Thursday 21 April 2011

செய்திகள் 21/04


வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கம்

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை விபரிக்கும் வகையில் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களை ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெறும் சந்திப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் ஸ்ரீலங்கா தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
*************

போர் நடக்கவேயில்லை - ஆளும் கட்சி

இலங்கையில் போர் நடைபெறவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.
நாட்டில் போர் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் உண்மையில் அரசாங்கப் படையினர் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது எதிரிகளுக்கும் அரசாங்கம் உணவு, பானங்களை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு உண்மைத் தகவல்களின் அடிப்படையில் அறிக்கையை தயாரிக்கத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்கள் மற்றும் ஏனைய அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக நிபுணர் குழு போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு;ளளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
****************

அமெரிக்க ஆலோசனை?
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் அளித்த அறிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுடன் சமரசம் செய்துகொள்ளவும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கவும் சுயமரியாதையுடன் அவர்களும் இலங்கையில் வாழவும் ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு யோசனை கூறியிருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் மார்க் டோனர் இதை வாஷிங்டனில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
.நா. நிபுணர்கள் அளித்த பரிந்துரைகளை உடனே நிறைவேற்றி தமிழர்களும் இலங்கையின் சம உரிமை பெற்ற குடிமக்கள்தான் என்பதை நிலைநாட்ட ஸ்ரீலங்கா அரசு உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
******************

உள்ளக விசாரணை தேவை - ஐதேக
.நா நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உடனடியாக உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐதேக கோரிக்கை விடுத்துள்ளது.
.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐதேகவின் அதிகாரபூர்வ கருத்தை வெளிப்படுத்தும் நோக்கில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மூத்த உதவித் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
.நா நிபுணர்கள் குழுவை பான் கீ மூன் அமைத்தபோது, அந்த விசாரணையில் பங்கேற்க மறுத்தது ஸ்ரீலங்கா அரசு செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசாரணையில் ஸ்ரீலங்கா பங்களித்திருந்தால், இந்த அறிக்கையில் பூதாகாரப்படுத்தப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை அழைப்பை நிராகரிப்பதற்குப் பதிலாக ராஜபக்ச அரசாங்கம், .நாவுடன் ஒரு பேச்சுக்குச் செல்ல வேண்டும்.
முதற்கட்டமாக .நா நிபுணர்கள் குழுவின் பரிந்துரைப்படி, அவசரகாலச்சட்டத்தை நீக்கி, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்.
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்து, சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவி, போரினால் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிட்ட படையினரை, .நா நிபுணர்கள் குழு அறிக்கை மூலம் அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தலாம் என்று அதிபர் மகிந்த ராஜபக்சவும் சில அமைச்சர்களும் தெரிவிக்கும் கருத்து பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டி குறுகிய அரசியல் இலாபம் பெறவே இவ்வாறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடாததால் அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்த முடியாது.
2001இல் தமது ஆட்சியின் போது இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனைத்துலகம் அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவர் கையெழுத்திடவில்லை.
அதனால் ஸ்ரீலங்காவின் எந்தவொரு தலைவரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்நிறுத்த முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
****************

ஐநா அறிக்கையை ஸ்ரீலங்காவுக்காக தாமதப்படுத்திய பான் கீ மூன்

.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை மார்ச் 31ம் திகதியே தயாரிக்கப்பட்டு விட்டபோதும், சிறிலங்காவுக்காகவே அதை பான் கீ மூனிடம் கையளிப்பது தாமதமாகியது என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
.நா நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் ஸ்கான் செய்யப்பட்ட பிரதியின் பகுதி இன்னர்சிற்றி பிரசுக்கு கிடைத்துள்ளது.
அதில் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் மார்ச் 31ம் திகதியிட்டு ஒப்பமிட்டுள்ளனர்.
ஆனால் அந்த அறிக்கை ஏப்ரல் 12ம் திகதியே பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரதி ஏப்ரல் 13ம் திகதி .நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.
இன்னர் சிற்றி பிரஸ் கடந்த 19ம் திகதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடனும் பாலித கொஹன்னவுடனும் கலந்துரையாடியது.
பாலித கொஹன்னவின் இல்ல வரவேற்பறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அப்போது, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று .நா பொதுச்செயலரின் பேச்சாளர் கூறியிருப்பினும், பொதுமக்கள் மத்தியில் அது வெளியிடப்படக் கூடாது என்று பாலித கொஹன்ன வாதிட்டார்.
.நா இந்த அறிகையை இன்னமும் ஏன் வெளியிடவில்லை என்று பாலித கொஹன்னவிடம் கேட்டபோது, இது பொதுமக்களுக்குத் தேவையற்றது என்று கூறினார்.
இந்த அறிக்கை .நா பொதுச்செயலருக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
.நாவுக்கு பதிலளிப்பதற்கு சிறிலங்கா 36 மணி நேரம் காலஅவகாசம் கோரிய போதும் இதுவரை பதிலளிக்காதது ஏன் என்று பாலித கொஹன்னவிடம் கேட்டபோது, 195 பக்கங்கள் கொண்ட அறிக்கைக்கு 36 மணி நேரத்தில் எவ்வாறு பதிலளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
கடந்தவாரம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை சிறிலங்காவில் விடுமுறை நாட்கள்.
அதன் பின்னர் கடந்த திங்களன்று பூரணை நாள் விடுமுறை என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னர் சிற்றி பிரஸ் பாலித கொஹன்னவை அவரது வதிவிடத்தில் சந்திக்க முன்னர், எகிப்தின் .நாவுக்கான நிரந்தர வதிவிடப் பரதிநிதி மஜெட் அப்டிலாசிஸ் அங்கு சென்று கொஹன்னவுடனும், சவீந்திர சில்வாவுடனும் கலந்துரையாடியுள்ளார்.
எகிப்பது தான் பொதுநலவாய நாடுகளுக்குத் தலைமை வகிக்கிறது.
சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் .நா பொதுச்செயலரின் முயற்சிகளுக்கு எதிராக அழுத்தங்கள் கொடுப்பது பற்றியே இவர்கள் பேசியுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.
*****************

தமிழர் அமைப்புக்களை தடைசெய்யக் கோரும் சிங்களம்!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சகல அமைப்புக்களையும் தடை செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த போதிலும், விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடை செய்யவில்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதிலும், ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களை தடை செய்வது குறித்து அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எதிர்வரும் வாரத்தில் உத்தியோகபூர்வமான முறையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வரும் அமைப்புக்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
****************