Wednesday 6 April 2011

செய்திகள் 06/04


லண்டனில் தமிழின செயற்பாட்டாளர் மீது திட்டமிட்ட கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் செயற்பட்டு வரும் திரு தனம் மீதே இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 04ஆம் திகதி அன்று இரவு 11.00 மணியளவில் அவர் தனது வாகனத்தை வீட்டிற்கு முன்னர் நிறுத்திவிட்டுப் பொருட்களை எடுத்துக்கொண்டு நின்றவேளை, ஏற்கனவே பதுங்கி நின்ற இருவர் ஹோக்கி விளையாடும் கட்டை ஒன்றின் மூலம் அவர் பின் தலையில் தாக்கியுள்ளனர்.

தன் நிலை இழந்து தரையில் வீழ்ந்த அவர் மீது சப்பாத்துக்கால்களால் உதைத்தும் உள்ளனர்.

தனம் அவர்களின் குரல்கேட்ட அவரது பாரியார் வீட்டில் இருந்து வெளியே வர, அவ்விருவரும் தப்பியோடியுள்ளனர்.

அவர்கள் முகத்தை மறைத்து இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறிப்பிட்ட அப் பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதித்து, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் பல தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.

மேற்கொண்டு இது திட்டமிட்டப்பட்ட படுகொலை முயற்சி என்ற கோணத்திலேயே காவல்துறையினர் விசாரணைகளைத் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 மாதங்களாக பிரித்தானியாவில் செயற்பட்டுவரும் மனிதநேய செயற்பாட்டாளர்களை நோக்கி குறிப்பிட்ட ஒரு குழுவினர் அச்சுறுத்தலை விடுத்துவருகின்றனர்.

தமிழ் உணர்வாளர்கள், மனித நேயப் பணியாளர்கள் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அச்சுறுத்தல்களை விடுத்துவந்த சிலர் தற்போது காட்டுமிராண்டித்தனமாக திட்டமிட்ட தாக்குதல்களையும் நடாத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத் தருணத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனை முறியடிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-----------------


தமிழின உணர்வாளர்கள் மீதான வன்முறைகளை அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் வன்மையாகக் கண்டிக்கின்றது.



தமிழின உணர்வாளர்கள் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இனவிடுதலையை நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் தளராத உறுதியை நிலைகுலைய வைக்கவும், தமிழர்களை வன்முறையாளர்களாக அடையாளப்படுத்தவும் இத்தகைய திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுகின்றன.

இதுபோன்ற தமிழின விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதுடன் நின்றுவிடாது தடுத்து நிறுத்த புலம்பெயர் தமிழ் மக்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு துணைபுரிந்து குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வன்முறைகள் மூலமாக இனஉணர்வையும் விடுதலை எழுச்சியையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை எதிரிகள் உணர்ந்து கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரமும் ஜனநாயகமும் கொண்ட மேற்கு நாடுகளில் ஜனநாயக விரோத சக்திகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் துணைபுரியக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
------------------

தமிழின செயற்பாட்டாளர் தனம் அவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு கடந்த அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.



அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகள் தமிழினத்தின் இலட்சியமான தமிழீழ செயற்பாட்டை நோக்கிய பயணத்தை பின்தள்ளும் நோக்கம் கொண்டவையாக இருப்பதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துரைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் மற்றும் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் தணிகாசலம் தயாபரன், சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழரின் அடிப்படை அபிலாசைகளை சிதைத்து விடுதலையை பின்தள்ளும் இது போன்ற வன்முறை செயற்பாடுகளை கண்டித்துள்ள அவர், இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகள் மூலமாக தமிழீழ விடுதலைக்கான தமிழரின் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று வலியுறுத்திய அவர் அனைத்து விதமான வன்முறைகளும் வன்மையான கணடனத்தக்குரியவை என தெரிவித்துள்ளார்.
------------------


சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.



இதய நோய்க்கு இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த இரா.சம்பந்தன் பல மாதங்களுக்குப் பின்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார்.

அங்கு, உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பாகப் நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல ஆலோசனைகளையும், திருத்தங்களையும் முன்வைத்தது.

எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கவனத்தில் எடுப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.

சபையில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் சட்டத் திருத்தங்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை.

அவசர அவசரமாக முதலில் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் சிங்கள மொழிபெயர்ப்பு மட்டும் வழங்கப்பட்டது.

தமிழ்மொழியும், சிங்களமொழியும் அரச கருமமொழிகள் என்று சிறிலங்காவின் அரசியலமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் அரசியலமைப்பையே உதாசீனப்படுத்துவது போல் அமைந்துள்ளன.

தமிழ்மொழி பெயர்ப்பு இல்லாத ஒரு சட்டத் திருத்தம் செல்லுபடியாகுமா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழ் மொழிபெயர்ப்பு அவசியம் இல்லை என்று அரசாங்கம் கருதுகிறதா? என கேள்வி எழுப்பிய அவர் இதில் சிறிலங்கா அரச தலைமைக்கு அக்கறை இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

புறக்கணிப்புகளை நாம் மட்டுமல்ல, முழு உலகமுமே அவதானித்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது, மாவட்ட, தேசிய மட்டத்திலான எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களில் சகல இன மக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்களை தேசிய மட்டத்திலான ஆணைக்குழுவே நியமிக்க வேண்டும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், திருத்தங்களில் மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைச்சரினால் நியமிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கே அரசு அளித்த சகல வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன.

இந்த விடயத்தில் அமைச்சர்கள் வாய்மூலம் அளிக்கும் விளக்கங்களையும் வாக்குறுதிகளையும் ஏற்க முடியாது.

ஜனநாயகத்தை சூழ்ச்சியான வழியில் பயன்படுத்துவதை நாம் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் குழுவில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட திருத்தங்கள் தமிழ் மொழியில் அச்சிடப்படும் வரை இந்த விவாதத்தைப் பிற்போடப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
---------------------

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பை விரட்டி வெளியேற்றுவதற்கு சில அமைச்சர்கள் தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.



அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பை விரட்டி வெளியேற்றுவதற்கு சில அமைச்சர்கள் தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள இனப்பிரச்சனைக்கான தீர்வுகள், அதிகாரப்பகிர்வின் அடிப்படைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசுத் தலைவர் மற்றும் சில அமைச்சர்கள் அண்மைக்காலங்களில் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் தொடர்பாகவே அவர் சந்தேசமும் விசனமும் தெரிவித்துள்ளார்.
 
பேச்சுவார்த்தைகளின் உள்ளார்த்தம் மற்றும் தீர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் எதுவுமே அறியாத, குறிப்பாக பேச்சுவார்த்தைகளுடன் சம்பந்தமேயில்லாத ஒரு சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பேச்சுவார்த்தைகளை குழப்பியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையிலேயே கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையிலே கடந்த ஒருவார காலத்திற்குள் அமைச்சர்கள் சிலரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இப்பேச்சுவார்த்தையைக் குழப்பும் விதமாகவே அமைந்துள்ளன.
 
அதிகாரங்கள் உரிய முறையில் பகிந்தளிக்கப்படுகின்ற பட்சத்தில மட்டுமே இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும்.

மாகாண சபையாக இருந்தலும்சரி உள்ளூராட்சி சபையாக இருந்தாலும் சரி அந்தந்த சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மாகாண சபைகளுக்கான காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவேண்டும். அப்படி அதிகாரங்கள் வழங்காதுவிட்டால் அச்சபைகள் இயங்குவதில் அர்த்தமில்லை. அதுமட்டுமல்லாது பேச்சுக்களும் அர்த்தமுடையதாக அமையாது. அது நடைமுறைக்கு சாத்தியமாகவும் அமையாது என்றும் தெரிவித்தார்.
-----------------------

ஸ்ரீலங்காவுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகள், அந்த நாட்டின் மனித உரிமைகள் மேம்பாட்டிலேயே தங்கியிருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்த கருத்தை நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீலங்காயில் ஜனநாயகம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருந்தது.

இந்தநிலையில், அமெரிக்காவினால் ஸ்ரீலங்காயுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஒத்துழைப்பும், அந்த நாட்டின் மனித உரிமை மேம்பாட்டிலேயே தங்கியிருக்கும் என ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமெரிக்கா தொடர்ந்தும், நல்லிணக்கம் மற்றும் நியாயாதிக்கத்திற்கான அழுத்தங்களை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-----------------