Sunday 11 September 2011

செய்திகள் 11/09


தமிழ் மக்கள் மீதான தொடரும் அழுத்தங்கள்
அவசரகாலச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையும் விட மிக மோசமான வகையில் அரசாங்கம் அம்மக்களிடம் நடந்துகொள்கிறது.
அதற்காகவே கிறீஸ் பூதத்தை உருவாக்கி தமிழ் மக்களை தொடர்ந்தும் கஷ்டங்களுக்குள் சிக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
நாட்டுக்குள் இராணுவ ஆட்சியை கொண்டுவர விரும்பும் இந்த அரசாங்கம், அதற்காக பாதுகாப்பு தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த கிறீஸ் மனிதர் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது.
இந்தப் பிரச்சினை மிகவும் சின்ன விடயமாகும். இதற்கு தீர்வு காண அரசால் முடியும்.
அதற்கு அரசாங்கத்துக்கு வெகு நேரம் ஆகப்போவதில்லை. ஆனால் அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் தள்ளியே நிற்கிறது.
இதன்மூலம், தனக்கும் கிறீஸ் மனிதன் பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளது என்பதை அரசாங்கம் நிரூபித்து வருகின்றது.
அவ்வாறு தொடர்பு இல்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி இதற்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்திருக்கும். ஆனால் அப்படி செய்யவில்லை.
திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த சிறிய பிரச்சினையிலிருந்து பாரியதொரு நடவடிக்கையை நோக்கிப் பயணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதற்காகவே பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி, கிறீஸ் மனிதர்கள் என மக்களால் பிடிக்கப்படும் பாதுகாப்பு தரப்பினரையும் காப்பாற்றி வருகின்றது.
இந்த பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அவர்களை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டும்.
இதனை நீடிக்க விடாது மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் நிலைநாட்ட வேண்டும்.
அதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயர் தெரிவித்துள்ளார்.
*****************

தமிழரின் பொருளாதாரத்தை சிதைக்க முயலும் சிங்களம்
வெளிநாட்டு துரித பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைமா அதிபர் நிகால் இலங்ககோன் உத்தரவிட்டுள்ளதாக கொழும்புப் பத்திரிக்ககை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் தமது உறவினர்களுக்கு குறித்த சட்டத்திற்கு மாறான நிலையங்களின் ஊடாக பணம் அனுப்புவதை தடுக்கவே சிறிலங்கா அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் சுமார் 700 தனியார் பணப்பரிமாற்று முகவர் நிலையங்கள் செயற்படுவதாக சிறிலங்கா காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை, புத்தளம், கறுவாத்தோட்டம், நீர்கொழும்பு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, வவுனியா, காத்தான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இவை அதிகமாக இயங்குவதாகவும் நிகால் இலங்கக்கோன் கூறியுள்ளார்.
இந்த முகவர் நிலையங்கள் ஊடாகவே கனடா, ஜேர்மனி இந்தியா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர்கள் தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
சட்டவிரோதமாக செயற்படும் இத்தகைய முகவர் நிலையங்களை மூடுவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படும் நிதியை ஒழுங்குபடுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்தவாரம் புறக்கோட்டை 2ம் குறுக்குத்தெருவில் இயங்கி வந்த முகவர் நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட சிறிலங்கா காவல்துறையினர் அங்கிருந்து 84 இலட்சம் ரூபா பணத்தை கைப்பற்றியதுடன் அந்த வர்த்தக நிலையத்தையும் முத்திரையிட்டு மூடியுள்ளனர்.
*****************

தமிழரின் காணிகளை பறிக்க திட்டமிடும் ஸ்ரீலங்கா
வடபகுதியிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்களாக பேணப்பட வேண்டிய பிரதேசங்களில் காணப்படும் தனியார் காணிகளை இவ்வாறு அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான முறையில் இந்தக் காணிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனால் உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
உயர் பாதுகாப்பு வலயங்களில் அமைந்துள்ள தனியார் காணிகளை அரசாங்கம் பறிமுதல் செய்து கொண்டு அதற்கு மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி, வலிகாமம் மற்றும் தென்மராட்சி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு தனியார் காணிகளை சுவீகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் தமது காணிகளை ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*****************

ஸ்ரீலங்காவை காப்பாற்ற முற்படும் நாடுகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.
தமிழ் புலம்பெயர் சமூகமும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.
இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமர்வுகளில் குற்றம் சுமத்த சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************

தமிழரை அடக்க புதிய சட்டம் உருவாக்கும் சிங்கள இனவாதம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடாக தாய்நாட்டை பாதுகாக்கும் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உள்ளடக்கிய வகையில் புதிய பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
தாய்நாட்டை பாதுகாக்கும் சட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் வலுவிழக்கும்.
இலங்கையின் சகல இன மக்களையும் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத் தடை மற்றும் பிரிவினைவாதத்தை தடக்கும் சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டியது அவசியமானது என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதனால் தாய்நாட்டை பாதுகாக்கும் புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தமிழர்களை அடக்கும் சட்டமாகவே அமைய வேண்டும் என்பது சிங்கள அரசின் எண்ணமாக உள்ளது என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*****************

பொறுப்பை கொடுத்து வெறுப்பை சம்பாதிக்கும் ஐநா
ஐநா சபையின் அபிவிருத்தித்திட்டமிடல் உரிமைகள் குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பின் விசேட அதிகாரியாக இலங்கையின் ஜெனீவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக செயற்பட்டுவரும் தாமரா குணநாயகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை அணிசேரா நாடுகள் அமைப்பு அவரருக்கு வழங்கியுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தக்குழு, அரசாங்கங்களின் நடவடிக்கைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் உட்பட்ட பொருளாதார திட்டங்களை கண்காணிக்கும் கடமைகளை கொண்டுள்ளது.
இதன்படி தாமரா குணநாயகம், அரச அரசசார்பற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான இறுதி அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்பிக்கும் கடமையை கொண்டுள்ளார் என அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாவதன் முன்னர், அது தொடர்பாக முன் கூட்டியே அனுமானித்து கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபையினால் அண்மையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை நவம்பர் மாதம் 15ம் திகதியே கையளிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பாக விமர்சிப்பது இலங்கை அரசாங்கத்தின் இறைமையை பாதிக்கும் செயல் எனவும் ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
*****************

மன்னிப்புச் சபையின் அறிக்கையால் ஆடிப்போன ஸ்ரீலங்கா
இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ள கருத்துக்கள், நாட்டின இறைமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் விடயத்தில் தலையிடுவது மாத்திரமன்றி அது இறைமைக்கு அச்சுறுத்தலான கருத்துமாகும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையை தவிர வேறு நடவடிக்கை இல்லை என்று கடந்த புதன்கிழமையன்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்திருந்தது.
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே தமது 69 பக்க அறிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் போர்குற்றவிடயம் ஜெனீவா அமர்வில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மன்னிப்பு சபையின் குற்றச்சாட்டின்படி இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் உள்ளக விசாரணையிலும் தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****************

தமிழ் மீனவர்களை சுரண்டும் இனவாத கும்பல்கள்
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 8ஆயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் மீன்பிடி தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோதும் தீர்வுகள் கிடைக்கவில்லை என மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றார்கள்.
இந்தப் பிரச்சினைகளை தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்புடன் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் மீன்பிடிப்பதற்கு மீண்டும் பாஸ்நடைமுறை வந்துள்ளது.
இதனால் மன்னார் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது முன்னரைவிட அதிகரித்துள்ளது.
இதனால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பெரும் சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பாஸ் நடைமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி மன்னார் கடற்பரப்பில் பிரவேசித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதனாலும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கஸ்டங்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு பிரதேச இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் சுட்டிக்காட்டினார்.
*****************

ஸ்ரீலங்கா இனவழிப்பு படையின் எல்லை தாண்டிய சர்வதேச காமக்களியாட்டம்
ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த சிறிலங்காப் படையினர் சிறார்களைக் கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹெய்டி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தி நியூ அமெரிக்கன் இணையத்தளத்துக்கு ஹெய்டி சட்டவாளர்கள் தலைமைத்துவ தகவல் வலையமைப்பு தகவல் வெளியிடுகையில், சிறிலங்கா படையினரால் ஏழு வயது சிறுமிகள் கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது.
2007ம் ஆண்டில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட 114 சிறிலங்கா படையினர் தண்டிக்கப்படவில்லை என்றும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
சிறிலங்கா படையினர் ஹெட்டிய பெண்களையும், பெண்பிள்ளைகளையும், 7 வயதான சில சிறுமிகளையும் கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக ஹெய்டி சட்டவாளர்கள் தலைமைத்துவ வலையமைப்பின் தலைவர் எசிலி டன்ரோ குற்றம்சாட்டியுள்ளார்.
டசின் கணக்கான தமது படையினர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் தப்பி விட்டதாகவும் தி நியூ அமெரிக்கன் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
*****************