Saturday 16 April 2011

செய்திகள் 16/04

ஏமாற்றும் அரசு!

வவுனியா பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்வதாக அரச தரப்பு உறுதி அளித்தபோதிலும் கடைசி நேரத்தில் அது கைகூடவில்லை.
வேறொரு தினத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டது.
இன்று 16ஆம் திகதி வவுனியா பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்து கைதான, காணாமல் போனோரின் விவரங்கள் ஒப்படைக்கப்படும் என்று கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது கூட்டமைப்பிடம் அரச தரப்பு உறுதியளித்திருந்தது.
இந்த விவரங்களைப் பெற்றுக்கொள்ள இன்று வவுனியா பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கூட்டமைப்பும் அரச தரப்பும் விஜயம் செய்யவிருந்தன.
இருந்தும் இறுதி நேரத்தில் இந்த விஜயம் ரத்துச் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசு தொடர்ந்து ஏமாற்றுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பாக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முதலாவது சந்திப்பின் போது காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோரின் விவரங்களை வெளியிடுமாறு அரசிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதனையடுத்து காணாமல்போனோர், கைதுசய்யப்பட்டோரின் விவரங்கள் வவுனியா பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் என்று அரசு உறுதியளித்தது.
இது தொடர்பான செய்திகளை அறிந்த மக்கள் வவுனியா பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்றிருந்தனர்.
ஆனால் அங்கு அந்த விவரங்களை காட்சிப்படுத்தாததால் எதிர்பார்ப்புடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கடந்த 7ஆம் திகதி அரசுடனான அடுத்த கட்டப் பேச்சு நடைபெற்றபோது காணாமற் போனோர், கைதானவர்களின் விவரங்களை காட்சிப்படுத்துகின்றமை தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு அரசுக்கு நினைவூட்டியது.
இதனைக் கவனத்துக்கு எடுத்த அரசு, இன்று வவுனியா பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துச் சென்று காணாமல் போனோரதும், கைதானவர்களதும் விவரங்கள் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்தது.
இந்த நிலையில் திடீரென நேற்றுமுன்தினம் மாலை அரச தரப்பு பேச்சுகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினரான சச்சின் வாஸ் குணவர்தன தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்ட விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் இதற்கான திகதி ஒன்று அறிவிக்கப்படும் வரை காத்திருங்கள் என்றும் கூறினார்.
அரசின் மற்றுமொரு ஏமாற்றுவித்தை இது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை உணர்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரமல்ல, முழு தமிழ்ச் சமூகத்தையும் அரசு ஏமாற்றிவிட்டது.
காணாமற் போனோரதும், கைதுசெய்யப்பட்டவர்களதும் விவரங்கள் வெளிவரும் என்று நாள்களை எண்ணிக்கொண்டிருந்த அவர்களது உறவினர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள அரசுடனான பேச்சின் போது இது விடயம் தொடர்பாகத் தெரிவிக்கவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
*******************

கைதிகள் பற்றி கவலைப்படும் பிரதம நீதியரசர்?

இலங்கைச் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா பீபீசிக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
போதுமான சாட்சியங்கள் இல்லாவிட்டால் எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருக்க முடியாது எனவும், பிணையிலாவது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அடுத்த மாதப் பகுதியில் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இலங்கையின் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் பல ஆண்டுகளாகவே பெரும் பிரச்சனையாகவே இருந்துவருகின்றது.
பலர் பல ஆண்டு காலமாக எவ்வித வழக்கு விசாரணைகளும் இன்றி சிறைகளில் வாடுவதாக சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சிறைக் கைதிகளும் தம்மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்துங்கள் அல்லது குற்றச்சாட்டுக்கள் இல்லாவிட்டால் விடுதலை செய்யுங்கள் என்று பல்வேறு வகையான போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.
அவர்களின் குடும்ப உறவினர்களும் இவர்களின் விடுதலைக்கு ஆவண செய்யப்பட வேண்டுமென அதிகாரிகளிடம் மன்றாடி வருகின்றனர்.
வழக்கு விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டதாகவும் அசோக்க டி சில்வா கூறினார்.
பயங்கரவாதம், யுத்தத்துடன் தொடர்புடையவர்கள் தவிர, பலர் கொலைச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்களாக இருப்பதாகவும், எவ்வாறெனினும் குறித்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லையென்பதற்காக அவர்களை பலகாலம் சிறையில் அடைத்து வைக்காது ஆதாரங்கள் கிடைத்த பின் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்யலாம் எனவும் தான் காவல்துறையினருக்கு கூறியுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
******************

ஐநா அறிக்கை வெளியாகும் - பிரித்தானிய ஊடகம்

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, சில தினங்களில் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல்போர் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது பத்து தினங்களில் வெளியிடப்படும் என .நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றை அமைப்பதற்கு அதில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சயையினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு சுயாதீனமாக ஆதாரங்களை கோரியபோது, சனல் போர் செய்தி நிறுவனமும், இரண்டு காணொளி ஆதாரங்களையும், பல புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிறீலங்காவின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை என்ன முடிவை மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் தான் நீதியின் நடைமுறை தங்கியுள்ளது என அனைத்துலக மன்னிப்புச்சiயின் பிரதிநிதி சனல்போர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா தொடர்பில் .நா மேற்கொள்ளும் நடவடிக்கை உலகில் வன்முறைகளில் ஈடுபடும் அரசுகளுக்கு ஒரு காத்திரமான செய்தியை கொண்டு செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
**************

அறிக்கை கசிந்தது

.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி சிறிலங்கா ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியானது குறித்து .நா கடும் விசனம் அடைந்துள்ளது.
சிறிலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட பிரதியே சிறிலங்காவின் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளதாக .நா கருதுகிறது.
இது குறித்து .நா பொதுச்செயலரின் பேச்சாளர் பணியகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கையை .நா பொதுச்செயலர் ஆராய்ந்து வருகிறார்.
இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் வாய்ப்பை வகையில் சிறிலங்கா அதிபருக்கும் இதன் பிரதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தும் போது சிறிலங்கா அதிபரின் பதிலும் வெளியிடப்படும்.
ஆனால் சிறிலங்கா ஊடகம் ஒன்றில் இந்த அறிக்கையின் சில பகுதிகள் முன்கூட்டியே வெளியானது மிகவும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று .நா பொதுச்செயலரின் பேச்சாளர் பணியகம் அறிவித்துள்ளது.
***************

அனைத்துலக விசாரணைக்கு அனுமதி இல்லை - பீரிஸ்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணைக்குழுவை அமைக்குமாறு பிரித்தானியப் பிரதமர் கோருவதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
பிரித்தானியப் பயணத்தை முடித்துள்ள அவர், கொழும்பு ஊடகம் ஒன்றின் இலண்டன் செய்தியாளருக்கு இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் கேட்பதாக பிரித்தானிய ஊடகங்களில் அவ்வப்போது, வெளியாகின்ற செய்திகள் தவறானவை என்றும் இது ஒரு கற்பனை. சிலர் இதனை பரப்புரை செய்கிறார்கள். பிரித்தானியா ஒருபோதும் அனைத்துலக விசாரணையை கேட்கவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நம்பகத்தன்மையானதும் காத்திரமானதுமான விசாரணை பற்றியே பேசுகின்றனர்.
சிறிலங்கா அரசாங்கம் நம்பகத்தன்மை வாய்ந்த- காத்திரமான விசாரணைகளை நடத்துவதற்கே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்துள்ளது.
இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து பிரித்தானிய அரசுக்கு விபரமாகக் கூறியுள்ளதாகவும், எந்தவொரு .நா குழுவும் சிறிலங்காவில் விசாரணைக்கு வராது. இந்த விடயத்தில் சிறிலங்காவின் நிலைப்பாடு தெளிவானது, உறுதியானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
******************

சட்டங்களை மீறும் இந்திய மீனவர் - ஸ்ரீலங்கா அமைச்சர்

இந்திய மீனவர்கள் சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் நுழைவது அனைத்துலக சட்டங்களை மீறுகின்ற செயல் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
இந்திய மீனவர் சங்கப் பிரதிநதிகளுடன் கொழும்பில் நடத்திய சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளன.
இதனை சிறிலங்கா மீனவர்களின் ஊடுருவலுடன் ஒப்பிட முடியாது.
இன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைவது அனைத்துலக சட்டங்களையும், .நா பிரகடனங்களையும் மீறுகின்ற செயலாகும்.
இந்திய மீனவர்கள் சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பது தமது நாட்டின் சட்டத்தையும், அனைத்துலக கடல்சார் பிரகடனங்களையும் மீறுகின்ற செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவது அதிகளவில் இடம்பெறுகிறது.
இதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
***************