Wednesday 13 April 2011

செய்திகள் 13/04


ஐநா அறிக்கை ஸ்ரீலங்காவுக்கும் கையளிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை கூறவென ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையை நேற்றுக் கையளித்தது.
அதன் ஒரு பிரதி கொழும்பு அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு மரியாதைக்காக அது ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டதாக .நா. பொதுச் செயலரின் அலுவலகம் தெரிவித்தது.
இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்களும் அனைத்துலகச் சட்ட மீறல்களும் இடம்பெற்றன என்றும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்றும் அனைத்துலக அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன.
இதனை அடுத்து, எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென .நா. பொதுச் செயலாளர், மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார்.
கடந்த பல மாதங்களாக விசாரணைகளை நடத்தி சாட்சியங்களைப் பெற்ற இந்த நிபுணர் குழு, தனது அறிக்கையை நேற்று பொதுச் செயலாளரிடம் கையளித்தது.
நீண்ட நாள்களாகத் தாமதிக்கப்பட்டு வந்த அறிக்கை நேற்று கையளிக்கப்பட்டது என்பதை பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்கான் ஹக் உறுதிப்படுத்தி அறிவித்தார்.
அறிக்கை உடனடியாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அதன் ஒரு பிரதி ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை பொதுப் பார்வைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னதாக, ஒரு மரியாதைக்காக அதன் ஒரு பிரதியை பொதுச் செயலர் ஸ்ரீலங்கா அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என்று பேச்சாளர் பர்கான் தெரிவித்தார்.
அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பான் கீ மூன், அது தொடர்பில் பணியாற்றிய மூன்று நிபுணர்களுக்கும் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகப் படித்த பின்னர் அது தொடர்பில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அடுத்து வரும் நாள்களில் .நா. பொதுச்செயலர் முடிவு செய்வார் என்று .நா. தெரிவித்துள்ளது.
அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்று .நா. பேச்சாளரிடம் கேட்ட போது, ஸ்ரீலங்கா அரசுடன் அதனைப் பகிர்ந்துகொள்வது தவிர வேறு எந்த முடிவும் உடனடியாக எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
*************

ஐநா அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக .நா நிபுணர்கள் குழு அளித்துள்ள அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டும் வகையில்,போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும்படியும் அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் .நாவை வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை ஆகியன அறிக்கைளை வெளியிட்டுள்ளன.
.நா நிபுணர்கள் குழு அளித்துள்ள அறிக்கையை, நீதியை நிலை நாட்டுவதற்காக .நா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் சிறிலங்காவில் போருக்கு இரையானவர்களை .நா மறந்து விடக்கூடாது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக கற்சுவர்களால் சிறிலங்கா அரசு மறைத்து வைத்திருந்த உண்மைகளை இது வெளிப்படுத்தும்.
இந்த அறிக்கை வெளிப்படுத்தப்பட்டால் சிறிலங்காவில் நீதியை முன்னோக்கி நகர்த்த உதவியாக அமையும் என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக விசாரித்த நிபுணர்கள் குழுவுடன் ஒத்துழைத்திருக்க வேண்டும்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த மீறல்களை விசாரிக்க எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
அதேவேளை, அனைத்துலக மன்னிப்புச்சபையும் இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று .நாவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
*****************

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகும் ஸ்ரீலங்கா

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமை தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலடி கொடுக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார்.
சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ பதிலை அளிக்கும வகையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக சிறிலங்கா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மனிதஉரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்தப் பதில் அறிக்கையின் வரைபு ஒன்றை தயார் செய்துள்ளார்.
இந்த வரைபு அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவர் அதை ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை அமெரிக்காவை கடுமையாகச் சாடும் வகையில் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா அரசும் அதன் முகவர்களும் தொடர்ந்தும் மோசமான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது.
ஆனால் இது முட்டாள்தனமான அறிக்கை என்று சிறிலங்காவின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்கவும், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெலவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**************
தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரம் வெளியாகுமா?
தடுப்பு முகாம்களில் உள்ள 4581 முன்னாள் புலி போராளிகளின் பெயர் விபரங்களை அரசு எதிர்வரும் 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பிரகாரமே தடுப்பு முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அரசு கையளிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
***************
இந்திய தலையீட்டுக்கு ஜே.வி.பி எதிர்ப்பு!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குரிய வகையில் சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோருவதனூடாக நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அளவுக்கதிகமாக தலையிடுவதாக அவர்மீது ஜேவிபி கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அரசியலமைப்பு மாற்றங்கள் அவசியமென சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.
இது உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டினைக் காட்டுகின்றது என ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது சிறிலங்கா விவகாரங்களில் இந்தியா தலையிடுவது முதற் தடவையல்ல எனக் கூறிய சில்வா, இந்தியாவைக் கண்டிக்கும் அதேவேளை, அதன் தலையீடுகளையிட்டு வாய்மூடி இருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தையும் ஜேவிபி கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றத்தினூடாகத் தீர்வு காண முடியாது.
அதற்கு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நேர்மையான திட்டம் வேண்டும்.
அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதும் கொண்டு வராததும் இலங்கையர்களாகிய தம்மைப் பொறுத்தது. சோனியா காந்தி அதனைப் பற்றி தமக்கு எதனையும் எடுத்துரைக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்குரிய சம உரிமை மற்றும் சிறுபான்மைத் தேசிய இனம் என்ற அந்தஸ்தினை உறுதிப்படுத்துவதற்குரிய வகையில் அரசியலமைப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தத்தினை இந்தியா தொடர்ந்து கொழும்பிற்கு பிரயோகிக்கும் என இந்தியாவின் தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
**************
துடுப்பாட்ட அரசியல்!

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவுக்கு தெரிவு செய்யப்படும் வீரர்கள், பயிற்சிகளின்போது .பி.எல். போட்டிகளிலிருந்து திரும்பி வராவிட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இலங்கை அணி வீரர்கள் .பி.எல். போட்டிகளைவிட தேசிய அணிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹி;ந்தானந்த அளுத்தகமகே கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை அணியின் பயிற்சிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலேயே வெளிநாட்டு சுற்றுப்போட்டிகளில் பங்குபற்ற இலங்கை அணி வீரர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.
குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உட்பட இலங்கை அணியின் 11 வீரர்கள் .பி.எல். போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர்.
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலா அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.பி.எல்.சுற்றுப்போட்டி மே 28 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
************