Monday 4 April 2011

செய்திகள் 04/04



2011 தமிழருக்கு தீரப்புமுனை - தமிழீழ பிரதமர்

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை 2011ம் ஆண்டு முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆண்டாக அமையும் என்று நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கொள்கை விளக்க கலந்துரையாடலில் இணையத்தினூடக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு வன்னிப் போரில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கப் போகிறது எனத் தெரிவித்துள்ளார்.

5000 பொதுமக்கள் லிபியாவில் கொல்லப்பட்டதற்காக மனிதாபிமான போர் நவடிக்கையை மேற்கொண்டுள்ள ஐ.நா பாதுகாப்பு சபை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வியை எழுப்பப் போகிற ஆண்டாக இந்த 2011ம் ஆண்டு அமையப் போகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசைப் பொறுத்தவரை அது தமிழீழம் ஒன்று தான் ஈழத்தமிழர்களுடைய அவலங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரே வழி என்பதை எந்த விட்டுக் கொடுப்பும் இல்லாமல் அனைத்துலக அளவில் வலியுறுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் கொள்கை அளவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளன.

சிறிலங்கா அரசாங்கம் பாரிய இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டது என்ற விடயம் அனைத்துலக அரங்கில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படும் நிலை வரும் போது, ஈழத்தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான வழி பிறக்கும்.

அதற்கான வேலைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செய்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை சிறிலங்காவுக்கு நர்டுகடத்த வேண்டாம் என்று பிரித்தானிய அரசைக் கோரும் நடவடிக்கைக்கு தான் முழு ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.

லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் நடத்தப்பட்ட கொள்கை விளக்க கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளை வைத்திருக்கும் தான் ஈழத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நன்கு அறிவேன் எனத் தெரிவித்த அவர் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்படுவது ஆபத்தானது என்பது தனக்குத் தெரியும் எனவும் இது தொடர்பான தனது கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் தமிழர்களை கொழும்புக்கு நாடு கடத்துவதைத் தடுக்குமாறு கோரும் மனு ஒன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டது.
**********************

தமிழருக்கு எதவும் கொடுக்க முடியாது - ஸ்ரீலங்கா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டதையெல்லாம், அரசாங்கத்தினால் வழங்க முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.

எனவே இதுவரை போலல்லாமல், ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை மதிப்பதன் காரணமாகவே அதனுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

எனவே அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது என்று மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கூட்டமைப்பு கோருவதை போன்று காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம், நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

எனவே பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்தும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைவது அவசியம் என்று மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ள இக் கருத்தையே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும், தெரிவித்திருந்தார்.

அத்துடன் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச வட மாகாணத்திற்கு காவல்துறை அதிகாரம் வழங்கினால் எந்த ஒரு அமைச்சர்களும் வடபகுதிக்கு செல்ல முடியாமல் போகலாம் என கருத்து கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
*******************

இந்திய இராணுவ படுகொலை சாட்சியம் வெளியீடு

1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை இந்திய இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை படமாக்கி ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதோடு, பல பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்திய இராணுவத்தால் பல அட்டூழியங்கள் செய்யப்பட்டாலும், குறிப்பிடத்தக்க 12 அட்டூழியங்களை இந்த நூல் அம்பலப்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மனித உரிமைக் கழகம் இப் புத்தகத்தை வெளியிட பெரிதும் உதவியதோடு, ஆவணத் தொகுப்புக்கும் உதவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவம் ஈழத் தமிழர்களுக்குச் செய்த அட்டூழியங்களை புத்தகமாக்கி, அதை இந்தியாவில் வைத்தே வெளியிட்டுள்ளமை பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
************************

மலையகத்தில் தமிழர் மீதான தாக்குதல் - விசாரிக்க கோரும் அமைச்சர்


ஹட்டனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப்போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

சமநலகம, ஹிஜ்ராபுர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின் வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா காவல்துறை பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஹட்டனில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களில் ஐவர் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் ஹட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் நேற்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 15ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 29 நபர்களுடைய பெயர்பட்டியல் காவல்துறையினருக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களையும் இன்று நீதிமன்றில் ஆஐர்படுத்தாவிடின் ஹட்டன் நகரில் எதிர்ப்பு ஆர்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஹட்டன் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் கூறினர்.
*********************

மரத்தால் விழுந்தவனை ஏறி மிதிக்கும் மாடுகள்!

கடந்த 15 மாதங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து சிறிலங்கா காவல்துறையினரால் 170 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் பேச்சாளர் காமினி சில்வா கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிடுகையில் கடந்த 2010 ஜனவரி 01ம் நாள் தொடக்கம் 2011 மார்ச் 10ம் நாள் வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரால் 170 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள சிறிலங்கா காவல்நிலையம் தண்டப்பணம் அறவீட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தக் காவல்நிலையம் 91 மில்லியன் ரூபாவை தண்டமாக அறிவிட்டுள்ளது.

அடுத்ததாக யாழ்ப்பாணம் காவல் நிலையம் 46 மில்லியன் ரூபாவை தண்டமாக அறிவிட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா காவல்நிலையம் 11 மில்லியன் ரூபாவையும், கிளிநொச்சி காவல்நிலையம் 8 மில்லியன் ரூபாவையும், காங்கேசன்துறை காவல் நிலையம் 5 மில்லியன் ரூபாவையும், மாங்குளம் காவல்நிலையம் 4 மில்லியன் ரூபாவையும், முல்லைத்தீவு காவல்நிலையம் 2 மில்லியன் ரூபாவையும் அறவிட்டுள்ளன.

1லட்சத்து 2ஆயிரத்து 806 போக்குவரத்து விதி மீறல்களின் போதும், 6ஆயிரத்து 633 பாலியல்வல்லுறவு வழக்குகளிலும், 2ஆயிரத்து 603 சுற்றுச்சூழல் விவகாரங்களிலும் குற்றப்பணம் அறவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
********************


கொள்ளையடிக்கும் அரசு - சாடும் எதிர்க்கட்சி


சித்திரைப்புத்தாண்டு அண்மித்துள்ள நிலையில் மக்கள் மீது அரசாங்கம் சுமைகளை சுமத்தியுள்ளது.

சலுகைகளை வழங்கவேண்டிய காலத்தில் சுமைகளை அரசாங்கம் சுமத்தியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மக்களுக்கு காண்பித்து மக்களின் சட்டைப் பையில் இருந்தவற்றை அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது.

இது வெட்கப்படவேண்டிய விடயமாகும்.

உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
*****************