Friday 2 September 2011

செய்திகள் 02/09


பொய்யுரைக்கும் குழு தயார்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழு எதிர்வரும் 8ம் திகதி ஜெனீவா நோக்கி செல்லவுள்ளது.
நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்த சமரசிங்க ஆகிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் குறித்த குழுவில் அடங்குகின்றனர்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{ம் ஜெனீவா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 18வது அமர்வு எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் 30ம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி இக்கூட்டத்தொடரில் விசேட உரையாற்றவுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
****************

விசாரிக்குமா சர்வதேசம்?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மீதான சபை அமர்வின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்டமான விவாதம் இடம்பெறவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட நாடுகள் நேற்றைய தினம் இராஜதந்திர ரீதியிலான வலியுறுத்தல்களை மீண்டும் விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் மீதான சபைக் கூட்டத்தில் விசேட அறிக்கையயான்றை சமர்ப்பிப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதேசமயம், ஐ.நா. விசாரணை அறிக்கையையும் மனித உரிமைகள் மீதான விவாதத்தில் அத்தாட்சியாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்று இந்த நாடுகள் அழுத்தத்தை வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.
****************

அடக்கி வாசிக்க விரும்பும் ஸ்ரீலங்கா!
அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்கா வான்பரப்பில் ஊடுருவியது பற்றிய செய்திகளை வெளியிட சிறிலங்கா விமானப்படைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தக் கருத்தையும் வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா வான்பரப்பில் பத்து அமெரிக்கப் போர் விமானங்கள் கடந்தமாதம் 2ம் நாள் ஊடுருவிய செய்தியை சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய உறுதி செய்திருந்தார்.
ஆனால் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும், சிறிலங்காவின் குடியியல் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரட்ணவும் அத்தகைய ஊடுருவல் ஏதும் நிகழவில்லை என்று கூறியிருந்தனர்.
இந்தநிலையிலேயே, இந்த ஊடுருவல் பற்றி எந்தக் கருத்தையும் வெளிடக் கூடாது என்று கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
இதற்கிடையே சிறிலங்கா விமானப்படைக்கு கொள்வனவு செய்யப்படும் புதிய விமானங்கள் மற்றும் கருவிகள் தொடர்பான தகவல்களை வெளியிடவும் கோத்தாபய ராஜபக்ச தடை விதித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படைக்கு ரஸ்யாவிடம் இருந்து 14 எம்.ஐ 171 உலங்குவானூர்திகள் வாங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
போர் முடிவுக்கு வந்த பின்னர், அதிகளவு உலங்கு வானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்வது குறித்து பலத்த விமர்சனங்கள் உருவாகியிருந்தன.
இந்தநிலையில் ரஸ்யாவிடம் 14 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கு இன்னமும் உடன்பாடு செய்து கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படைத் தளபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************

விமான நிலைய விஸ்த்தரிப்பின் நோக்கம் என்ன?
பலாலி விமானநிலையத்தை விஸ்தரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்திய அரசின் முழுமையான பங்களிப்பின் கீழ் நடைபெறும் இவ்வேலைத்திட்டத்திற்குப் பகுதியளவு பணம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் விரைவில் மேலும் ஒரு தொகை நிதியை இலங்கை அரசிடம் இந்தியா கையளிக்கவுள்ளது.
பலாலி விமானநிலையத்தில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தபின்னர் விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க அரசு எதிர்பார்த்துள்ளது.
பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வெளியான தகவல்கள் தொடர்பாக யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கேட்டபோது, நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ளது.
அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதாகவும் நாட்டின் அபிவிருத்தி கருதியே விமானநிலையம் விஸ்தரிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
****************

தடுத்து வைக்கப்பட்டோர் விடுவிக்கப்படுவார்களா?
இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் ஊடகவியாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்ஷ்வின் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்துக்கும் அவர் வரவேற்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டமையானது இலங்கை வாழ் மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை சிறப்புற உணர்ந்து கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை முன்வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
****************

அதிகரிக்கும் பாதுகாப்புச் செலவினம்! அவசியம் என்ன?
சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம் அடுத்த ஆண்டு 1300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சிறிலங்கா நிதிஅமைச்சு மதீப்பிடு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு பாதுகாப்புச் செலவினத்துக்காக 21ஆயிரம் கோடி ரூபாவை சிறிலங்கா அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்திருந்தது.
ஆனால் 2012ம் ஆண்டு இந்தத் தொகை 22ஆயிரத்து 300 கோடி ரூபாவாக அதிகரிக்கும் என்று சிறிலங்காவின் நிதியமைச்சு மதிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு 21ஆயிரத்து 700 கோடி ரூபா மீண்டெழும் செலவினங்கள் ஏற்படும் என்றும், முதலீட்டுச் செலவினங்களுக்கு 600 கோடி ரூபா தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக புதிய தொழில்நுட்பக் கருவிகளைக் கொள்வனவு செய்வதற்கும், முப்படைகளினதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் , வடக்கு, கிழக்கில் புதிய காவல்நிலையங்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு 600 கோடி ரூபா மூலதனச் செலவின ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்றும் சிறிலங்கா நிதி அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போர் முடிவுக்கு வந்தால் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் அதிகளவு நிதியை அபிவிருத்திக்கான ஒதுக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் முன்னர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
****************

புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்?
சிறிலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்துலகத் தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தில், வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை சிறிலங்கா அரசு புறக்கணித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
இந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் அதற்கு போதிய வரவேற்புக் கிடைக்கவில்லை.
இதற்கு சிறிலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதியீனமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிறிலங்காவில் உள்ள 6 பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க 600 மில்லியன் ரூபா செலவிலான திட்டம் ஒன்றை உயர்கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இதன்படி கொழும்பு, பேராதனை, மொறட்டுவ, றுகுணு, களனி மற்றும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களுக்கு தலா 100 மில்லயின ரூபா ஒதுக்கப்பட்டு பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக நேற்று இநதப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள பல்கலைக்கழங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களே இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தப் பல்கலைக்கழகங்களை அனைத்துலக தரத்துக்கு உயர்த்துகின்ற வாய்ப்பு பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.
****************