Friday 22 April 2011

செய்திகள் 22/04


மகிந்தவின் பெயர் நீக்கம்

டைம்ஸ் சஞ்சிகையினால் நடாத்தப்படும் உலகின் பிரசித்த பெற்ற 100 நபர்களை தெரிவு செய்வதற்கான இணையத்தின் மூலமான வாக்கெடுப்பின் இறுதி கட்டத்தில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை அதிலிருந்து அகற்ற சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.
இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் 4ஆவது இடத்தினை பெற்றுக் கொண்டிருந்தார்.
3 தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தினை நிறைவு செய்து உலகில் அதிக பிரசித்த பெற்ற நபர்களின் மத்தியில் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளதாக டைம்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியிருந்தது.
அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட உலகின் பிரசித்த பெற்ற 100 பேர் இந்த வாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
இதன்படி, உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களை தெரிவு செய்வதற்கான இறுதி பட்டியலில் இருந்து அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க டைம்ஸ் சஞ்சிகையின் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இதுவரை இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 10 நபர்களில் சிலரை இறுதி வாக்கெடுப்பிற்கான டைம்ஸ் சஞ்சிகை தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
*****************
கட்டாயப் பேரணிக்கு பணிப்பு

சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும், .நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பேரணிகளை நடத்துமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களையும் மற்றும் அமைச்சர்கள் சிலரையும் அலரி மாளிகைக்கு அழைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போதே அரசாங்கத்துக்கு ஆதரவானதும் .நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரானதுமான பேரணிகளை நடத்துமாறும் பணித்துள்ளார்.
மே 1ம் நாள் கொழும்பில் நடத்தப்படவுள்ள பாரிய எதிர்ப்புப் பேரணிக்கு பின்னர் இந்தப் பேரணிகளை ஒழுங்கு செய்யுமாறும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மே 1ம் நாள் நடத்தப்படவுள்ள பாரிய பேரணிக்கு வடக்கு, கிழக்கில் இருந்து ஒவ்வொரு தொகுதி அமைப்பாளரும் குறிப்பிட்டளவான பொதுமக்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கடந்த ஆண்டில் நிபுணர்கள் குழுவை நியமித்த போதும், வடக்கு, கிழக்கில் சிறிலங்காப் படையினர் தமிழ்மக்களை கட்டாயமாக இழுத்துச் சென்று பேரணிகளில் பங்கேற்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*****************
கையெழுத்து வேட்டை தொடர்கின்றது.
.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக பத்து இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் போராட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
சிறிலங்காவின் தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் இடம்பெறும் இந்த கையெழுத்து வேட்டையை நேற்றுக்காலை ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆரம்பித்து வைத்தார்.
புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரிடமும் கையெழுத்துப் பெற வேண்டும் என்று நடத்துனர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சிறிலங்காவின் நட்பு நாடுகள் இந்த அறிக்கைக்கு எதிராக தம்முடன் கைகோர்த்து நிற்பதாகக் கூறினார்.
30 ஆண்டு காலம் புலிகளின் தீவிரவாதத்துக்குள் சிக்கியிருந்த சிறிலங்கா பற்றி இந்த நிபுணர்கள் குழு இரண்டே வாரங்களில் ஒரு அறிக்கையைத் தயாரித்திருப்பது வேடிக்கையானது என்றும் அவர் ஏளனம் செய்தார்.
தனியார் பேருந்து நிலையங்கள், பேருந்துகளில் நேற்று பொதுமக்கள் பௌத்த பிக்குகள், சிறிலங்காப் படையினர் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கையெழுத்திடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************
முறியடிக்க எகிப்து ஆதரவு - திவயின

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என எகிப்து அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தமது ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான எகிப்து பிரதிநிதி அப்துல் அசீஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஸ்ரீலங்கா வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹனவிற்கும், அப்துல் அசீஸிற்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தில் அணி சேரா நாடுகள் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை எகிப்து வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
*****************
போர் வெற்றிக் கொண்டாட்டம்

போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போரில் வெற்றியீட்டி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளது.
கொழும்பு காலி முகத் திடலில் எதிர்வரும் மே மாதம் 27ம் திகதி போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறவுள்ளது.
தேசிய படைவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி பிரித் பாராணய நிகழ்வு நடைபெறவுள்ளது.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
*****************
ஒருபோதும் பதிலளிக்க முடியாது - ஹெகலிய

ஆதாரமற்ற .நா.நிபுணர் குழுவின் போர் குற்ற அறிக்கைக்கு ஸ்ரீலங்கா ஒருபோதும் பதிலளிக்காது எனவும், மீறி அழுத்தங்கள் கொடுக்கப்படுமாயின் வீட்டோ அதிகாரம் உள்ள தோழமை நாடுகளுடன் இணைந்து பான் கீ மூன் மற்றும் அவரது பின்னணியில் உள்ள பயங்கரவாத செயல்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார்.
30 ஆண்டு கால யுத்தத்தை ஆராயாமல் இறுதி மூன்று நாள் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பக்கச்சார்பானதும் நீதியற்றதுமான ஸ்ரீலங்காவுக்கு எதிரான இந்த போர்க்குற்றச்சாட்டுக்களை எந்த ஒரு சர்வதேச நாடும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கை நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார்.
ஸ்ரீலங்காவுக்கு எதிராக பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து உலக நாடுகளில் உள்ள புலி செயற்பாட்டு அமைப்பினரும் குறிப்பிட்ட சில மேற்குலக நாடுகளுமே ஸ்ரீலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கையின் பின்னணியில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
எனவே இனங்காணப்பட்டுள்ள இவர்களின் சவால்களுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ள தோழமை நாடுகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா அரசு முகம் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு ஸ்ரீலங்கா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதிலளிக்காது என்றும் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
***********************