Sunday 24 April 2011

செய்திகள் 24/04


பிளேக் - மகிந்த சந்திப்பு சாத்தியமா?

அடுத்த மாதம் மூன்றாம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளக்கை ஸ்ரீலங்கா அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கமாட்டாரென நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை செல்லும் ரொபர்ட்ட பிளேக் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ தொடர்பில் பிளக் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர்கள் கேள்வி எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட மனித உரிமை அறிக்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***************

பீரிஸின் அழைப்பை சீனத்தூதர் புறக்கணித்தாரா?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளுடன் கடந்த 21ம் நாள் நடத்திய சந்திப்பில் சீனத் தூதுவர் கலந்து கொள்ளாத விவகாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை விளக்கும் நோக்கில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்திருந்தார்.
கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஆனால் சீனத் தூதுவர் யங் சூ பிங் மட்டும் பங்கேற்கவில்லை.
அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்காததற்காக காரணத்தை இதுவரை வெளியிடவில்லை.
சீனத்தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுக்கவில்லை என ஒரு தகவல் கூறுகிறது.
ஆனால், சிறிலங்கா வெளிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் சீனத் தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவலை நிராகரித்துள்ளார்.
சீனத்தூதுவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்த அதிகாரி, அழைப்பிதழ் கிடைத்ததை சீனத்தூதுவர் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்தநிலையில் அமைச்சர் பீரிஸ் நடத்திய சந்திப்பில் சீனத்தூதுவர் பங்கேற்காததற்கான காரணம் என்னவென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தவிவகாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கையைத் தோற்கடிக்க சீனாவையும் ரஸ்யாவையுமே சிறிலங்கா நம்பியுள்ள நிலையில், சீனத்தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்படாமல் போனதா என்றும், இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் உள்ளனவா என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
**************

ஐநா அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்காவுக்கு இந்தியா ஆலோசனை!
.நா நிபுணர் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பொருத்தமான ஆலோசனை வழங்குமாறு கோரி அதனை இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஆராய்வதற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவொன்றை இந்திய அரசாங்கம் நியமித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும், அந்த வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இதையடுத்தே நிபுணர்குழு அறிக்கை இந்தியாவிடம் கையளிக்கப்பட்டதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்த அறிக்கையை ஆராயும் இந்திய அதிகாரிகள் குழு தேவைப்பட்டால், சிறிலங்காவுக்கு உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் என்றும் இராஜதந்திரி ஒருவர் கொழும்பு வாரஇதழுக்கு கூறியுள்ளார்.
இதற்கிடையே, நிபுணர்குழு விகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக மற்றொரு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்காவுடனான சீனாவின் நெருக்கத்தை இந்தியா விரும்பாதிருப்பதும், இந்தியாவுடனானா நெருக்கத்தை சீனா விரும்பாதிருப்பதும் சிறிலங்காவுக்கு நெருக்கடியாக உள்ளதென்றும் அந்த வாரஇதழ் கருத்து வெளியிட்டுள்ளது.
அதேவேளை, பிறிதொரு கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கும் முடிவை எடுக்கலாம் என்று தலைப்பிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
****************

போர் குறித்த வெள்ளை அறிக்கை தயாராகிறது
.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முறியடிக்கும் வகையிலானதொரு நகர்வாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெள்ளை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பின் பேரிலேயே இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஈழப்போர் தொடர்பான இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தலைமையிலான, சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த சட்டவாளர் குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சட்டநிபுணர்கள் தற்போது வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெள்ளை அறிக்கை போர் பற்றிய அதிகளவு விளக்கங்கள், தகவல்களை உள்ளடக்கியதாக அமையும் என்றும் முறைப்படியான பதிலாக அமையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்ட போது இஸ்ரேலிய அரசாங்கம் செயற்பட்டதற்கு ஒப்பான வகையிலேயே பெரும்பாலும் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படலாம் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************
வியூகம் வகுக்க தூதர்கள் அழைப்பு

.நா நிபுணர்குழுவின் அறிக்கையைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்காக மேற்கு நாடுகளில் பணியாற்றும் தூதுவர்கள் பலரையும் சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக கொழும்புக்கு அழைத்துள்ளது.
நியுயோர்க், வொசிங்டன், பாரிஸ், ஜெனிவா போன்ற நகரங்களில் உள்ள சிறிலங்கா தூதுவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் .நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியத்துக்கான தூதுவர் ரவீநாத் ஆரியசிங்க, ஜெனிவாவில் உள்ள .நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சேனுகா செனிவிரத்ன ஆகியோரையும் சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்கு அழைத்துள்ளது.
இவர்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் நிபுணர்குழு அறிக்கை விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விரைவில் விளக்கமளிக்கவுள்ளனர்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து, நியுயோர்க்கில் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை பேராசிரியர் வோல்டர் மாரசிங்கவிடம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒப்படைத்துள்ளார்.
பேராசிரியர் வோல்டர் மாரசிங்க ஒரு சட்டக்கல்வியாளர் என்பதுடன் சட்ட ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தை கையாள்வது தொடர்பாக சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நந்தா கொடகே, சிறி பாலிகக்கார, நிகால் றொட்றிக்கோ, பேனாட் குணதிலக போன்ற இராஜதந்திரிகளுடனும் இந்தியாவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசத்துடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*************
தமிழர் பிரதேசத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர்.
குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ள
பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர்.
10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது.
யாழ். மாவட்டத்தில் நகரப் பகுதி, கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை, அல்வாய் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரப்பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம், வவுனியா நகரப்பகுதி ஆகிய இடங்களிலும் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றதாகப் புள்ளி விவரம் கூறுகின்றது.
பதிவு செய்யப்பட்ட சம்பவங்களே இவை என்றும் இவற்றைவிட பதிவு செய்யப்படாமல் இன்னும் அதிகமானவை இடம்பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் பெண் உரிமை விடயத்தில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு, நவீன தொடர்பாடல் தொழில்நுட்பம் வரைமுறையற்று பயன்பாட்டில் இருப்பதே காரணம் என்று யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவர் எஸ்.சிவரூபன் தெரிவித்தார்.
பெற்றோர் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துவதே இத்தகைய குற்றங்களைக் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
*******************