Thursday 28 April 2011

செய்திகள் 28/04


ஐநா அறிக்கை மீது விசாரணையை வலியுறுத்தும் பிரித்தானியா

இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியா, .நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஸ்ரீலங்கா பதிலளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிபுணர் குழு அறிக்கை சுயாதீனமான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதுடன் நிபுணர் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியமானது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
*****************

அறிக்கைக்கு எதிராக ஆதரவு திரட்ட இந்தியாவுக்குப் பயணம்?

.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக ஆதரவு திரட்டும் நோக்கில் சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவொன்று மிகவிரைவில் இந்தியா செல்லவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மிகவிரைவில் இரு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையில் .நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெருக்கடியான இந்தக் கட்டத்தில் சிறிலங்காவின் தலைவர்கள் சிலர் இந்தியாவுக்குச் சென்று பேசுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில், .நாவின் போர்க்குற்ற அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், இதுதொடர்பாக சிறிலங்காவுடன் பேசப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக, சிறிலங்காவின் அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழு புதுடெல்லி செல்வதற்கு விரும்பியதாகவும், ஆனால் அவர்களை சந்திக்க இப்போதைக்கு நேரமில்லை என்று இந்தியா கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
******************

பொது மக்களின் இழப்பு குறித்து முழுமையான தகவல்களை பெறமுடியவில்லை - ஐநா
ஸ்ரீலங்கா அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக .நாவினால் துல்லியமான விபரங்களைப் பெறமுடியவில்லை என்று .நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி தெரிவித்துள்ளார்.
நேற்றுமாலை நியுயோர்க்கில் அவர் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களால், அந்த நேரத்தில் .நாவின் பணியாளர்களை சிறிலங்காவில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து தாம் விலக்கிக் கொள்ள நேரிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துல்லியமான இழப்பு விபரங்களை தம்மால் திரட்ட முடியாது போனது எனவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் .நா பணியாளர்களுக்கு அங்கே பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில், இழப்புகள் பற்றிய விபரங்களை அவர்களால் திரட்டக் கூடிய நிலை இருக்கவில்லை.
நிபுணர்குழுவின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக .நா பொதுச்செயலர் பான் கீ மூன் விரைவில் தமது மூத்த ஆலோசகர்களுடன் மீளாய்வு செய்யவுள்ளார் என்றும் மார்ட்டின் நெர்ஸ்க்கி மேலும் தெரிவித்துள்ளார்
****************

அறிக்கை குப்பைத் தொட்டியில் வீசப்படும் - ஸ்ரீலங்கா அமைச்சர்
அரசாங்கம் என்ற ரீதியில் பான் கீ மூனின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதால் அறிக்கையை குப்பைத் தொட்டியிலேயே வீச வேண்டி ஏற்படும் என்று நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
. நா. செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை தாம் நிராகரிப்பதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார்.
விசாரணை செய்ய செயலாளர் நாயகத்துக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு உத்தியோகபூர்வமாகக் கோரியவர் யார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசுத் தலைவரோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை எனவும் சுயாதீனமாக இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமை இல்லை என்றும் கூறிய அவர் அத்துடன் இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அறிக்கையொன்றை நாடொன்று நிராகரித்ததன் பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணைகளில் ஈடுபடாது என்றும் அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
*****************

விசாரணைக்கு ஸ்ரீலங்காவை வற்புறுத்த முடியாது - ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.

இலங்கையில் நடைபெற்ற எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் எந்தவொரு விசாரணைக்கும் தங்களை யாரும் வற்புறுத்த முடியாது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் {ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் வானொலி சேவையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே லக்ஷ்மன் {ஹலுகல்ல இவ்வாறு கூறியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்தவொரு சுயாதீன அமைப்புக்கும் விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அவ்வாறான ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென எவரும் ஸ்ரீலங்காவை வற்புறுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை காட்டி ஸ்ரீலங்காவை அடிமைப்படுத்த .நா.வுக்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
******************

ஐநாவுடன் நல்லுறவு - ஸ்ரீலங்கா அமைச்சர்

ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
.நா.வுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமான உறவு நிலவுகின்றது எனவும் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாடுகள் ஸ்ரீலங்காவின் பக்கத்தில் நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலோ அல்லது பான் கீ மூனுக்கும் தமக்கும் இடையிலோ எவ்விதமான தனிப்பட்ட பிரச்சினையுமில்லை எனவும் தெரிவித்தார்.
செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் செயற்பாட்டையே தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருப்பதை தாங்கள் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா உள்ளிட்ட பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் இந்த அறிக்கை சவால் விடுத்துள்ளது என்பதனை வலியுறுத்துவதாகவும் எனவே உலக நாடுகள் இந்த அறிக்கை விடயத்தில் தவறான முன்னுதாரணத்தை வெளிக்காட்டிவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
********************