியூயோர்க் விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷவிடம், சவேந்திரா சில்வா நேரடி ஆலோசனைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
*******************

ஸ்ரீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சியில்
சனல்4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய ஊடகமான Nசுமு2இல் எதிர்வரும் செவ்வாய் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நோர்வே ஈழத்தமிழர் அவையின் நீண்ட முயற்சியின் பயனாக சிறீலங்கா பேரினவாத அரசால் தமிழ்மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கோரக்கொலைகளின் காட்சி பெட்டகம் நோர்வேயிலும் முதல் முறையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகவே நோர்வேயில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் நோர்வேஜிய நண்பர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் இச்செய்தியை பரிமாறி அதிகமான மக்கள் பார்ப்பதர்க்கு பரப்புரையை மேற்க்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எமது மக்கள் பட்ட துன்பதுயரங்கள் ஏக்கங்கள் வீண்போகாது அவர்களின் சுதந்திமான வாழ்வுக்காக சர்வதேசப்பரப்பில் போராடவேண்டிய பாரிய பங்கு எம்மிடமுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தார்மீகக்கடமையை அனைவரும் உணர்ந்து நாகரீக உலகத்தில் எமது உறவுகள் அநியாயமாக கொல்லப்பட்ட கொலைக்கள காட்சிகளை சர்வவேச சமுகத்தின் கண்களின் ஊடாக இதயத்தில் ஈரத்தை ஏற்படுத்த ஒன்றுபடுவோம் என இது தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைத்தளங்களில் பாடசாலைகளில் உங்களின் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் காலத்தின் தேவையுணர்ந்து கைகோர்த்து ஞாலத்தினை வெல்வோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
*******************

ஜே.வி.பியின் நிலை என்ன?
ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் ஜே.வி.பியின் பத்திரிகையான லங்கா பத்திரிகையும், அக்கட்சியின் ஊடகப்பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு விரிசல் அடைந்து வருகின்றது.
இதனால் சிலர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என ஜே.வி.பி யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அவ்வாறு கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விவகாரங்களுக்கு அதிகளவான முன்னுரிமை அளித்தல் மற்றும் கட்சியின் தலைமைத்துவம் என்பன தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜே.வி.பியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கீழ்மட்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கட்சியிலிருந்து புறம்பாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
அதேவேளை, ஜே.வி.பியின் தற்போதைய தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதால் கட்சிக்குள் காணப்பட்ட பிரச்சினை பிளவாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை, ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு அரச தரப்பிலுள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கலாம் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார்.
அரசு, ஐக்கிய தேசியக்கட்சி, அமைச்சர் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட கட்சிகளின் முயற்சியாக ஜே.வி.பியைப் பிளவுபடுத்த நினைக்கும் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கட்சியிலிருந்து எவரையும் விலக்கவோ எவரும் விலகவோ இல்லை என்று கூறிய அவர், இன்னும் சில தினங்களில் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது கட்சி உறுப்பினர்கள் சுமுகமாகத் தமது கடமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
*******************

தொடரும் காணிப்பதிவுகள்
அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி உரித்து பதிவுக்கான மண்ணின் மகிமை வேலைத் திட்டம் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாணக் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நில அளவைத் திணைக்களம், காணி நிர்ணய திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், பதிவாளர் நாயகத் திணைக்களம் என்பன இணைந்து மண்ணின் மகிமை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
நில அளவைத் திணைக்களத்தினால் இலவசமாக நில அளவை செய்யப்பட்டு காணியின் உரித்து நிர்ணயம் செய்யப்பட்டு காணிக்கான உரித்துச் சான்றிதழ் பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும்.
இதற்காக ஒவ்வொருவரும் தத்தமது காணிக்கான உரிமை கோரும் விண்ணப்பத்தை கிராம சேவையாளர்களிடமிருந்து இலவசமாக எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்காது பெற்றுக் கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இணையத்தில் தமது விண்ணப்பங்களைப் பெற்றுத் தமது பிரதேச செயலருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.
அத்துடன் வெளிநாட்டிலுள்ளவர்கள் தமது உறவினர் மூலமாகவும் கிராம சேவையாளர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
இதற்கு உரித்துத் தத்துவம் தேவையில்லை.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் முன்னோடியாக ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலகம், கிளிநொச்சியில் கரைச்சி உதவி அரச அதிபர் பணிமனை, முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர் பணிமனை, மன்னாரில் முசலி பிரதேச செயலகம், வவுனியாவில் வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பணிமனை ஆகியவற்றிலேயே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் தமது விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை தவிர்ந்த வட மாகாணத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
*******************

தமிழரை அடக்க புதிய சட்டம்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்று தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஈவா வணசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
*******************

தீர்வுக்கு சர்வதேச அழுத்தம் அவசியம் - பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
சர்வதேச அழுத்தங்களின்றி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரும் யாழ். சிந்தனைக்கூடம் பணிப்பாளருமான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்கான இறைமைக்கான போராட்டத்தை முப்பதாண்டுகள் அறவழியிலும் முப்பதாண்டுகள் ஆயுதம் தாங்கியும் நடத்தியுள்ளனர்.
இதுவரை எந்தவிதத் தீர்வையும் வந்தடையவில்லை. இதற்கு இம்மக்கள் வழங்கிய விலையோ மிக அதிகமாகும்.
1977ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டிலே ஈழத்தமிழர் தம் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் தீர்வெனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இக்கோட்பாட்டையே முன்னெடுத்துச் சென்றனர்.
சில தினங்களுக்கு முன்பு ஐ.நா. மன்றத்திலே உரையாற்றிய அரசுத் தலைவர் இலங்கையின் இனப்பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை அதை நாமே தீர்த்துக்கொள்வோம் என்ற விதமாகப் பேசியிருந்தார்.
62 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கின்ற இந்தப் பிரச்சினையை இவர் எப்படி தனித்துத்தீர்க்கப் போகின்றார் என்ற நியாயமான கேள்வி இதே இடத்திலே எழுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய சூழ்நிலையிலே சர்வதேசத் தலையீடின்றி இனப்பிரச்சினைக்கு நியாயமான, சுமுகமான, ஜனநாயக ரீதியிலான தீர்வு கிடைக்காதென்ற சரியான முடிவுக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள்.
சர்வதேச சமூகமும் இதைத் தெட்டத்தெளிவாக உணர்ந்தே இருக்கின்றது எனவும் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
*******************

செய்திகள் 24/09


சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு
நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உதவித் தூதுவர் சவேந்திர சில்வா அந்நாட்டின் இராணுவத்தில் 58வது படையை தலைமை வகித்து நாற்பது ஆயிரத்துக்கு மேலான அப்பாவித் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவராவர்.
இதற்கு பரிசாக அந்நாடு ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் பதவியை அவருக்கு அளித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவை இவ்வாரம் ஆரம்பித்து சிறப்பாக நடைபெறும் இவ்வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவரை போர்க்குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
58வது படையணியின் தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா மிகவும் கொடுமையானதும் தமிழ் மக்களுக்கு எதிராக அதிக துன்பங்ளையும் விளைவித்த போரை நடத்தினார்.
வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடும் துயரை நேரடியாக அப்பாவி தமிழ் மக்கள் மேல் ஏவியவர்.
பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவம் மிக அதிகளவில் போர்க்குற்றங்களையும் மனித இனத்திற்க்கு எதிரான குற்றங்களையும் இழைத்திருந்தது.
குறிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய பொதுமக்களையும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களான வைத்தியசாலைகளையும் ஜெனரல் சில்வாவின் சிங்கள படைகள் நேரடியாக தாக்கியது.
சிறிலங்காவின் சட்டத்தை மட்டுமல்ல அமெரிக்கச் சட்டம், சர்வதேச சட்டம் அனைத்தையும் மீறய செயலாகும்.
ஜெனரல் சில்வாவும் அவரது படையினரும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களையும் சித்திரைவதை செய்து கொலை செய்திருப்பது போர் விதிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களாகும்.
அமெரிக்க நீதிமன்றம் நீதிக்கும் செய்த குற்றங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பும் கொடுக்காவிட்டால் சிறிலங்காவில் குற்றம் இழைத்தவர்கள் தொடர்ந்தும் தண்டனை பெறுவதிலிருந்து தப்பலாம் என்றே எண்ணுவர் என வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞ்சர் அலி பெய்டுன் அவர்கள் குறிப்பிட்டார்.
இச் சட்டநிபுணர் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடத்தில் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய துறையில் முன்னணி வகிக்கின்றவர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சி எனவும் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கு மட்டும் தமது முயற்சி தொடரும் எனவும் சட்டவல்லுநர் பெய்டுன் குறிப்பிட்டார்.
நியூயோர்க் நகரில் 66வது ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்ள சென்றிருக்கும் சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஐபக்சவுக்கு எதிராக பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் இவ்வேளையில் நீதியையும் செய்த கொடுமைகளுக்கு பொறுப்பு ஏற்கும் நிலைமைகளை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பம் மிக முக்கியமானது என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
*******************

இராஜதந்திரப் போரில் உலகத் தமிழினம்
அரசுடன் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுத் தொடர்பில் விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் தந்திரோபாயங்களை நாம் யோசிக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நடப்பது இராஜதந்திரப் போராகும். இந்தப் போரில் நாம் வெல்ல வேண்டும்; வென்றே தீர வேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூறினார்.
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நற்பிட்டிமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச அரங்கில் அரசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக பேச்சு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
அந்த சர்வதேச அரங்கின் ஆதரவை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, அந்தப் பலத்தோடு நம் உறவுகளான புலம்பெயர்ந்தவர்களின் ஆதரவோடும் இன்று அரசுடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
*******************

தமிழின கல்வியை தகர்க்க முயலும் மகிந்த குடும்பம்
வன்னியில் செயற்பட்டு வந்த கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிட தொகுதிகள் சில நாமல் ராஜபக்ஸவின் பணிப்பின் பேரில் அண்மையில் இரவோடிரவாக உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் சகிதம் உள்ளே புகுந்த சிலரே கட்டிடங்களை இடித்தகற்றியுள்ளனர்.
ஏ-9 வீதியோரமாக அமைந்துள்ள கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரி புலம் பெயர் தமிழ் உறவுகளது உதவிகளுடன் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இலங்கை கல்வி அமைச்சினில் பதிவு செய்யப்பட்டே இது வரை இயங்கியும் வந்திருந்தது.
இந்நிலையில் கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் முகப்பின் இருமாடிக் கட்டங்களை இளைஞர் விவகார அமைச்சின் தேவைக்கென நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ தற்போது பறித்துக்கொண்டுள்ளார்.
இதையடுத்து கிளிநொச்சி தொழில் நுட்பக்கல்லூரியின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கிப்போயுள்ளது. கற்பித்தல் செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தொழில் நுட்பக்கல்லூரியின் வளவினுள் பின்புறமாக இருந்த கட்டடங்களை இடித்தகற்றிய பின் அப்பகுதியில் மேலும் மூன்று மாடி கட்டிடமொன்றினை அமைக்க நாமல் ராஜபக்ஸ முற்பட்டுள்ளார்.
எனினும் தொழில் நுட்பக்கல்லூரியின் வளவினுள் கடந்த ஜந்து வருட காலப்பகுதியினுள் கட்டப்பட்ட கட்டிடங்களே உள்ளன.
அவற்றினை இடித்தழிக்க பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
இதையடுத்தே கனரக வாகனங்கள் சகிதம் இரவோடிரவாக உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
கடந்த கால யுத்தங்காரணமாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள் கவனிப்பாரின்றி வன்னியெங்கும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
*******************

எச்சரிக்கும் சரத் பொன்சோகா
களனியில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அமைச்சர் மத பேதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் போதைப் பொருள் விற்பனை செய்யும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
களனியைச் சேர்ந்த அமைச்சர் மக்களின் கை, கால்களை உடைப்பதாக எச்சரிக்கின்றனார்.
இவ்வாறான நபர்கள் பொது மக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைத்ததால் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடங்களை நாம் கற்பிப்போம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தோள் பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
*******************

மகிந்த - மன்மோகன் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 66 ஆவது கூட்டத்தொடரில் நேற்று அரசுத் தலைவர் உரையாற்றிய பின்னரே இந்திய பிரதமருடனான சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தமிழர்க்கான அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகிந்த தனது உரையில் சர்வதேச தீர்வு சாத்தியமற்றது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*******************


மர்ம மனிதனை தொடரும் முகமூடி திருடன்
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபெற்ற திருட்டு முயற்சியின் போது யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு வைத்தியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி கருவப்புலம் வீதியைச் சேர்ந்த இந்த மருத்துவர்களின் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு பணம், நகை போன்ற பெறுமதியான பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொக்குவில் கோணவளை வீதியிலுள்ள வங்கி ஊழியர் வீட்டுக்குச் சென்ற திருடர்கள் ஊழியரைத் தாக்கி விட்டு பணம், நகை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் தங்கள் முகத்தினை முகம் மூடியினால் மறைத்துக்கொண்டு வந்ததாக பாதிக்கப்பட்டவர்களால் கோப்பாய் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
*******************

நம்பிக்கையிழக்கும் ரணில்
இனியும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார கூட்டம் ஒன்றின் போது, ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டில் இருந்து இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? கடந்த ஒன்பது வருடங்களில், தொழில் வழங்கி இருக்கிறதா? பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதா? அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் ஏழைகளின் வீடுகளை உடைக்கிறது அரசாங்கம். அவர்களை வெளியேற்ற முயற்சிக்கிறது.
இதற்கு மாற்று வழி, ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு வரசெய்வதே ஆகும் என ரணில் விக்ரமசிங்க இதன் போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, நாட்டின் எதிர்கட்சிகள், அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது என சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டில் அரசாங்கத்துக்கு எந்த சவால்களும் இல்லை.
எதிர்கட்சித் தலைவர், அவரது கட்சியில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்.
ஏனைய உறுப்பினர்கள் கட்சியின் மூலஸ்தானத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவரவர் வேலைகளை அவரவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்கொள்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் எந்த சவாலும் இல்லை.
ஆனால் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்கள் உள்ளன.
ஆனால் அதனையும் அரசாங்கம் சமாளிக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
*******************

கண்ணிவெடியை தேட முடியாமல் தொல்பொருள் தேடும் சிங்களம்
வடக்கில் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டொக்டர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ்ப்பாணத்தில் 50 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாவதற்கு முன்னதாக குறித்த தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட சில பிரதேசங்களிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கண்ணிவைடிகளை அகற்ற முடியாத அரசு தொல்பொருளை தேடிச் செல்வது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
*******************

ஜே.வி.பியின் தொடரும் குளறுபடி
ஜே.வி.பி கட்சி விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படும் சொற்ப அளவிலான நபர்கள் கட்சிக்குள் முறுகலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருப்பதனால் குழப்ப நிலைமைகள் ஏற்பட வாய்ப்பில்லை.
நேற்று ஊடகங்களில் வெளியான பல செய்திகள் அடிப்படையற்றவை என சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் நேர்காணல் வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஜே.வி.பி கட்சி உட்கட்சி பூசல் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இரண்டு தரப்பினரும் கட்சி ஆதரவாளர்களின் ஆதரவினை திரட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருடன் எந்தவிதமான இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ளத் தயாரில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேம்குமார் என்ற பெயரில் கட்சியில் எந்தவொரு உறுப்பினரும் செயற்படவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரேம்குமார் எங்கிருக்கின்றார் என்பது கூட தங்களுக்குத் தெரியாது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
*******************






Friday 23 September 2011

செய்திகள் 23/09


மகிந்த மீது அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது, நியுயோர்க் நீதிமன்றத்தில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி போர்க்குற்ற வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி சார்பில் நியுயோர்க் மாநில நீதிமன்றத்தில் இந்த வழக்கினை சட்டத்தரணியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருமான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தாக்கல் செய்துள்ளார்.
கேணல் ரமேஷ் யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு அறிவிப்பை மேற்கொண்டிருந்ததுடன் ரமேஷின் இறந்த உடலையும் பல்வேறு தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தியிருந்தது.
கொல்லப்பட்ட ரமேஷின் உடலை அவரது மனைவி வத்சலாதேவி தனது கணவருடையது என உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனாலும் இறப்பதற்கு முன்னர் தளபதி ரமேஷ் இராணுவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சனல் 4 காணொளியானது இராணுவம் மேற்கொண்ட படுகொலைக்கான ஒரு வலுவான சாட்சியமாக அமைந்துள்ளது. 
இராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற நிலையில் ரமேஷின் படுகொலைக்கு சிறிலங்கா அதிபர் இராஜபக்சவே முதன்மைக் காரணம் என இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படுகொலையானது இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கான வலுவான ஆதாரமென சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன. 
அண்மையில் வெளியான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை, சிறிலங்கா அரசபடைகள் வன்னிப்போரில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன் வன்னிப் போரின்போது 40 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டிருந்தது. 
நிபுணர்குழுவின் இவ் அறிக்கை அண்மையில் ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடருக்கு ஐ.நா பொதுச்செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டமை தெரிந்ததே. 
இவ்வழக்கு சிறிலங்கா அதிபரின் நியுயோர்க் விஜயத்தின்மீது எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
******************

சுவிஸில் போர்க்குற்ற வழக்கு
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டுள்ளன.
தீங்குகளுக்கு எதிரான சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன.
இதைடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் நாளுடன் கொழும்பு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************

பிரித்தானியாவில் இருந்து 150 தமிழர்கள் நாடுகடத்தல்
தமது நாட்டில் அரசியல் மற்றும் அகதிகள் அந்தஸ்த்துக்கோரி அது நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வரும் 28ம் திகதி சுமார் 150 தமிழர்களை தனி விமானம் ஒன்றில் ஏற்றி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்குச் செல்லும் வெளிநாட்டு குடிஉரிமையுள்ளவர்களையே இலங்கை அரசு கைதுசெய்து சிறையில் அடைத்துவரும் நிலையில் இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 150 பேரின் நிலை என்னவாக அமையும் என பல அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளது.
******************

கனடாவின் நடவடிக்கை குறித்து சிங்களம் அதிருப்தி?
இலங்கைக்கு எதிராக கனடா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ரஸ்யா உள்ளிட்ட சில நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தி வருகின்றது.
எனினும், இந்த முயற்சிகளுக்கு ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை அமைப்புக்களும், மகளிர் அமைப்புக்களும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என இலங்கைக்கு ஆதரவான நாடுகள் கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************

ஐநாவின் தோல்வி?
இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கொழும்பிடம் தோல்வி அடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஓராண்டுகால நடவடிக்கைகள் குறித்து 69 பக்க அறிக்கை ஒன்றை நேற்று ஜெனீவாவில் விடுத்தது.
2010 ஜூலை மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பணிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகளில் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளின் விடயத்தில் நடவடிக்கை எடுக்க சபை தவறிவிட்டது என்று கண்காணிப்பகம் சாடியுள்ளது.
அறிக்கையில் இலங்கை குறித்து ஒன்றரைப் பக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டும் கண்காணிப்பகம், நிபுணர் குழு சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசு வெறுமனே குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததாகவும் சாடி உள்ளது.
அத்தகைய அறிக்கையைப் பெறுவதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் அதிகாரம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இல்லை என்று இலங்கை அரசு தவறாகக் கூறிவருகிறது.
நிபுணர் குழுவில் அடங்கியிருந்தவர்களின் பக்கச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
அறிக்கையின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று மனித உரிமைகள் சபை உள்ளிட்ட ஐ.நாவுக்கு இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.
2009ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையின் மீது மீண்டும் கவனம் செலுத்துமாறு நிபுணர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்தபோதும் மனித உரிமைகள் சபை கடந்த ஜூன் மாதம் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கண்காணிப்பகம் சாடுகிறது.
எனவே, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மீளாய்வு செய்யவேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்குத் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்காமை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி பான் கீ மூனுக்கு மனித உரிமைகள் சபை அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.
குறிப்பாக போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்துச் செயற்படவேண்டும் என்று இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது.
******************

கடுப்பான அமைச்சர்கள்?
13 வது அரசமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்கப்படுவதை ஆட்சேபிக்கும் இனவாத அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோரைச் சமாளிப்பதற்கு இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் பலர் தயாராகியுள்ளதாகத் தெரியவருகிறது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வு யோசனைகளைத் தயாரிக்கும் போது 13 வது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று சில விடயங்களில் உடன்பாடு காண்பதென்று அரசு யோசித்து வருகிறது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான சர்வதேச அழுத்தமும் அரசுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கும் விடயத்தை அரசின் கடும்போக்குடைய இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் ஆட்சேபித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட சில அமைச்சர்கள் இவ்வாறான ஆட்சேபனைகளைத் தெரிவித்து வருவது குறித்தான தமது அதிருப்தியை தமிழ் அரசியல்வாதிகள் பலர் மூத்த அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
அமைச்சரவைக்குள்ளேயே இவ்வாறான எதிர்ப்பு வருமாயின் அரசியல் தீர்வு குறித்தான பேச்சுகளை எப்படி நம்பிக்கையுடன் முன்னெடுக்கமுடியும் என்று இந்த தமிழ் அரசியல்வாதிகள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
தமிழ் அரசியல் பிரமுகர்களின் இந்தக் கவலையை நன்கு செவிமடுத்த மூத்த அமைச்சர்கள் சிலர் இக் கடும்போக்கு அமைச்சர்களுடன் இதுபற்றிப் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்குத் தம்மால் முடியுமென உறுதியளித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதன்படி கடும்போக்குடைய இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ ஆகியோருடன் பேசுவதென்றும், 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது தொடர்பாக அவர்களின் சிபார்சுகளை உள்ளடக்குவது பற்றி ஆராய்வதென்றும் இந்த மூத்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
******************

மீள்குடியேற்ற ஏமாற்றம்
வவுனியா மெனிக்பாம் மூடப்படுவது தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டு;ள்ளது
முன்னர் சுமார் 3 லட்சம் பேரையும் தற்போது 7ஆயிரத்து 400 பேரையும் கொண்டுள்ள வவுனியா மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமை மூடி அதனை வேறு ஒரு இடத்தில் சிறிய வீடுகளுடன் அடங்கியதாக அமைக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரண்டு வாரக் காலப்பகுதியில் இதனை ஏற்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
எனினும் அரசாங்கம் கூறும் குறித்த இடத்தில் பொதுமக்களை தங்கவைக்கக்கூடிய வசதிகள் இல்லை.
இதற்காக முல்லைத்தீவு கோம்பாவில் என்ற இடத்தில் உள்ள 600 ஏக்கர் காட்டுப்பகுதி ஒன்று துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை சுற்றாடல் துறையினரும் பொதுமக்களும் எதிர்த்து வருகின்றனர்.
எனினும் தாம் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்திட்டங்களை மேற்கொள்கின்ற போதும் சர்வதேசம் அதனை விமர்சனம் செய்வதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மக்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாமைக்கு இன்னும் நிலக்கண்ணிகள் அகற்றப்படாமையே காரணம் என்று அரசாங்கம் காரணம் கூறி வருகிறது.
******************

Thursday 22 September 2011

செய்திகள் 22/09


ஐநாவில் போர்க்குற்றம்
ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்க இருப்பதாக ஐ.நா.மனித உரிமை பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
18ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகள் இன்று நண்பகல் ஒருமணிக்கு முதல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கால கெடு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் இன்று காலையில் கனடா இத்தீர்மானத்தை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்க உள்ளதாக தெரியவருகிறது.
கனடா இன்று காலை இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட சிறிலங்கா குழு இதை தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் ஜெனிவாவில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரேரணை அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் என தெரியவருகிறது.
18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்து கொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என ஜெனிவாவில் உள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*******************

தூக்கிவீச கோரும் ஸ்ரீலங்கா!
மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஸ், மாலைதீவு, கியூபா ஆகிய ஒன்பது நாடுகள் மட்டுமே ஒப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளிடம் இருந்து இந்தக் கடிதத்தில் ஒப்பம் பெறுவதற்கு சிறிலங்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்தியா, இந்த விடயத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது என்றும், அது பற்றிய விவாதம் ஒன்று வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
*******************


மாற்றம் தெரிகிறது - ததேகூ
சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதன் காரணமாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

பேசிப் பேசிக் காலத்தை இழுத்தடிக்க முடியாது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது.
அதற்காக இனிமேல் காலத்தை அரசு இழுத்தடிக்காது என்று சொல்லமுடியாது. ஒரு தீர்வைக் கொடுப்பதற்கு அரசுக்கு இன்னும் மனமில்லாமல்தான் இருக்கிறது என்று தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
அதற்கான தீவிர பிரசாரத்தில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.
கல்முனை 2ஆம் பிரிவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் கூறினார்.
தமிழர்களின் பிரச்சினை முடிந்துவிட்டது இனிமேல் இனப்பிரச்சினை என்று ஒன்று இந்த நாட்டில் இல்லை என்று உலகுக்குச் சொல்லவே அரசு விரும்புகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு அதற்கு முயன்றபோதும், அரசால் அது முடியவில்லை.
முன்னர் இருந்த நிலையைவிட அரசு இன்று மிகவும் இக்கட்டான நிலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பல அமைச்சர்களை அனுப்பி, இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்று சொல்வதற்கு அரசு முயன்றது.
ஐ.நா. கூட்டத் தொடர் ஆரம்பித்த முதல் நாளிளேயே, தமிழர்கள் இந்த நாட்டில் சம மதிப்புப் பெற்ற குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதை அறிந்ததும் ஒரே இரவில் உண்மையை விளக்கி சர்வதேச சமூகத்துக்கு அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் சொன்னவை அனைத்தும் பொய்யானவை, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் கருத்துக்கள் என்பதைப் பகிரங்கப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதனால் அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 11ஆம் சுற்றுப் பேச்சின் போது அவர்கள் அது பற்றி முறைப்பட்டார்கள்.
அந்த அறிக்கையால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள் என்றும் கேட்டார்கள்.

இதற்குப் பதிலளித்த தமது தலைவர் சம்பந்தன், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததில் ஒரு விடயமாவது தவறானது என்று சுட்டிக்காட்ட முடியுமா? என்று அவர்களிடம் கேள்வி எழுப்பியதாகவும் சுமத்திரன் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர்கள் மௌனம் சாதித்தனர். பொய்ப் பிரசாரம் செய்யும்போது, அது எமது மக்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதிக்கும்போது தாம் மௌனமாக இருப்போம் என்று நினைக்கவேண்டாம்.
இந்த முறை அறிக்கை மட்டுமே விடுத்தோம். அடுத்த தடவை நேரடியாக ஜெனீவா வந்து சர்வதேச சமூகத்துக்கு உண்மையைப் புரிய வைப்போம் என்று சம்பந்தன் தெரிவித்ததாக சுமத்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

உடனே அவர்கள் அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு பேச்சைத் தொடர்வோம் என்று கூறி நழுவிவிட்டார்கள்.
அரசுடன் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பித்துள்ள பேச்சுத் தொடர்பில் பலருக்கு சந்தேகங்கள், கேள்விகள் இருக்கின்றன.
முன்பு நடந்த பேச்சுக்களில் ஒன்றுமே நடக்காத நிலையில், அரசு உரிய பதிலைத் தராத நிலையில்தான் தாம் அரசுடனான பேச்சை இடைநிறுத்தினோம் எனவும் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அரசு மீது சர்வதேச சமூகம் கடும் அழுத்தங்களைக் கொடுத்ததாலும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தாம் ஆக்கபூர்வமாகச் செயற்படுகிறோம் என்று சர்வதேச சமூகத்துக்கு காட்டவேண்டிய நிர்பந்தத்தாலும் மீண்டும் பேச்சைத் தொடங்க அரசு சம்மதித்தது.
எப்படியான சூழலில் தாங்கள் திரும்பவும் பேச முடியும் என்று செல்லியிருந்தோமோ அந்தச் சூழ்நிலை உருவாக்கப்பட்டதன் காரணமாகத்தான் தாம் திரும்பவும் பேச்சுக்குப் போனதாகவும் குறிப்பிட்டார்.

இப்போதும் ஒரு தீர்வைத் தமிழர்களுக்குக் கொடுக்க அரசுக்கு மனமில்லாமல்தான் இருக்கிறது.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை அளித்ததன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூடமைப்புடன் அரசு பேசவேண்டும் என்று உலக நாடுகள் இன்று அரசை நிர்ப்பந்திக்கின்றன.
சர்வதேச அரங்கில் அரசுக்கு எதிராக எழும்பியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றால் ஏற்படும் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்புவதற்கு, இவற்றுக்கெல்லாம் காரணமான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை வலியுறுத்துகின்றது எனவும் சுமத்திரன் தெரிவித்துள்ளார்.
*******************

ஆதரவு தேடும் மகிந்த
நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 66வது கூட்டத்தொடரில் பங்கேற்க நியுயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அங்கு பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
நேற்றுமுன்தினம் அவர், நைஜீரிய அதிபர் குட்லக் எபெலே ஜொனாத்தனையும், கிர்கிஸ்தான் அதிபர் றோசா ஒட்டுன்பயேவா அம்மையாரையும், ஸ்லோவேனிய அதிபர் டானியோ டக்கையும், செனகல் அதிபர் அப்துலாவ் வாடேயையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது இருதரப்பு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக் கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ள சிறிலங்கா அதிபர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் செயலக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
அதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக்கையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்கா அதிபருக்கும் ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை பான் கி மூன் வெளியிட்ட பின்னர் முதல்முறையாக மகிந்த ராஜபக்ச அவரைச் சந்திக்கவுள்ளார்.
அதேவேளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தவாரம் சந்திக்கவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் கலந்துரையாடவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்கள், மீள்குடியமர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு மகிந்த ராஜபக்ச விளக்கமளிப்பார் என்றும் புதுடெல்லித் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
*******************

அனைவரும் அணி திரள வேண்டுகோள்
ஐ.நா சபையில் மகிந்த ராஜபக்ச ஆற்றவிருக்கும் உரைக்கான திகதியில் மாற்றமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சு அறியத் தருகின்றது.
மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவிருந்த தினமான செப் 23 அன்று பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா முன்றலில் திரள்வதை முடக்கு முகமாக ராஜபக்சவின் உரை முன்போடப்பட்டதாக, ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பான ஊடகங்களால் செய்தியொன்று கசிய விடப்பட்டிருந்தது.
அச் செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்பதனால் நாடு கடந்த தமிழீழ மக்களை வீண் குழப்பமடைய வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை மகிந்த ராஜபக்சவின் உரை ஐ.நா. சபை நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் 23ம் திகதி நடைபெறும் என்பதையும் அவரது உரை முன்னகர்த்தப்பட்டுள்ளது என்று வெளிவந்த செய்தியானது திட்டமிட்டுக் கசியவிடப்பட்ட பொய்பிரச்சாரம் என்றும், நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோளுக்கிணங்கித் தமிழ் மக்கள் பேரணியாய்த்திரள்வார்கள் என்ற பயத்தின் நிமித்தமே இவ்வாறான செய்தியைச் ஸ்ரீலங்கா அரசு கசிய விட்டிருந்தது என்று மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
மகிந்தவின் உரை 23ம் திகதி நடைபெறும் என்பதை ஸ்ரீலங்கா அரசின் உத்தியோகபூர்வ இணையத் தளம் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஸ்ரீலங்கா அரசு சார் மற்றுமொரு இணையத்தளமும் 23ம் திகதியே ஸ்ரீலங்கா அரசுத் தலைவரின் உரை நிகழும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
நாளுக்கு நாள் சர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக எழுந்துவரும் மனித உரிமை மீறல், இனப்படுகொலை,மற்றும் மானுடத்திற்கெதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கான குற்றச்சாட்டுக்களால் ஐ.நா சபையில் ஏற்படக்கூடிய தர்ம சங்கடமான நிலையைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறான பொய்ப் பரப்புரை செய்யப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அலையலையாக அணியணியாகப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பொங்குதமிழின் உயிர்மூச்சுப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கனடியத் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
*******************

கோபமுற்ற ஆக்கிரமிப்பாளர்கள்
அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவைப்படின் நீதிமன்றமும் செல்வோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று அரசாங்கம் மறுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவந்து நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக்காட்டுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எடுத்துவரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இரண்டு இனங்களே இருக்கின்றன. ஒன்று நாட்டை நேசிப்பவர்கள், மற்றவர்கள் நாட்டிற்கு துரோகம் இழைப்பவர்கள் என்று அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னர் ஒரு தடவை தெரிவித்த யதார்த்தபூர்வமான கருத்துக்கு போலி அர்த்தத்தைக் கொடுத்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த சிலர் இவ்விதம் தவறான தகவல்களை எடுத்துரைப்பது மன்னிக்கமுடியாத குற்றமென்று அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழினம் என்றொன்று இலங்கைத்தீவில் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகங்களில் அரங்கேற்றி வருகிறதென்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் புதிதாக சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன.
இந்தக் குடும்பங்களுக்கு புதிதாக காணிகளும் வழங்கப்படுகின்றன.
இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து இந்த இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தமிழர் காணிகளையும் அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதென்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இல்லாத பிரச்சினைகளை போலியாக சோடித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்விதம் பிரசாரங்களை செய்து வருவதை அரசாங்கம் கண்டிக்கிறதென்றும், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய காலத்தில் சரியான பதிலை கொடுக்குமென்றும் கூறினார்.
ஆதாரபூர்வமாக வெளிப்படையாக தெரியும் இந்தப் பிரச்சனையை கூட ஏற்றுக் கொள்ள முடியாத இந்த அரசு எப்படி தமிழர்களின் உரிமைப் பிரச்சனையை ஏற்றுக் கொள்ளப் போகின்றது என்ற கேள்வி அரசியல் அவதானிகளால் எழுப்பப்பட்டுள்ளது.
*******************

சர்வதேச உறவுகளை மேம்படுத்து நா.க.த.அ
தென் சூடானிய அரசாங்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ள இச்சந்திப்பு குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர கனகரட்னம், ஜ.நாவுக்கான பிரதிநிதி முருகையா சுகிந்தன் ஆகிய பிரதிநிதிகளுக்கும், ஜரோப்பிய ஒன்றியத்திற்கான தென்சூடானிய உயர் ஸ்தானிகர் பிரான்ஸிஸ் நஷாரியோ அவர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
தென்சூடானினதும், தமிழீழ மக்களினதும் இருபக்க நலன்கள் குறித்த பல்வேறு வகையான விடயங்களுடன், மனித உரிமைகள் மற்றும் தென்சூடானில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியதாகவும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் இரு அரசாங்களிடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி கொள்ளவும், தென்சூடானுடனும், சர்வதேசத்துடனும் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
*******************

கோபம் கொண்ட பீரிஸ்
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மதிய விருந்து அளித்திருந்தார்.
அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, அனுர பிரியதர்சன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா ஆகியொரும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தூதுவர் ஒருவர், அன்று காலையில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்ததாக அங்கு கூறினார்.
சிறிலங்கா மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக நவநீதம்பிள்ளை தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மதிய விருந்து நடந்து கொண்டிருந்த போதே உடனடியாக பீரிஸ் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பீரிஸ் சொன்ன செய்தி அவருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதற்குப் பின்னர் தான் ஐ.நா பொதுச்செயலரின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாலித கொஹன்னவுக்கு நிபுணர் குழு அறிக்கை ஜெனிவா செல்வது பற்றி அறிவித்துள்ளார்.
சிறிலங்கா அனுப்பி வைத்த மனிதாபிமான நடவடிக்கை குறித்த அறிக்கையின் பிரதியையும் நிபுணர்குழு அறிக்கையுடன் இணைந்து அனுப்பவுள்ளதாகவும் நம்பியார் கூறியுள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் அதிர்ச்சியான அந்தச் செய்தியை அறியாதிருந்தது பீரிசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாலித கொஹன்னவிடம் அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகமும் பீரிசின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
அவர், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக மிகக் கடுமையான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
இவரது இந்த உரையின் ஒழுங்குகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கும் சரி, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் சரி, மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.
ஏனெனில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருடன் அவர் இன்னும் பல காலம் பணியாற்ற வேண்டியிருப்பதால் அவரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*******************

தண்டனை விதிக்க கோரிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் படை சிப்பாய்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் அவசரமாக இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐநா நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறும் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 16ம் திகதி இந்த விசேட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
*******************

குழப்பம் இல்லை ஆனால் இருக்கிறது - ஜே.வி.பி
மக்கள் விடுதலை முன்னணி முன்னை போன்றே செயற்படுகிறது.
இக்கட்சிக்குள் பேசுவதுபோன்று எந்தவிதமான குழப்பமும் இல்லை.
வதந்திகளுக்கு பதில்சொல்லவேண்டிய அவசியமும் தனக்கில்லை என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தாங்கள் இப்பொழுது உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருவதால் இப்படியான வதந்திகளை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார். 
ஜே.வி.பி.க்குள் குழப்பம் உருவாகியிருப்பதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் சோமவன்ஸ அமரசிங்கவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கேட்டபோது கட்சிக்குள் உருவாகியிருக்கின்ற சதி முயற்சிகளுக்கு தாங்கள் ஒருபோதும் கையசைத்துப் போகப்போவதில்லை.
இவ்விடயம் தொடர்பில் முன்னையை விட கூடிய கவனத்தினைச் செலுத்தி பிரச்சினைகளை களையவிருக்கிறோம்.
கட்சியினை புதிய சக்தியுடன் வலுவடையச் செய்து நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவது பற்றி கூடிய கவனம் செலுத்தவிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
கட்சி அங்கத்தவர்களுக்குள் ஏதாவது குழப்பம் நிலவினால் அதனை உரியமுறையில் தீர்த்து வைத்து மக்கள் முன்னணியை சக்திமிக்க கட்சியாக உருவாக்கி நாட்டினை கட்டியெழுப்புவதே தங்களது குறிக்கோள் எனவும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
1987 காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் ரஞ்சிதத்தின் சகோதரரான பிரேமகுமார் குணரத்தினம் தலைமையில் புதிய ஜே.வி.பி. உருவாகி வருகிறது என்ற செய்தி அண்மையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
*******************

சொத்துக்கு ஆசைப்பட்டு........?
இலங்கைப் பிரஜையொருவர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பில் ஈடுபடுவாரேயானால் அவரது அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று சபையில் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்றும் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு பணப் புழங்கலை புலனாய்வு செய்யும் மத்திய வங்கியின் புலனாய்வுப் பிரிவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிதித் தொழில் சட்டமூலம், பணம் தூயதாக்கல் தடைத் திருத்தச் சட்ட மூலம், பயங்கரவாதத்துக்கு நிதி சேகரித்தலை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டமூலம், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் பந்துல இதனைத் தெரிவித்தார்.
*******************