Friday 16 September 2011

செய்திகள் 16/09


விடுதலைப் புலிகள் போராளிகளே - நீதிமன்றில் விவாதம்
தமிழீழ விடுதலைப் புலிகளை, கடாபிக்கு எதிரான லிபிய போராளிகளுக்கு ஒப்பிட்டு, நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றதில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான 5 இலங்கையர்களின் வழக்கு நேற்றைய தினம் ஹேக் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது பிரதிவாதிகள் தரப்பில் வாதிட்ட பிரபல சட்டத்தரணி, தமது தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நிதி திரட்டியதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு இல்லை எனவும், அவர்கள் கடாபிக்கு எதிரான போராட்டக் குழுவுக்கு ஒப்பான விடுதலைப் போராளிகள் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று வாரங்களில் விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளா அல்லது பயங்கரவாதிகளா என்ற விவாதம் ஹேக் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலேயே, நிதி வழங்கல் தொடர்பில் கைதான குறித்த 5 பேரினதும், ஏனைய நெதர்லாந்து தமிழர்களின் நிதிவழங்கல் வழக்குகளும் தங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை மூன்று பேர் கொண்ட ஹேக் நீதிமன்றம் நீக்கினால், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்குவது சட்ட ரீதியானதாக்கப்படும் என கொப்பே சுட்டிக்காட்டியுள்ளார்.
*****************

பேச்சுவார்த்தை தொடரும் - அரசு
இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பெறும் வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் அரசு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனா தெரிவித்தார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று திடுதிப்பென சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை வழங்கிவிட முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.
தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் அதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிப்பதற்காக தமிழ்க் கட்சிகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் அதேவேளை இறுதித் தீர்வை எட்டும் விதத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அதன் பங்களிப்பை வழங்கும்.
30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பல தசாப்தங்களாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு எட்டும் போது மீண்டும் ஒரு முரண்பாட்டை பிரச்சினையை ஏற்படுத்தாத ஏற்படுத்த முடியாத தீர்வாக இருக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறை செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
*****************

இன்று கூட்டமைப்புடன் பேச்சு
சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் மீண்டும் இன்று பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் ஜி.எல்.பீரிஸ்,பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் இன்றைய பேச்சுக்களில் சிறிலங்கா அரசின் சார்பில் பங்கு கொள்ளவுள்னர்.
இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, ஜெனிவா சென்றிருந்த அரசதரப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கொழும்பு திரும்பவுள்ளார்.
ஏற்கனவே இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் இன்றைய பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.
சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பத்துச் சுற்றுப்பேச்சுக்களிலும், எந்த முன்னேற்றமும் எட்டப்படாததால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அதிகாரப்பகிர்வு குறித்த மூன்று முக்கிய விடயங்கள் குறித்து எழுத்து மூலம் பதில் தந்தால், பேச்சுக்களை தொடரலாம் என்று சிறிலங்கா அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.
இருதரப்பும் மீண்டும் பேச்சுக்களை தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா கடுமையாக வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் கொழும்பு வந்த பிளேக்கிடம் மீண்டும் வெள்ளியன்று பேச்சுக்களைத் தொடங்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிமொழி அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று பேச்சுக்கள் தொடங்கப்படவுள்ள போதும்- எதன் அடிப்படையில் பேச்சுக்கள் நடைபெறும் என்றோ கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசதரப்பு எழுத்து மூலம் பதில் கொடுக்குமா என்றோ இதுவரை தகவல் ஏதும் தெரியவரவில்லை.
*****************

சர்வதேச அழுத்தம்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை வழங்குவது தொடர்பான அரசின் நிலைப்பாடு தீர்க்கமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின்போது அரசின் இந்த நிலைப்பாடு அறிவிக்கப்படவேண்டுமென சர்வதேச நாடுகள் சில, அரசை அறிவுறுத்தியிருப்பதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அரசியல் தீர்வு தொடர்பிலான தமது அரசின் முக்கியமான யோசனைகளை வெளியிடுவாரெனவும், இந்த மாநாட்டுக்குப் புறப்பட முன்னர் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் முக்கியமான பேச்சுகளை நடத்துவாரென்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசுத் தலைவர் முக்கியமாக ஆராயவிருக்கிறார்.
இந்த அதிகாரங்கள் பகிரப்படாமல் இருப்பது குறித்து முக்கியமான நாடுகள் சில அதிருப்தியை வெளியிட்டுள்ளதால் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்திற்குப் புறப்பட முன்னர் அரசுத் தலைவர், கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
*****************

இராஜதந்திரம் தெரியாத ஆட்சியாளர்கள்
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்யும் இராஜதந்திரிகள் தற்போது யாரை வேண்டுமானாலும் சந்திக்க முடியும் என்ற நிலைமையே காணப்படுகின்றது.
எனினும், இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பாக யார் யாரை சந்திக்க முடியும் என்பது குறித்த பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளதாகவும் பதில் அமைச்சரவைப் பேச்சாளர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளின் பதவிப் பட்டியல் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.
குறித்த பதவிகளை வகிக்கும் நபர்கள் மட்டுமே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும்.
இராஜதந்திரிகள் கடைநிலை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனால் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசுத் தலைவர் அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாக, அமைச்சர் யாபா சுட்டிக்காட்டியுள்ளார
*****************

பொய்யை தெளிவுபடுத்தி தன்னையே குழப்பும் அரசு
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை சட்டவிரோதமாக ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டமை தொடர்பில் வலய நாடுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கவுன்ஸிலின் 18வது கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாது அவசரமாக குறித்த அறிக்கை மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டமை குறித்து வலய நாடுகள் கொள்கை அடிப்படையில் ஒன்றுசேர்ந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையை தயாரிக்க தகவல் பெறப்பட்ட விதம் குறித்து இதுவரை ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்பதால் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது சந்தேகம் எழுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை பிரதிநிதிகள் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா மற்றும் முஸ்லிம் வலய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை மனித உரிமை பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்திப்பு நடத்தி இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
*****************

தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர்
பாதுகாப்பு எதுவும் இல்லாத சூழ்நிலையில் இன்றும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மனோ கணேசன் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளார் என நாட்டில் தமிழரின் பாதுகாப்பின்மையை சிறிலங்கா மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மனோ கணேசன் குரல் கொடுத்து வந்தார்.
இன்று பாதுகாப்பு எதுவுமின்றி தமிழ் மக்களின் உரிமைக்காக தனித்து நின்று குரல் கொடுத்து வருகின்றார்.
உண்மையில் மனோ ஒரு துணிச்சலான அரசியல்வாதியாக திகழ்கின்றார் என மனோ கணேசனுக்கு சேனரத்ன புகழாரம் சூட்டியுள்ளார்.
இதன் மூலம் நாட்டில் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பவர்களுக்கோ பாதுகாப்பு இல்லை என்பதனையும் அதையும் மீறி குரல் கொடுப்பவர்கள் மிவும் துணிச்சல் வாய்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற தற்கால சூழலையும் உறுதிப்படுத்துவதாக சிறிலங்க அமைச்சரான ராஜித சேனரத்னவின் கூற்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*****************

நீண்ட காலம் ஸ்ரீலங்காவில் தடுத்த வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய தமிழர்
பிரிட்டன் தமிழர் ஒருவர் நீண்ட காலமாக எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற நபர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோபிதாசன் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கோபிநாத் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோபிநாதன் கடந்த 2007ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
நோய் வாய்ப்பட்டிருக்கும் கோபிநாத் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கோபிநாத்திற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
*****************