Wednesday 14 September 2011

செய்திகள் 14/09


உரிமை இழந்த நிலை குறித்து விபரிப்பு
யாழ்ப்பாணத்தில் இருக்கும் தாம் மக்களின் உரிமைக்காக அவர்களின் நலன்களுக்காக எதுவும் செய்ய முடியாமல் வாய் திறக்க முடியாத நிலையில், ஜனநாயக ரீதியில் இங்கு எவரும் பேசமுடியாத நிலையே உள்ளது என்று யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக்கிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த பிளேக் மதியமளவில் அரச சார்பற்ற இணையங்களின் அலுவலகத்துக்கு விஜயம் செய்தார்.
அதன்போதே இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலைமை தமிழர்களின் நிலை குறித்து அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை இலங்கை அரசு செயற்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் பலர் இங்கு வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றார்கள். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மற்றும் மீளக்குடியமர்ந்த மக்கள் உரிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
தற்போது யாழ். குடாநாட்டில் கிறீஸ் பூதம் என்ற அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்தாலும் மக்களை உள ரீதியாக அச்சுறுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் கேட்பது தனி இனமாக கலாசார, பண்பாடுகளுடன் மொழியையும் பாதுகாத்து வாழ விடுங்கள் என்பதேயாகும் எனவும் இந்தச் சந்திப்பின் போது அவரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த பிளேக் தான் இங்குள்ள மக்களிடம் சில கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் கருத்துக்களை கவனத்தில் எடுப்பதுடன் உரிய மட்டங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
********************

ஐநா நடவடிக்கை குறித்து மீளாய்வு
இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீமூன் நியமித்துள்ளார்.
ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது.
பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறியமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் போரின் போது ஐ.நா. நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்திருந்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு முன்னகர்த்திய கையோடு இந்த நியமனத்தையும் பான் கீமூன் வழங்கி உள்ளார்.
ஓபெய்ட் தனது பணிகளை விரைவில் ஆரம்பிப்பார் என்று ஐ.நா. அறிவித்தள்ளது
********************

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கண்டனம்
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அரசு விடுத்த அறிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இனங்களுக்கு இடையே நம்பிக்கையையும் நட்புறவையும் கட்டி எழுப்பும் வகையிலான நல்லிணக்க அணுகுமுறையை இலங்கை அரசு அழுத்தமாகக் கடைப்பிடிக்கிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் ஆற்றிய உரையை எதிர்த்துள்ள கூட்டமைப்பு, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அனுபவங்கள் அமைச்சரின் கூற்றுக்குச் சற்றும் பொருந்தாது என்றும் கூறி உள்ளது.
நாட்டின் நிலவரத்தை அனைத்துலக சமூகத்துக்குத் தெரியப்படுத்தும்போது அரசு மிக நேர்மையாகவும் பொய்யற்ற வகையிலும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, போர் முடிந்ததன் பின்னர் இலங்கையில் தமிழர்கள் எப்படி மேலும் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற விவரங்களை விலாவாரியாகச் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக அரசுத் தலைவர் நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, வழங்கிய இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைக்கூட இதுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று கூட்டமைப்பு அறிக்கையில் குற்றஞ்சாட்டி உள்ளது.
தனது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இலங்கை அரசு நடைமுறைப்படுத்தத் தவறி இருப்பதானது, பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்காக நேர்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த, சுயாதீனம் வாய்ந்த பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்பதாக கூட்டமைப்புக் கூறி உள்ளது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க நல்லிணக்கம் பற்றி ஜெனீவாவில் உரையாற்றியபோதும், போரின் பின்னர் கூட தமிழ் மக்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இடம்பெயர்ந்த 2 லட்சம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுப்பது, விவசாய மற்றும் தனியார் நிலங்களை இராணுவமும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் பலவந்தமாகப் பறிப்பது, எந்தப் பகிரங்க அறிவித்தல்களும் இன்றி வடக்கு கிழக்கில் உள்ள அரச நிலங்களை பெரும்பான்மையினருக்குப் பகிர்ந்தளிப்பது, இனப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது, இந்து கிறிஸ்தவ கலாசாரப் பாரம்பரியங்களை இழிவுபடுத்தி அவற்றை பெரும்பான்மையின அடையாளங்களுக்கு உரியதாக்குவது, எதிர்க் கட்சிகள் மீது நன்கு திட்டமிட்ட ரீதியல் வன்முறைகளைப் பயன்படுத்துவது, வடக்கு கிழக்கில் பொதுமக்களின் ஜனநாயக உரிமையான ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரச படையினரைப் பயன்படுத்தி தடுப்பது, சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் ஓர் ஆயுதமாகப் பெண்கள் மீதான வன்முறைகளை மேற்கொள்வது போன்றவற்றை தமிழ் மக்கள் மீதான அண்மைக்கால வன்முறைகளாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சர்வதேச சமூகத்திடம், இனநல்லிணக்கத்துக்காக அரசு உழைத்து வருவதாகக் கூறுவது முழுப் பொய் எனக்கூறும் அறிக்கை, பல்லின, பல மத, பல்கலாசார இலங்கையைக் கட்டி எழுப்புவதற்கு தனக்குள்ள அர்ப்பணிப்பைக் கூட்டமைப்பு வெளிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் அரசுடன் பேசுவதே இதில் தமது பங்கு என்றும் கூட்டமைப்புக் கூறி உள்ளது.
********************

சர்வதேச நெருக்கடிக் குழு கண்டனம்
போர் நிறைவடைந்து இரண்டு வருடங்களாகியும் இலங்கையில் இன்னும் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்படாமை குறித்து சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.
போரின் பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லெணத்தை ஏற்படுத்தி சமாதானத்தை கொண்டு வரும் சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் இழந்து வருவதாக அந்தக்குழு நேற்று 13 ஆம் திகதி வெளியிட்ட தமது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைத்த, அரசியல் இணக்கம், அதிகாரப்பரவாலாக்கம், இராணுவ பரம்பலை கட்டுப்படுத்தல், அரச அதிகாரிகள் மீது இராணுவத்தினரின் ஆதிக்கத்தை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
எனவே இலங்கையில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.
அவசரகால தடை சட்டம், பயங்கரவாத தடை சட்டம், இராணுவமயம், இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்தல் , சிறுபான்மையினர் மத்தியில் அதிகாரப்பரவலாக்கம், முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
அரசாங்கம் இவை தொடர்பில் சர்வதேசத்துக்கு ஒன்றை கூறுகிறது.
எனினும் களத்தில் மாறுபட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே உண்மை நிலைமையை உலகுக்கு எடுத்துக்காட்ட, காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொளளும் சர்வதேச குழுக்கள், சட்டவிரோத கொலைகள், பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறைகளை தொடர்பில் விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் அதிகாரி, போன்றவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
********************

தமிழர் விவகாரம் தொடர்பில் ஜே.பிக்குள் கருத்து முரண்பாடு
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு விரைவில் இரகசியப் பேச்சுகள் கட்சி உறுப்பினர்கள் மட்டத்தில் நடத்தப்படவுள்ளன என்று மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கிறீஸ் மனிதன் விவகாரம் உள்ளிட்ட தமிழர் விடயங்களை முன்னிலைப்படுத்திவரும் மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றம் வரை குரல் எழுப்பியது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்நிறுத்தி கொழும்பு உட்படப் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களையும் மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தது.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்குப் பகுதியிலும் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் கட்சி தோல்வியையே சந்தித்தது.
இந்த நிலையில், தமிழ் மக்களின் விவகாரத்தில் அதிக அக்கறை செலுத்தவேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் சில உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் ஏற்பட்ட தோல்வியை அந்த உறுப்பினர்கள் உதாரணமாக முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியும் குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சியின் சில உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளமை வெளிவந்திருக்கிறது.
********************

இந்தியா மௌம்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமுன்தினம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இந்த விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெனிவாவிலோ அல்லது புதுடெல்லியிலோ இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு ஐ.நாவில் விவாதத்துக்கு வரும் போது வெளியிடப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவின் தற்போதைய நகர்வுகள் சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்கின்ற நிலையில்- இந்தியா மௌளனமாக இருப்பது சிறிலங்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நிபுணர்குழு அறிக்கையை சிறிலங்காவுக்கு எதிராகப் பயன்படுத்த ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயன்றால் அதனை எதிர்ப்பதற்கான அணியொன்றை சிறிலங்கா உருவாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சீனா, ரஸ்யா, மாலைதீவு, மலேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் 57 மத்திய கிழக்கு நாடுகளும் சிறிலங்காவுக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.
********************

ஸ்ரீலங்காவின் மன்றாட்டம்
சிறிலங்கா விவகாரத்தில் பாரபட்சமில்லாத கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழு மன்றாடியுள்ளது.
ஜெனிவாவில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை கடுமையாகச் சாடிய சிறிலங்கா அரசின் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அவருடன் சூடான வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நிபுணர் குழு அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான ஆயுதம் இப்போது நவநீதம்பிள்ளையின் கைக்கு மாறியுள்ளது.
இதையடுத்து ஜெனிவா கூட்டத்தொடருக்காக சிறிலங்கா அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட உயர்நிலைக்குழு நேற்று நவநீதம்பிள்ளை சந்தித்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்றும் ஏனைய நாடுகளைப் போன்றே தம்மையும் சமமாக நடத்துமாறும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்தச் சந்திப்பின் போது நவநீதம்பிள்ளையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்தது குறித்தும், அந்த விவகாரத்தை தாம் மூன்றாவது தரப்பின் ஊடாகவே அறிய நேரிட்டது குறித்தும் மகிந்த சமரசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அமைச்சர்கள் அனுர பிரியதர்சன யாப்பா, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தாமரா குணநாயகம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
********************

மன்னாரில் பேரணி
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களை அங்கு மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி நேற்றைய தினம் மன்னாரில் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.
மன்னார் ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்கள் ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
இந்தப் பேரணி, மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆரம்பித்து மன்னார் அரச செயலகத்துக்கு சென்று, அரசுத் தலைவருக்கு எழுதப்பட்ட மகஜர் ஒன்றை அரச அதிபரிடம் கையளித்ததுடன் முடிவடைந்தது.
முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 300 குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் மிகுந்த இடர்பாடுகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர்.
தொழில்வாய்ப்புக்களோ அல்லது அடிப்படை வசதிகளோ அற்ற நிலையில் தற்காலிக உறைவிடங்களிலேயே இவர்கள் தங்கியிருக்கின்றார்கள்.
********************

மீளப் பெறப்படும் தூதுவர்
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடுத்து சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், சிறிலங்கா அரசினால் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார் என்று சுவிஸ் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் 57வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பொதுமக்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
அத்துடன் இவர் போராளிகள் மீதான சித்திரவதை, நீதிக்குப் புறம்பான படுகொலைகளிலும் தொடர்புபட்டிருந்ததாக, அரசியலமைப்பு மற்றும் மனிதஉரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தின் அறிக்கை ஒன்றிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இந்தவிவவாரம் தொடர்பாக சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு சிறிலங்கா அதிகாரிகளுடன் கடந்தமாதம் தொடர்பு கொண்டு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்கா அரசினால் பெர்லினில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்ததாக சுவிஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அதேவேளை, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் நிராகரித்துள்ளதாக ஏசியன் ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு வினவிய போதே இந்தச் செய்தி பொய்யானது என்று அவர் கூறியதாக ஏசியன் ரிபியூன் செயதி வெளியிட்டுள்ளது.
இராஜதந்திர சேவையில் இல்லாத இராஜதந்திரிகளுக்கு இரண்டு ஆண்டுகளே வெளிநாடுகளில் சேவையாற்ற வாய்ப்பளிக்கபடும் என்றும், மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைந்த பின்னர் இராணுவ சேவையில் இணைந்து கொள்வார் என்றும் ஏசியன் ரிபியூன் தகவல் வெளியிட்டுள்ளது.
இராஜதந்திர சேவையில் இல்லாத இராஜதந்திரிகள் இரண்டு ஆண்டுகளின் பின்னர் மேலும் ஒரு ஆண்டு சிறிலங்கா அதிபரின் ஆணையில் சேவை நீடிப்பைப் பெற முடியும்.
ஆனால் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளால், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம் என்பதாலேயே அவருக்கு சிறிலங்கா அதிபர் சேவை நீடிப்பு வழங்கவில்லை என்றும், இராணுவ சேவைக்கு அவரைத் திருப்பியழைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
********************