Monday 12 September 2011

செய்திகள் 12/09


கொழும்பு சென்றார் றொபேர்ட் ஓ பிளேக்
ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், இன்று இலங்கை சென்றுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவிருக்கும் இவர், பல்கலைக்கழக மாணவர்களையும் சந்திக்கவுள்ளார்.
பிளேக், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலும் கவனம் செலுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது என அரச தகவலறிந்த வட்டாரங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனையும் ரொபேர்ட் ஓ பிளேக் சந்தித்து கலந்துரையாடுவார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் திகதி திட்டமிடப்பட்டிருந்த ரொபேர்ட் ஓ பிளேக்கின் விஜயம் ஐரின் சூறாவளியை அடுத்து செப்டெம்பர் 12 திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
********************

எவரின் அழுத்தத்திற்கு அடிபணியப் போவதில்லை - நல்லிணக்க ஆணைக்குழு
அமெரிக்கா அல்ல எவருடைய அழுத்தம் வந்தாலும் அவசரப்பட்டு தாம் அறிக்கை வெளியிடப்போவதில்லை. தமது நிலைப்பாட்டில் இறுதிவரை உறுதியாக இருப்போம் என நல்லிணக்க ஆணைக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை சென்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகப் பல்வேறு தரப்பினருடனும் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்நிலையில், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு அழுத்தம் வந்தால் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனக் கேட்டபோதே ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தாம் அறிக்கையை வெளியிட உத்தேசித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
சற்றுத் தாமதமானாலும் அதற்கு முன்னர் வெளியிடமாட்டோம். தமது நிலைப்பாட்டில் தாம் சற்றேனும் தளராது இறுதிவரை செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா அல்ல. யார் அழுத்தம் கொடுத்தாலும் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் தாம் அறிக்கை வெளியிட மாட்டோம். அதற்கான நேரமும் தமக்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதை ஸ்ரீலங்காவுக்குச் சென்ற றொபேட் ஓ பிளேக் அறிவாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அவதானிகள், இது தொடர்பில் பேச்சு நடத்துவதே அவரின் விஜயத்தின் முக்கிய நோக்கம் என முன்னர் அறிக்கை வெளியிடப்பட்டதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
********************

அறிக்கைக்கு பின்னரே நிலைப்பாடு - ததேகூ
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியான பின்னரே அந்த அறிக்கை தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
எனவே, ரொபேர்ட் ஓ பிளேக்குடனான இன்றைய சந்திப்பின்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தாம் கலந்துரையாடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கு இன்று விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இரவு 7 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பேச்சில் கலந்துகொள்வர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோரின் கருத்துகளை அறிந்துகொள்ளும் பொருட்டே ரொபேர்ட் ஓ பிளேக்கின் இலங்கைப் பயணம் அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளருடன் தாம் இன்று பேச்சு நடத்துவோம் எனவும் அதற்கான அழைப்;பு தமக்கு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
முக்கிய பல விடயங்கள் குறித்து தாம் ஆராயத் தீர்மானித்துள்ளதாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகக் கலந்துரையாடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும். அதற்கு முன்னர் இது தொடர்பாகக் கருத்துக்கூற மாட்டோம் என்றும் சுமத்திரன் தெரிவித்துள்ளார்.
********************

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் கூட்டத்தொடர் எதையாவது சாதிக்குமா?
ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிரான முறைப்படியான தீர்மானம் எதுவும் கொண்டு வரப்படாது என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்ற தகவலை இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்றாலும், ஜெனிவாவுக்குச் சென்றுள்ள சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவினரை ஆறுதலாக இருக்கக் கூடாது என்றும், எதற்கும் எந்த நேரத்திலும் பதிலளிக்கத் தயாராக இருக்குமாறும் சிறிலங்கா அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான ஐந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த இராஜதந்திரிகள், அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது.
ஜெனிவா நேரப்படி இன்று காலை 10 மணியளவில், சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
********************

மனித உரிமை மேம்பட கனடா விலியுறுத்தல்
மனித உரிமைகள் அரசியல் உரிமைகள் நிலைப்பாட்டில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படாவிடில் அடுத்து இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் ஏனைய நாட்டின் தலைவர்களும் இவ்வாறான நிலைப்பாட்டினையே மேற்கொள்வார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர்களுடனான சந்திப்பு நிகழ்வொன்றின்போது கனடிய பல்கலாச்சார வானொலியின் ஊடகவியளாளர் ராகவன் பரஞ்சோதியின் கேள்விக்கு பதிலளித்த கனடியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரனை அவசியம் எனக்குறிப்பிட்ட அவர் இலங்கையில் ஐனநாயக உரிமைகள் மதிக்கப்பட்டு நம்பகத்தன்மையும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கும் கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
********************

நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவர்!
அவுஸ்திரேலியாவுக்கு செல்லமுற்பட்டு நேற்றையதினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 44 பேரும் 24 மணி நேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதன் பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.
மேலும், கடல் வழியாக நாட்டை விட்டு வெளிறே முயன்ற இந்த 44 பேருக்கு எதிராகவும் குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒருசிலர் போலி வாக்குறுதிகளை வழங்கி பணத்துக்காக இவ்வாறு ஆட்கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை தவிர்க்குமாறு அரசு வலியுறுத்தி வருவதுடன் அதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டீ.டபிள்யூ.ஏ.எஸ் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
********************

பயங்கரவாத சட்டத்தை நீக்க வேண்டும் - ம.ம.மு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்காது நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியாது என மலையக மக்கள் முன்னணி கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் அதற்கு நிகரான பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருப்பதாகவும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ. லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து இரண்டாண்டுகள் கடந்துள்ள நிலையில் அனைவரினதும் எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது.
முகாம்களிலும், சிறைகளிலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 800க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் மலைய பெருந்தோட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
********************

மாணவர்களை மூளைச் சலவை செய்யும் அரசு
மாணவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தலைமைத்துவ பயிற்சியின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களது மூளையினை சலவை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உயர்கல்வி அமைச்சு, தலைமைத்துவ பயிற்சியானது பரந்த சீர்திருத்தத்துக்கான முதற்கட்ட முயற்சி என தெரிவித்துள்ளது.
இவ்வருட கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு என இராணுவ முகாம்களில் மூன்று வார தலைமைத்துவ பயிற்சி உயர்கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தபட்ட போதும் மாணவர்கள் பின்பு தாமே ஆர்வம் கொண்டு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அவசர அறிவிப்புடன் கூடிய நடவடிக்கை புதிய தலைமுறையினரின் மூளையை சலவை செய்யும் ஒரு நடவடிக்கை என மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுடன் கலந்துரையாடப்படாமலும் விவாதிக்கபடாமலும் இவ்வாறனதொரு பயிற்சியின் அவசரத் தேவைப்பாடு அரசுக்கு தேவைப்பட்டுள்ளதனாலேயே இராணுவ பயிற்சியினை தலைமைத்துவ பயிற்சி என்ற பேரில் முன்னெடுத்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் சஞ்ஐPவ பண்டார தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த குற்றச்சாட்டையும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி.சுனில் ஜயந்த நவரட்ன மறுத்துள்ளார்.
அத்தோடு இந்த பயிற்சித் திட்டமானது பல்கலைக்கழக கல்வியில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்த கருத்தினை மாணவர் சார்பிலான ஒன்றிய தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அத்தோடு, பயிற்சி நெறியில் ஈடுபடும் மாணவர்கள் முகாம்களில் உடல் உள உலைச்சல்களுக்கு முகம்கொடுப்பதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
********************