Friday 9 September 2011

செய்திகள் 09/09


விசேட அறிக்கை தாக்கல் செய்ய சர்வதேச மன்னிப்புச் சபை தயார்.
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின்போது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு எதிரான விசேட அறிக்கையொன்றைத் தாக்கல் செய்வதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுகளை சமாளிப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தலாமெனக் கருதப்படுவதால் மன்னிப்புச்சபை இந்த விசேட அறிக்கையைத் தயார் செய்து வருகிறது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இறுதிப்போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆராயப்படவில்லையென்று குறிப்பிட்டு தனது அறிக்கையைத் தயார் செய்துவரும் மன்னிப்புச்சபை இது தொடர்பில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களிடம் கருத்தறியும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அரசுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டும் பேச்சுகளில் இலங்கைத் தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
*****************

றொபேட் ஓ பிளேக் ஸ்ரீலங்காவுக்கு பயணம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலேயே இந்தப் பயணத்திட்டம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் நாள் தொடக்கம் 16ம் நாள் வரை சிறிலங்கா மற்றும் இந்தியாவில் பிளேக் பயணம் மேற்கொள்வார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அரசாங்க அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்தமாதம் 29ம் நாள் சிறிலங்கா செல்லவிருந்த பிளேக், ஐரின் சூறாவளியால் தனது பயணத்திட்டத்தைப் பிற்போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
*****************

தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் ஆய்வு
சட்ட நடவடிக்கை எடுக்காது நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
எவ்வித நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்காது மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு ஆய்வு நடத்த உள்ளது.
சில கைதிகள் பத்து ஆண்டுகளுக்கு அதிகமான காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான நபர்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*****************

கிறிஸ் மனிதனுக்கு அஞ்சும் அரசு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நேற்று நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட யாழ்.நாவாந்துறை கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ரத்துச் செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தார்.
அவர் பிரேரணையை வாசிக்கத் தொடங்கியதும் திடீரெனக் குறுக்கீடு செய்த அரசின் பிரதம கொறடா தினேஷ் குணவர்த்தன நாவாந்துறை மர்ம மனிதன் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இந்தப் பிரேரணையை இங்கு கொண்டு வரமுடியாது என்று கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்தப் பிரேரணை நன்கு ஆராயப்பட்டே விவாதிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இது கொண்டு வரப்படவில்லை.
ஆகவே, இதை விவாதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.
தகவல்கள் அனைத்தும் உடனே கிடைப்பதில்லை. இப்போதுதான் இந்தப் பிரேரணை பற்றிய தகவல்கள் கிடைத்தன.
இதனால் இந்தப் பிரேரணையை விவாதத்திற்கு விட முடியாது என்று தாம் தீர்மானம் எடுத்துள்ளோம் என்று தினேஷ் குணவர்த்தன மீண்டும் கூறினார்.
தினேஷின் இந்தக் கூற்றுக்கு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
கிறீஸ் மனிதனுக்குப் பயந்தே அரசு இந்தப் பிரேரணையை எதிர்க்கின்றது என்று கூறினர்.
அதற்கு ஐக்கிய தேசியக்கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பயந்து இந்தப் பிரேரணையை ஆதரிக்கின்றது என்று அரச அமைச்சர்கள் கூறினர்.
இந்தப் பிரேரேணை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் இதை விவாதிப்பதற்கு அனுமதி வழங்கமுடியாது என்று அப்போது சபைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவரான ஈபிடிபி முருகேசு சந்திரகுமார் தீர்ப்பளித்தார்.
இதனால் இந்தப் பிரேரணை ரத்தானது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.
*****************

ரணிலின் நிலை என்ன?
18 ஆவது திருத்தத்திற்கு பதிலாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதியதொரு சட்டத்திருத்தத்தை கொண்டுவர பூரண ஒத்துழைப்பை வழங்க எதிர்க்கட்சிகள் தயாராயிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
17 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியிருந்தால் இன்று அரசு ஜெனிவாவுக்கு ஓடவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவை விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணையை எதிர்த்து உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஒருவருக்காக சட்டத்தரணி ஆஜராக முடியாதென நீதி அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்குகளில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருக்கின்றனர்.
ஒருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவருக்காக சட்டத்தரணி ஆஜராகலாம் இது சர்வதேச சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் காவல்துறையினரின் அதிகாரம் இன்று இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணிநேரம் தடுத்து வைத்திருக்கலாம் அதற்கான அதிகாரம் உதவி காவல்துறை அத்தியட்சரிடம் உள்ளது.
எனினும் அது இப்போது இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டநாள் தேசிய துக்க தினமாகும்.
அதேபோல் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவை விஷேட செயற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட இந்த நாளும் தேசிய துக்க தினமாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
*****************

ஈரானுடன் நட்புறவு பாலம்
ஈரான் இஸ்லாமியக் குடியரசிலிருந்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.
இஸ்லாமியத் தத்துவவியல், சமூகவியல், பொருளியல் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
இவர்கள் ஒரு வாரகாலம் இலங்கையில் தங்கியிருப்பர்.
இந்தக் காலப் பகுதியில் களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த பீடத்துக்கு விஜயம் செய்து பௌத்த சமயத் தலைவர்களைச் சந்தித்து இரு சமயங்களுக்கிடையிலான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவர்.
கொழும்பில் கிறிஸ்தவ சமயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரு சமயங்களுக்குமிடையிலான பொதுவான புரிந்துணர்வுகள் எனும் தலைப்பில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஈரான் தூதுக்குழு கிழக்கிலங்கையில் விரிவான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளும்.
தென் கிழக்குப் பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி உட்பட கிழக்கிலங்கையின் பல அரபுக் கல்லூரிகளுக்கும் இந்தக் குழு விஜயம் செய்யும்.
மட்டக்களப்பு நகரில் இந்தக் குழுவினர் இந்து மதத் தலைவர்களையும் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்வர்.
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பிரதிநிதிகளையும் இக்குழுவினர் சந்தித்து விரிவான கருத்துப் பரிமாறல்களில் ஈடுபடுவர்.
கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசு தூதரகத்தின் கலாசாரப் பிரிவு இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
*****************

ஸ்ரீலங்காவில் துருக்கியின் போர்க் கப்பல்
நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கியின் கடற்படைப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நான்கு நாள் பயணமாக சென்றுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
துருக்கிக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஏற்பட்டு 104 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் முதல்முறையாக அந்த நாட்டுப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுணசூரிய தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி லிபியாவில் மேற்கொள்ளப்படும் நேட்டோ படை நடவடிக்கையிலும் பங்கேற்கிறது.
இந்தநிலையில் துருக்கியக் கடற்படையின் ஜெம்லிக் என்ற போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளது குறித்து சிறிலங்கா கடற்படை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
இந்தப் போர்க்கப்பலில் 151 வது கூட்டு அதிரடிப் படையின் தளபதி றியர் அடிமிரல் சினான் எருக்ருல் மற்றும், 30 அதிகாரிகளும் 241 கடற்படையினரும் கொழும்பு சென்றுள்ளனர்.
*****************