Sunday 25 September 2011

செய்திகள் 25/09


கனேடிய முயற்சிக்கு நன்றி.
ஐ.நா. செயலாளர் நாயகம் திரு. பான் கி. மூனின் ஆணையின்பேரில் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திடம் மேல் நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பெற்றுள்ளது.
இதன்பாலான ஐ.நா.வின் முயற்சிகளை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ள அதேவேளையில் கடந்த சில தினங்களாக ஜெனீவாவிலும் கனடாவிலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அண்மையில் கனடா பிரதமர் திரு. ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்த இலங்கை தொடர்பான கொள்கை மாற்ற பேட்டியைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை கனடாவின் ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 19வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கொண்டுவருவதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.
இத் தீர்மானப்படி, எதிர்வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கையின் நல்லிணக்க ஆணையம் வெளியிடவுள்ள அறிக்கையையும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை எடுத்துள்ள, எடுக்கவுள்ள செயல்பாடுகளையும் சர்வதேச நாடுகள், சுயாதீன ரீதியில் உத்தியோகபூர்வமாக சம்பாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிப்பாடன இவ் நடவடிக்கை ஐ.நா. சபையின் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையை வலுப்படுத்தவதாக இருப்பதாகவும், ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலமே இலங்கை அரசாங்கம் மறைத்து வரும் மனித உரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட்டு ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அமைதியைப் பேண உதவும் எனவும் கனடிய தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றும் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகரும், கனடா சட்டவியலாளர் உரிமைகள் காப்பு நிறுவனத்தின் உறுப்பினருமான திரு. கேரி ஆனந்தசங்கரி, ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கருத்துத் தெரிவிக்கையில் கனடாவின் கொள்கை மாற்றத்தையும் , பிரதமர் திரு. ஸ்டீபன் ஹாப்பரின் வெளிப்பாடான கருத்துக்களையும் வரவேற்றுள்ளார்.
எனினும் புதன்கிழமை இலங்கை தொடர்பான தீர்மான முன்மொழியை கனடா உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் ஆணையத்தின் 18வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவில்லை.
கனடாவின் இத் திடீர் திருப்பம் பலரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இது தற்காலிகமானதா அல்லது ஒரு சாணக்கியத்தனமான அரசியல் நகர்வா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்டுகிறது.
*******************

மீண்டும் வலியுறுத்தும் பான் கீ மூன்?
சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு நம்பகமான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச்சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நியுயோர்க்கில் நேற்றையதினம் ஐ.நாவினது பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போதே போர்க்குற்றம் தொடர்பாக நம்பகமாக பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை சிறிலங்கா முன்னெடுக்க வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் கடந்த கால மோதல்களுக்குக் காரணமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்றும் அதிபர் மகிந்தராஜபக்சவிடம் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*******************

சவால் விடும் சவேந்திர சில்வா?
உலகின் எந்தவொரு நீதிமன்ற விசாரணையையும் சந்திக்கத் தயார் என போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
தமக்கும், தமது படையணியைச் சேர்ந்த படையினருக்கும் எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் ஆஜராகுமாறு சவேந்திர சில்வாவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட இருப்பிடத்திற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
21 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சவேந்திரா சில்வா பதிலளிக்க வேண்டுமென அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரினாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நியூயோர்க் விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷவிடம், சவேந்திரா சில்வா நேரடி ஆலோசனைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
*******************

ஸ்ரீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய தொலைக்காட்சியில்
சனல்4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற சிறீலங்காவின் கொலைக்களம் நோர்வேயின் தேசிய ஊடகமான Nசுமு2இல் எதிர்வரும் செவ்வாய் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
நோர்வே ஈழத்தமிழர் அவையின் நீண்ட முயற்சியின் பயனாக சிறீலங்கா பேரினவாத அரசால் தமிழ்மக்கள் மீது மேற்க்கொள்ளப்பட்ட கோரக்கொலைகளின் காட்சி பெட்டகம் நோர்வேயிலும் முதல் முறையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகவே நோர்வேயில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் நோர்வேஜிய நண்பர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் இச்செய்தியை பரிமாறி அதிகமான மக்கள் பார்ப்பதர்க்கு பரப்புரையை மேற்க்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எமது மக்கள் பட்ட துன்பதுயரங்கள் ஏக்கங்கள் வீண்போகாது அவர்களின் சுதந்திமான வாழ்வுக்காக சர்வதேசப்பரப்பில் போராடவேண்டிய பாரிய பங்கு எம்மிடமுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தார்மீகக்கடமையை அனைவரும் உணர்ந்து நாகரீக உலகத்தில் எமது உறவுகள் அநியாயமாக கொல்லப்பட்ட கொலைக்கள காட்சிகளை சர்வவேச சமுகத்தின் கண்களின் ஊடாக இதயத்தில் ஈரத்தை ஏற்படுத்த ஒன்றுபடுவோம் என இது தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைத்தளங்களில் பாடசாலைகளில் உங்களின் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் காலத்தின் தேவையுணர்ந்து கைகோர்த்து ஞாலத்தினை வெல்வோம் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
*******************

ஜே.வி.பியின் நிலை என்ன?
ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் ஜே.வி.பியின் பத்திரிகையான லங்கா பத்திரிகையும், அக்கட்சியின் ஊடகப்பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு விரிசல் அடைந்து வருகின்றது.
இதனால் சிலர் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என ஜே.வி.பி யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அவ்வாறு கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் விவகாரங்களுக்கு அதிகளவான முன்னுரிமை அளித்தல் மற்றும் கட்சியின் தலைமைத்துவம் என்பன தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜே.வி.பியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கீழ்மட்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கட்சியிலிருந்து புறம்பாகச் செயற்படத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
அதேவேளை, ஜே.வி.பியின் தற்போதைய தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதால் கட்சிக்குள் காணப்பட்ட பிரச்சினை பிளவாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை, ஜே.வி.பிக்குள் ஏற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு அரச தரப்பிலுள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கலாம் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார்.
அரசு, ஐக்கிய தேசியக்கட்சி, அமைச்சர் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட கட்சிகளின் முயற்சியாக ஜே.வி.பியைப் பிளவுபடுத்த நினைக்கும் என்றால் அது ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கட்சியிலிருந்து எவரையும் விலக்கவோ எவரும் விலகவோ இல்லை என்று கூறிய அவர், இன்னும் சில தினங்களில் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது கட்சி உறுப்பினர்கள் சுமுகமாகத் தமது கடமைகளைச் செய்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
*******************

தொடரும் காணிப்பதிவுகள்
அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி உரித்து பதிவுக்கான மண்ணின் மகிமை வேலைத் திட்டம் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாணக் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நில அளவைத் திணைக்களம், காணி நிர்ணய திணைக்களம், காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், பதிவாளர் நாயகத் திணைக்களம் என்பன இணைந்து மண்ணின் மகிமை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
நில அளவைத் திணைக்களத்தினால் இலவசமாக நில அளவை செய்யப்பட்டு காணியின் உரித்து நிர்ணயம் செய்யப்பட்டு காணிக்கான உரித்துச் சான்றிதழ் பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும்.
இதற்காக ஒவ்வொருவரும் தத்தமது காணிக்கான உரிமை கோரும் விண்ணப்பத்தை கிராம சேவையாளர்களிடமிருந்து இலவசமாக எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்காது பெற்றுக் கொள்ள முடியும்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இணையத்தில் தமது விண்ணப்பங்களைப் பெற்றுத் தமது பிரதேச செயலருக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.
அத்துடன் வெளிநாட்டிலுள்ளவர்கள் தமது உறவினர் மூலமாகவும் கிராம சேவையாளர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
இதற்கு உரித்துத் தத்துவம் தேவையில்லை.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் முன்னோடியாக ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலகம், கிளிநொச்சியில் கரைச்சி உதவி அரச அதிபர் பணிமனை, முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர் பணிமனை, மன்னாரில் முசலி பிரதேச செயலகம், வவுனியாவில் வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பணிமனை ஆகியவற்றிலேயே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் தமது விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை தவிர்ந்த வட மாகாணத்தின் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் நவம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
*******************

தமிழரை அடக்க புதிய சட்டம்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்று தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஈவா வணசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
*******************

தீர்வுக்கு சர்வதேச அழுத்தம் அவசியம் - பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
சர்வதேச அழுத்தங்களின்றி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் போவதில்லை என முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரும் யாழ். சிந்தனைக்கூடம் பணிப்பாளருமான பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்கான இறைமைக்கான போராட்டத்தை முப்பதாண்டுகள் அறவழியிலும் முப்பதாண்டுகள் ஆயுதம் தாங்கியும் நடத்தியுள்ளனர்.
இதுவரை எந்தவிதத் தீர்வையும் வந்தடையவில்லை. இதற்கு இம்மக்கள் வழங்கிய விலையோ மிக அதிகமாகும்.
1977ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டிலே ஈழத்தமிழர் தம் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் தான் தீர்வெனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இக்கோட்பாட்டையே முன்னெடுத்துச் சென்றனர்.
சில தினங்களுக்கு முன்பு ஐ.நா. மன்றத்திலே உரையாற்றிய அரசுத் தலைவர் இலங்கையின் இனப்பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை அதை நாமே தீர்த்துக்கொள்வோம் என்ற விதமாகப் பேசியிருந்தார்.
62 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் புரையோடிப் போயிருக்கின்ற இந்தப் பிரச்சினையை இவர் எப்படி தனித்துத்தீர்க்கப் போகின்றார் என்ற நியாயமான கேள்வி இதே இடத்திலே எழுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய சூழ்நிலையிலே சர்வதேசத் தலையீடின்றி இனப்பிரச்சினைக்கு நியாயமான, சுமுகமான, ஜனநாயக ரீதியிலான தீர்வு கிடைக்காதென்ற சரியான முடிவுக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள்.
சர்வதேச சமூகமும் இதைத் தெட்டத்தெளிவாக உணர்ந்தே இருக்கின்றது எனவும் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
*******************