Monday 25 April 2011

செய்திகள் 25/04


ஐநா பொது மக்களின் இழப்புக்களைத் தவிர்த்திருக்கலாம்

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை .நா தவிர்த்திருக்க முடியுமென .நாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என பீபீசி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது .நா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, யுத்தம் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் .நா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென சர்வதேச சமூகத்துக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெருமளவிலான பொதுமக்கள் அரச படைகளின் ஷெல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக .நா நிபுணர் குழு கண்டறிந்துள்ளதாகவும் கோர்டன் வைஸ் பீபீசி சிங்கள சேவையான சந்தேஷயவிடம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை .நா எடுக்க முற்பட்ட போதெல்லாம் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லையெனவும் .நாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
*****************

ஐநா குற்றச்சாட்டின் பின்னணியில் யார்? - கொழும்பு ஊடகத்தின் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் ஸ்ரீலங்கா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் பிரித்தானியாவும், அமெரிக்காவும் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போரம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்மும் ஆதரவளித்துள்ளார்.
க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
*******************

ஸ்ரீலங்காவை கைவிடுமா இந்தியா?

தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
போர்க் காலத்தில் இந்திய இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட, அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அரசுத் தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவுக்கே உடனடியாகப் புதுடில்லி வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மே மாத இறுதிவரை இலங்கைக் குழுவைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கமுடியாது என்று புதுடில்லி ஆணித்தரமாகக் கூறிவிட்டது என்று புதுடில்லியில் ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை .நா. பாதுகாப்புச் சபையில் அல்லது மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்குக் கொண்டுவரப்படலாம் என்ற நிலைமை இருப்பதால், இந்த விடயத்தில் இந்தியாவின் ஆலோசனையையும் உதவியையும் பெறுவதற்காகவே இலங்கைக்குழுவை இந்தியாவுக்கு அனுப்ப அரசுத் தலைவர் முடிவு செய்திருந்தார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஸ்ரீலங்கா நடந்துகொண்ட விதம் மற்றும் ஏற்கனவே புதுடில்லிக்கு வழக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கொழும்பு தவறி இருப்பது ஆகியவற்றால் .நா. விவகாரத்தில் இலங்கைக்கு உடனடியாக எந்த உதவிகளையும் வழங்குவதில்லை என்ற முடிவை புதுடில்லி எடுத்திருப்பதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
*****************

நாடுகடந்த அரசின் கையெழுத்துப் பிரச்சாரம்

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனிடம் கோரி நாடுகடந்த தமிழீழ அரசு கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசின் அங்கத்தவர்கள் உலகெங்கும் உள்ள தமது தொகுதி மக்களிடம் கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளனர்.
.நா. அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் விசாரிக்க வேண்டியதன் நியாயத்தையும், சிறிலங்காவை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான நியாயத்தையும் தெளிவுபடுத்தும் நினனவுப்பத்திரம் ஒன்றில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு வழங்ககப்படும்.
தமிழர்களை கொன்றததற்காகவும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதற்காகவும் சிறிலங்காவின் அரசதலைவர்களையும் இராணுவத்தினரையும் நீதியின் முன்னிறுத்துவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசின் முயற்சிகளின் தொடர்ச்சியே இந்த கையெழுத்து சேகரிப்பாகும்.
.நா. அறிக்கைக்கு எதிரான சிறிலங்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசு நிபுணர்கள் குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்த குழு பல்வேறு அரசுகளையும் சந்தித்து சிறிலங்காவின் .நா.வுக்கு எதிரான பிரச்சாரத்தை பற்றி விளக்கவுள்ளது எனவும் இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
****************

தடுப்பு முகாம்களுக்கான விஜயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று வடக்கின் தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்  தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்குட்படுத்தும் முகாம்கள் மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோரின் பெயர்ப்பட்டியல் என்பவற்றைப் பற்றிய விபரங்களைத் திரட்டும் நோக்கில் இப்பயணம் அமையவுள்ளது.
கடந்த 12ம் திகதி அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரஸ்தாப விஜயத்தை மேற்கொள்ள இருந்த போதிலும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அது இன்றை வரைக்கும் பிற்போடப்பட்டிருந்தது.
இன்றைய விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பில் தன்னுடன் இன்னொரு பிரதிநிதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகளும் பங்குபெறவுள்ளதாக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
*****************

முல்லைத்தீவில் அழிந்த ஆவணங்களை வழங்க நடவடிக்கை - ஹக்கீம்
சுனாமி, யுத்தம் என்பனவற்றின் விளைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணி, பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் பெருமளவில் அழிந்தும், தொலைந்தும் போய்விட்டன.
ஆகையால் அவற்றை உரியவர்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளர்.
முல்லைத்தீவு புதிய நீதிமன்றத்தின் நிர்மாணப் பணிகளை நேரில் கண்காணிப்பதற்காக வியாழக்கிழமை மாலை அங்கு சென்றிருந்தார்.
முன்னதாக அன்று முற்பகல் மன்னார் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அவர் விஜயம் செய்ததோடு நீதிபதி, சட்டத்தரணிகள் மத்தியில் உரையாற்றினார்.
முல்லைத்தீவுக்கு முதல் முறையாக விஜயம் செய்த நீதியமைச்சர் அங்குள்ள மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாரிகள், ஊர்ப் பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிலைமைகளை ஆராய்ந்தார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்டு அவ்வாறான ஆவணங்களை அவற்றிற்கு உரிய மக்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடமாடும் சேவையொன்றை முல்லைத்தீவில் நடாத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
*************