Sunday 11 September 2011

செய்திகள் 10/09


கருத்தறியும் பான் கீ மூன் ஏதும் செய்வாரா?
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்தியாவின் கருத்தை அறிவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நடவ டிக்கை எடுத்திருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தான விவாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நாளை மறுதினம் ஆரம்பமாகும் கூட்டத் தொடரின் ஆரம்பநாள்களில் இலங்கை விவகாரத்தை மேற்குலகு எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
அவ்வாறான ஒரு நிலையில் இந்தியாவின் கருத்து என்னவென்று அறிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் முற்பட்டிருக்கிறார்.
இதனைக் கொழும்பிலுள்ள மூத்த இராஜதந்திரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
சில நாள்களுக்கு முன்னர் ஐ.நா.விலுள்ள இந்தியாவின் இராஜதந்திரிகளுடன் முக்கிய பேச்சுகளை நடத்திய பான் கீ மூன், சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வினவியிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் போர் நடந்த நேரத்தில் இலங்கையுடன் நெருங்கிச் செயற்பட்ட ஐ.நா. அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இந்தியாவின் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் விவாதம் நடக்கும் போது உத்தியோகபூர்வமாகத் தெரியவரும் என்று இந்தச் சந்திப்பில் இந்திய இராஜதந்திரிகள் பதிலளித்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது.
பான் கீ மூனுடன் நடத்திய பேச்சுகள் குறித்து இந்திய இராஜதந்திரிகள் புதுடில்லியிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
**********************

சந்திப்பு எதை நோக்கியது?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து உரையாடவுள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 12 ஆம் திகதி காலை 7.10 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி இராஜாங்க செயலாளருடன் சம்பந்தன் உரையாடவிருப்பதாக தெரியவருகிறது.
கடந்த மாத பிற்பகுதியில் வரவிருந்த பிளேக், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கண்டறிவதற்கு வருகை தரும் பிளேக் இலங்கையில் தாம் சந்திக்கவுள்ள நிகழ்ச்சிப்பட்டியலில் இரா.சம்பந்தனை சந்திப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமென தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பின் போது தமிழ் பேசும் மக்களின் பல்வேறு விடயங்கள் பற்றி சம்பந்தன் விரிவாக பேசவுள்ளதாக தெரியவருகிறது.
**********************

பதிலளிக்குமா அரசு? - ஜயலத்
ஐ.நா. மனித உரிமைகள் 18 ஆவது சபையின் கூட்டத்தொடரின்போது சர்வதேச சமூகம் தொடுக்கும் கேள்விக் கணைகளுக்கு இலங்கை அரசு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.
இல்லையேல், இலங்கை பெரும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் குறித்துக் கருத்து வெளியிடும்போதே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்குச் சென்றுள்ள இலங்கைக் குழுவிடம் சர்வதேச தரப்பினர் பல்வேறு கோணங்களில் கேள்விகளைத் தொடுப்பர்.
இதற்கு அவர்கள் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.
மாறாக மௌனம் காத்தால் பெரும் சர்வதேச அழுத்தம் ஏற்படும்.
இலங்கை தரப்பினர் தக்க பதிலளிப்பார்களா இல்லையா என்பது தொடர்பாக தான் கருத்துக் கூற விரும்பவில்லை என்று ஜெயலத் ஜெயவர்த்தனா தெரிவித்துள்ளார்.
**********************

உருக்குலைந்த சடலம் மீட்பு
வலிகாமம், கிழக்கு புத்தூர் பிரதேசத்தில் நேற்று மாலை ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னரே வீசப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
இவரது.சடலம் உருக்குலைந்திருந்த போதும் உடலில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் காணப்பட்டதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புத்தூர்- மீசாலை வீதிப்பகுதியில் புத்தூர் சந்தியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள விதவாணி பகுதியிலேயே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதனை அவதானித்த வீதியால் பயணித்த சிலர் அங்கு சென்று பார்த்த போதே சடலத்தினைக் கண்டுள்ளனர்.
மீட்டெடுக்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
**********************

விடுவிக்க மறுக்கும் ஸ்ரீலங்கா
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்பிலுள்ள சந்தேக நபர்களில் வழக்குத் தொடர முடியாதோரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், சந்தேகநபர்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் அவசரகாலச் சட்டத்தைத் தொடர்ந்து நீடித்து நாட்டை ஆளுகை செய்யும் எண்ணம் அரசுத் தலைவருக்கு இருக்கவில்லை.
அதனால்தான் அமுலிலிருந்த அவசரகாலச் சட்டத்தில் படிப்படியாக சில ஷரத்துக்களை நீக்கி இறுதியில் அச்சட்டத்தை முற்றாக நீக்கினார் எனத் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்பிலுள்ள சந்தேகநபர்கள் மீது வழக்குகள் தொடரப்படும்.
அவ்வாறு வழக்குத் தொடர முடியாதவர்கள் விடுவிக்கப்படுவர். ஆனால், அனைவரையும் விடுவிக்க முடியாது.
நாட்டின் பாதுகாப்புக்குக் களங்கத்தை ஏற்படுத்திய, மனித உயிர்களைக் காவுகொண்ட, சமூகத்துக்குச் சவாலாகச் செயற்பட்ட, பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் தடுப்பில் உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர சிலர் முயற்சித்து வருகின்றனர்.
அவ்வாறு அனைவரையும் விடுவிக்க முடியாது. வழக்குத் தொடர வேண்டியவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றார்
**********************

அடக்குமுறை சட்டத்தை எப்படியாவது அமுல் செய்ய விரும்பும் அடக்குமுறை அரசு
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கும் சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்படும் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றில் மீள சமர்ப்பிக்கப்படும்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களை விசாரணை செய்வதற்கு இந்த சட்டத் திருத்தம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் திருத்தச் சட்டக் கோவை தொடர்பான யோசனைத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இதனால் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தை பிரிதொரு தினத்தில் நடத்துவதென பிரதி சபாநாயகர் அறிவித்திருந்தார்.
எனினும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் சில திருத்தங்களை செய்து குறித்த சட்டக் கோவையை மீள நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அராசங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவடைந்த போதிலும், சில தீய சக்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கொலை முயற்சி, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், கொள்ளை, கப்பம் கோரல், கடத்தல், ஆயுத வன்முறைகள் உள்ளிட்ட 15 வகையான குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார
**********************

அஞ்சும் அரசு அச்சுறுத்துகின்றது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ் பூதங்கள் வடக்கு வாழ் தமிழ் பெண்களை பீதியடைச் செய்து வருவதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் லண்டனில் நிதி திரட்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்ததாகக் குறித்த பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
**********************

தொடரும் சிறுவர் துஸ்பிரயோகம்
இலங்கையில் காப்பகங்களில் இருக்கும் சிறார்கள் பெருமளவில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதாகவும் அதனால் காப்பகங்களை மூடி விட்டு சிறார்களை குடும்பங்களிடம் பொறுப்பு கொடுத்து குடும்ப சூழலில் அவர்கள் வளர உதவ வேண்டும் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள 90 சிறார்களும் கிளிநொச்சியில் உள்ள 50 சிறார்களும் இதுபோல குடும்பங்களின் பராமரிப்புக்காக கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குழந்தைகள் சிறப்பான முறையில் வளர குடும்ப சூழல் இன்றியமையாதது என்ற கருத்தாக்கம் பலரிடம் இருந்தாலும் சிறார் காப்பகங்களை மூடுவது என்பது நடைமுறை சாத்தியமான விடயமாக இருக்காது என்று ஆதரவற்ற சிறார்களை பராமரித்து வரும் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் கோகுலம் சிறார் காப்பகத்தின் பொறுப்பாளர் நந்தராணி தேவி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், தமது காப்பகத்தில் உள்ள 125 குழந்தைகளையும் தான் தினந்தோரும் சந்திப்பதாகவும் தமது நேரடி கண்காணிப்பில் சிறார்களை வைத்திருப்பதன் மூலம் சிறார்களை பாதுகாப்பாக பராமரிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உறவினர்களின் பொறுப்பில் விடப்படும் குழந்தைகளும், குழந்தையில்லாத தம்பதியினர் தத்தெடுக்கும் குழந்தைகளும் கூட துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் கோகுலம் சிறார் காப்பகத்தின் பொறுப்பாளர் நந்தராணி தேவி தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் 20 ஆயிரம் சிறார்கள் 470 காப்பகங்களில் வளர்ந்து வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது.
இதில் வெறும் 22 காப்பகங்கள் மட்டுமே அரசால் நடத்தப்படுகின்றன.
மீதியுள்ளவை தனியாராலும், மதச் சார்பு அமைப்புக்களாலும் நடத்தப்படுகின்றன.
**********************

மீளக் குடியமர முடியாத குடாநாட்டு மக்கள்
போர் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேற்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமராமல் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்கிறார்கள்.
உயர் நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்த அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி.வடக்கைச் சேர்ந்த விவசாயிகளால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது யாழ். மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட மனுவிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாகத் தாம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலங்களைத் இழந்துவிட்டார்கள் என்று தெரிவித்தே வலி. வடக்கு விவசாயிகள் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
யாழ். மாவட்டச் செயலகம் முன்வைத்த ஆவணத்தின் அடிப்படையில் 11ஆயிரத்து, 648 குடும்பங்களைச் சேர்ந்த 42ஆயிரத்து, 505 பேர் சங்கானை, சாவகச்சேரி, கரவெட்டி, கோப்பாய், காரைநகர் ஆகிய உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
தெல்லிப்பளையைச் சேர்ந்த 6ஆயிரத்து, 928 குடும்பங்களும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டி உள்ளன என்று மாவட்டச் செயலகத்தின் அறிக்கை கூறுகின்றது.
பலாலியைச் சுற்றி உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து, 456 குடும்பங்களையும் மீளக்குடியமர்த்துமாறு 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்த போதும் அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று எந்த ஒரு பகுதியையும் அரசோ இராணுவத்தினரோ வரையறுத்து வைத்திருக்க முடியாது என்று எதிர்க் கட்சியினர் சுட்டிக்காட்டி வருகின்ற போதும் இந்த 40 ஆயிரம் மக்கள் உயர் பாதுகாப்பு வலயங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
**********************

எல்லை கடந்த அரச பயங்கரவாதம்?
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதிதிரட்டல், மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கூடுதல் அதிகாரங்களை வழங்கவுள்ளது.
இது தொடர்பான இரணடு சட்டமூலங்களை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி உள்நாட்டிலோ வெளிநாடுகளிலோ சிறிலங்காவுக்கு எதிரான தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகள் இந்தச் சட்டத்தின் திருத்தத்தின் மூலம் தீவிரவாதத்துக்குத் துணை போனவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் பறிமுதல் செய்வதற்கும் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அதன் கீழ் வழங்கப்பட்டிருந்த படையினருக்கான அதிகாரங்களை, வௌ;வேறு சட்டங்களின் மூலம் முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
**********************

மகிந்த சிந்தனையில் தொடரும் மர்மமனிதன்
சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் பின்னர் மர்மமனிதர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என்று நம்பியிருந்த யாழ்ப்பாண மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நேற்றிரவும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்களின் தாக்குதலுக்குப் பொதுமக்கள் இலக்காகியுள்ளனர்.
நவாலி, அட்டகிரிப் பாடசாலைக்கு முன்பாக வீடு ஒன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த மர்மமனிதன் உடைகளை உலர விட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரை தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளார்.
குறித்த பெண்ணை பின்புறமாகக் கட்டிப் பிடித்து கழுத்தை நெரித்த மர்மமனிதன், அவர் கத்திக் குழறியதும் தப்பியோடியுள்ளார்.
பொதுமக்கள் அவரைத் துரத்திக் கொண்டு சென்றபோது அங்கு சிறிலங்கா இராணுவத்தினர் நின்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊர்காவற்றுறை, பருத்தியடைப்புப் பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர், மர்மமனிதர்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
சித்தன்கேணி சிவன் கோவில் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் நுழைய முற்பட்ட இருவர் அங்கிருந்தவர்கள் விழிப்படைந்ததை அடுத்து தப்பி ஓடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மர்மமனிதர்கள் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை கடந்த வியாழக்கிழமை மாலை தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்ததை அடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் பின்னராவது மர்மமனிதர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பியிருந்த யாழ்ப்பாண மக்கள் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலையால் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
**********************