Friday 29 April 2011

செய்திகள் 29/04


விசாரணைக்கு கோராத பான் கீ மூன் - இன்னர் சிற்றி பிறஸ்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாகாப்பு பேரவையிடமோ அல்லது பொதுச் சபையிடமோ கோரவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தற்போதைய தலைவர் நெஸ்டர் ஒஸ்டரியோ, நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது ஓர் வழயைமான நடவடிக்கை எனவும், நடவடிக்கை எடுக்குமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
*******************

ஸ்ரீலங்காவுக்கு இந்தியா ஆதரவு

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த ஸ்ரீலங்காவின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் ஸ்ரீலங்காவுக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.
வேறு வழியின்றி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.
ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
******************

ஸ்ரீலங்காவுக்கு உதவ முன்வருபவர் தமிழின விரோதி - சு. . வி
ஸ்ரீலங்காவுக்கு யார் உதவ முன் வந்தாலும் அவர்கள் உலக தமிழர்களுக்கு விரோதி ஆவார்கள் என திராவிடர் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் விசாரணைகளை நடாத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை - பனகல் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திராவிடர் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இன்று உலக நாடுகள் விழிப்படைந்துள்ளன.
இப்போது .நா. சபை மஹிந்த ராஜபக்ஷ்வை போர் குற்றவாளி என அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில், இந்திய கட்சிகள் கருத்து வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஸ்ரீலங்காவுக்கு யார் உதவ முன் வந்தாலும் அவர்கள் உலக தமிழர்களுக்கு விரோதி ஆவார்கள் என்றார்.
****************

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீலங்கா அரசு சந்திப்பு இன்று
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இதன்போது ஏற்கனவே பேசி இணக்கம் காணப்பட்ட விடயங்கள் இதுவரை செயற்படுத்தப்படாதது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய சந்திப்பின் போது அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் பேசப்படும் என முன்னர் கூறப்பட்டது.
எனினும், ஏற்கனவே அரசாங்கத்துடன் பேசி இணக்கம் காணப்பட்ட விடயங்கள் இதுவரையில் செயற்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதாக அரசாங்கம் கடந்த பேச்சுவார்த்தைகளின் போது உறுதியளித்திருந்தது.
எனினும் இதுவரையில் அவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இவ்வாறான விடயங்கள் குறித்தும் இன்றைய தினம் பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆர்.சம்பந்தனுடன், .எஸ்.சுமந்திரன், சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
*****************

ஐநா அறிக்கை புனைகதை - ஸ்ரீலங்கா அரசு

ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு புனைகதை என்று ஸ்ரீலங்கா அரசு வர்ணித்துள்ளது.
அத்துடன் .நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் எந்த உள்நோக்கமும் அரசுக்குக் கிடையாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை ஸ்ரீலங்;கா அரசு அடியோடு நிராகரித்தாலும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்கொள்வதற்கான இராஜதந்திரப் போரை அது ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக வெளிநாட்டுத் தூதர்களை நேற்றுக் காலையில் இரண்டாவது தடவையாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கினார்.
பக்கச்சார்பானது! வன்மம் பாராட்டுவது! பரபரப்பான புனைகதை நோக்கி வழிப்படுத்துவது என்று அப்போது நிபுணர் குழுவின் அறிக்கை பற்றிப் அமைச்சர் பீரிஸ் பொரிந்து தள்ளினார்.
அதேசமயம், இத்தகைய ஒரு அறிக்கையை விடுத்ததற்காக .நாவுக்கு எதிராகச் செயற்படும் எண்ணம் எதுவும் அரசுக்குக் கிடையாது என்றும் அமைச்சர் கூறினார்.
வெளிநாடுகளையும் .நா. சமூகத்தையும் இழிவுபடுத்துவதன் மூலமோ வன்செயல்கள் மூலமோ சிறுமைப்படுத்தும் எண்ணம் எதுவும் தமக்குக் கிடையாது என்றும் தெரிவித்தார்.
இப்போதுள்ள பதற்றமான சூழலில் அரசியல் லாபம் தேடும் நோக்கோடு செயற்படுபவர்களே அத்தகைய தகவல்களைப் பரப்பி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டடுள்ளார்.
********************


விடுதலைப் புலிகளை பாராட்டும் அறிக்கையை ஏற்க முடியாது - ஹெகலிய
புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்றும் தெரிவித்துள்ள .நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை தாம் எப்படி ஏற்றுக்கொள்வது? என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் அறிக்கையின் 8 ம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள், உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது நாட்டில் ஏற்பட்டுவரும் இன ஒற்றுமை, நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகியவற்றைத் தலைகீழாக மாற்றும் நோக்கிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
.நா. அறிக்கை தொடர்பாக அரசு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் விளக்கமளிக்கும்.
இதேவேளை, இன, கட்சி, நிற பேதமின்றி உள்நாட்டிலுள்ள சகல கட்சிகளையும் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினைக்கு அரசு முகம் கொடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
*********************