Wednesday 20 April 2011

செய்திகள் 19/04


உடனடி சர்வதேச விசாரணை அவசியம்

ஸ்ரீலங்காவுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து தாமதமின்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சனல் 4 தொலைக்காட்சிகாட்சி வெளியிட்டுள்ள புதிய ஆதாரங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது போர் குற்றங்களும், மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தமும் இடம்பெற்றதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள .நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சனல்-4 தொலைக்காட்சி கடந்த சனிக்கிழமை செய்தி அறிக்கையில் விரிவான ஆய்வுத் தொகுப்பொன்றை வெளியிட்டது.
இதில் முன்னர் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும், .நா அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுக் கூறிய அந்தத் தொகுப்பில் புதிய ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன.
இறுதிக்கட்ட போர் இடம்பெறுவதற்கு முன்னர் குறிப்பாக 2008ஆம் ஆண்டு வன்னியைச் சேர்ந்த அரச அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்டு ஸ்ரீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளுக்கமைய வன்னியில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்த போதிலும், இறுதிக்கட்ட போர் முடிந்த நிலையில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் மக்களே இடம்பெயர்ந்து, வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய செனல் 4 தொலைக்காட்சி, அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.
அதேவேளை இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பிலுள்ள .நா அலுவலகத்தின் பேச்சாளராக கடமையாற்றிய கோட்டன் வைசும், இறுதிக்கட்ட போரின் போது நாற்பதாயிரம் வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த புதிய ஆதாரங்கள் குறித்தும் ஆராயும் வகையில், சர்வதேசமட்டத்திலான சுயாதீன விசாரணைகளுக்கு .நா உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
*****************

அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் - ஐநா

இலங்கை யுத்தத்தின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினால் .நா செயலரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்தில் முறைப்படி வெளியாகும் என்றும் ஐநா தலைமைச் செயலரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த குழுவின் கசியவிடப்பட்ட சில பகுதிகள் இலங்கை பத்திரிகைகளில் வெளியானமை குறித்தும் ஐநா தலைமைச் செயலரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐநா குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் பத்திரிகைகளில் கசிந்து வெளியானமை ஐநாவுக்கு கவலையையும் அழுத்தத்தையும் தந்துள்ளதாக கூறிய அவர், அவை ஐநா தரப்பில் இருந்து கசிந்திருக்க முடியாது என்றும் கூறினார்.
அதேவேளை கசிந்த அறிக்கையில் வெளியான விடயங்கள் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
.நா குழுவின் யுத்தகுற்ற அறிக்கையை எதிர்த்து போராட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ் அழைப்பு விடுத்திருப்பது குறித்து கருத்துக் கேட்டதற்குப் பதிலளித்த ஃபர்ஹான் ஹக் , இதற்கான எந்தவிதமான பதில் நடவடிக்கைகளின் போதும், இலங்கையில் உள்ள .நா பணியாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவர்களது பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமது அறிக்கை குறித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கருத்தினை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும், அது இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
********************
சேர்பியாவை ஒத்த படுகொலை - கோடன் வைஸ்

சேர்பியாவை ஒத்த படுகொலைகள் இலங்கையில் நிகழ்ந்துள்ளதாக கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியில் நடைபெற்ற செய்திநேரத்தில் இந்த கருத்துக்களை இலங்கைக்கான முன்நாள் .நா பேச்சாளர் முன்வைத்துள்ளார்.
சேர்பியாவில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது போல இலங்கையில், இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள கோடன் வைஸ், அப் பகுதியில் நடைபெறும் கொலைகளை யாரும் பார்க்கக்கூடாது என ஸ்ரீலங்கா அரசு முன்னரே திட்டமிட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
லிபியா மீது உடனடி நடவடிக்கை எடுத்த .நா ஏன் இலங்கையில் போர் நடைபெற்றவேளை அதனைப் பாராமுகமாக இருந்தது எனக் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த கோடன் வைஸ் , சீனாவும் இந்தியாவும் சேர்ந்து இலங்கையைக் காப்பாற்றியதாகவும், தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்ததற்கு சீனாவும், இந்தியாவும் பதில் கூறவேண்டி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஜபக்ஷ குடும்பத்தினரே போர் குற்றவாளிகள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி தற்போது கொடுத்துவரும் அழுத்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
**************
நல்லிணக்க அணைக்குழுவின் அவசர அறிக்கை

அரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது முதலாவது ஆவணத்தை தயாரிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவண அறிக்கை தயார் செய்யப்பட்டதன் பின்னர் அது வெளிப்படுத்தப்படுமென கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடகப் பணிப்பாளர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதுவரை பெறப்பட்ட சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இறுதி ஆவண அறிக்கையை தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடகப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
****************
அறிக்கையை பாதுகாப்புச் சபை பயன்படுத்தலாம் - அஞ்சும் ஹெல உறுமய

ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பித்துள்ள போர்க்குற்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பயன்படுத்தி சிறீலங்கா மீதான தீர்மானத்தை கொண்டுவரலாம் என ஜாதிக கெல உறுமய தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் ஆலோசகர் உதயா கமன்பிலா நேற்று தெரிவித்துள்ள தகவலில் ஐக்கிய நாடுகள் சபை சமர்ப்பித்துள்ள போர்க்குற்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை பயன்படுத்தி சிறீலங்கா மீதான தீர்மானத்தை கொண்டுவரும் சாத்தியங்கள் உள்ளன.
எனவே அதனை தடுப்பதற்கு சிறீலங்கா அரசு இரு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வன்னியில் மேற்கொள்ளப்பட்டது மனிதாபிமான நடவடிக்கை என்பதை .நாவில் உறுப்புரிமை உள்ள எல்லா நாடுகளுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டாவது சீனா மற்றும் ரஸ்யாவை பயன்படுத்தி வீட்டே அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
*****************

ஈழத் தமிழருக்காக தீக்குளித்த தமிழக பொறியிலாளர்

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஸ்ரீலங்கா அரசு நடந்து கொள்ளும் விதத்தைக் கண்டித்து தமிழ்நாடு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசுப்புவின் மகனான 25 வயதான கிருஷ்ணமூர்த்தி ஒரு பொறியியலாளராவார்.
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டித்தும், ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறையை கண்டித்தும் தீக்குளிப்பதாக கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று .தி.மு.., பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தியுள்ளார்.
***************