Wednesday 6 April 2011

செய்திகள் 05/04


தேசவிடுதலைக்கான வீரர்களை நினைவுகூருவோம்.

உலக வல்லாதிக்க சக்திகளின் உறுதுணையுடனும் ஆசீர்வாதத்துடனும் பெருமெடுப்பில் படைக்கலப் பிரயோகத்தை மேற்கொண்டு தமிழீழ தாயகம் மீது சிங்களம் தொடுத்த கொடிய நில ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொண்டு களமாடி வீரகாவியமாகிய வீரமறவர்களின் நினைவு நாள் இன்று.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இதயமாக விளங்கும் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், முள்ளிவாய்கால் பகுதிகளில், 2009ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ அன்னையின் மானம்காக்க நெருப்பு மழையில் களமாடி, எமது வீரத்தளபதிகளும், வீரவேங்கைகளும் விதையாக வீழ்ந்தார்கள்.

பல்குழல் பீரங்கிக் கணைகளையும், ஆட்லறி எறிகணைகளையும், நச்சுவாயுக் கணைகளையும், எரிகணைகளையும் மழையெனப் பொழிந்து ஆனந்தபுரம் நோக்கி முன்னேறிய சிங்களப் படைகளை தீரமுடன் எதிர்கொண்டு எமது வீரமறவர்கள் களமாடினார்கள்.

சாவு நிச்சயம் என்று தெரிந்த பொழுதும்கூட எதிரியிடம் மண்டியிடாது, உயிரைத் துச்சமென மதித்துத் தமது இறுதிமூச்சு அடங்கும் வரை அடங்காது வீரப்போர் புரிந்து, அடங்காப்பற்றாக விளங்கும் வன்னி மண்ணில் வீரசுவர்க்கம் எய்தியவர்கள் எமது வீரமறவர்கள்.

தமிழீழ மண்ணில் பல களங்களைக் கண்டு வீரவரலாறு படைத்தவர்கள் இவர்கள். சங்கத் தமிழரின் வீரத்தை நவயுகத்தில் மீண்டும் பொன்னெழுத்துக்களால் பதிப்பித்தவர்களும் இவர்களே.

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் பிரிகேடியர் கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

இவர்களை இன்று தமிழீ மக்கள் அனைவரும் தம் நெஞ்சத்தில் நிறுத்தி வணங்கும் நாளாகும்.
**************

பேசுவது என்ன?

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, தமிழ் அரசியல்கைதிகள், மற்றும் காணாமல் போனோர் தொடர்பாகவே எதிவரும் 07 ஆம் திகதி ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுக்களின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் அரசியல் தீர்வுத்திட்டம் பற்றி பேச்சு இடம்பெறாது என்றும் 27ஆம் திகதி நடைபெறும் பேச்சுக்களின் போதே இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சு ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
*****************

ஸ்ரீலங்காவுக்கு நிதியுதவி


இலங்கைக்கு ஆறாவது பகுதிக் கடனை வழங்குவதற்குச் சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தது.

இதனடிப்படையில் 218.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் சர்வதேச நாணய நிதியத்தினால் இந்த கடனுதவி வழங்கப்படுகின்றது.
********************

அரச படைகளுக்கு இடையில் மோதல்


களுத்துறையில் நேற்று காவல்துறை விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் மற்றும் காவல்துறையினருக்குமிடையில் இடம்பெற்ற மோதல் நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து பதற்றம் தணிந்துள்ளது.

இம்மோதலினால் 11 பேர் காயமடைந்த நிலையில் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினர், விமானப் படையினர் உள்ளடங்கலாக 45 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஆரம்பமான இம்மோதல் நேற்று நண்பகல் வரை நீடித்துள்ளது.

இம்மோதல் காரணமாக களுத்துறை கிராமமொன்றில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.

வீடுகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதுடன் பல முச்சக்கர வண்டிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் விமானப்படையதிகாரி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாய்த்தர்க்கமே இறுதியில் முத்தரப்பினருக்குமிடையிலான மோதலாக உருவெடுத்திருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மோதலில் களுத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது உடல்நிலை தேறி வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்டிருக்கும் 45 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மோதலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குழுவொன்று அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடி அவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதையடுத்து அப்பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது.
********************

கப்பம் பெற்றவர்கள் யார்?


கடந்த ஒரு வருட காலத்துக்குள் கப்பம் கோரி மிரட்டல் விடுத்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் கையில் சிக்கவிருந்த 15 கோடி பணமும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் 2011ம் வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் வரை கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட முக்கிய வர்த்தர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் பெரும் தொகை பணம் கப்பமாக கோரப்பட்டிருந்தது.

ஏழு கோடி, மூன்று கோடி, எழுபத்தி ஐந்து இலட்சம், ஐம்பது இலட்சம் என்றவாறாக சுமார் பதினைந்து கோடிக்கும் அதிகமான தொகை அவர்களிடம் கப்பமாக கோரப்பட்டிருந்தது.

இராணுவ சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள், பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்கள் ஆகிய பல்வேறு தரப்பினரும் அவ்வாறு கப்பம் கோரும் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்தார்கள்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு தொலைபேசி வாயிலாக மிரட்டி கப்பம் கோரும் சம்பவங்கள் குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆயினும் கடந்த ஒரு வருட காலத்துக்குள் எந்தவொரு கப்பம் கோரலின் போதும் பணம் கொடுக்கவோ, கப்பம் கோரப்பட்டவர்களின் உயிர் உடைமைகளுக்கு சேதம் ஏற்டவோ இடமளிக்காது காவல்துறையினர் கப்பம் கோரியவர்களை சூட்சுமமாக வலைவிரித்துக் கைது செய்திருந்தனர்.

அதன் காரணமாக கப்பம் கோரியவர்களின் கையில் சிக்கவிருந்த பதினைந்து கோடிக்கும் அதிகமான பெருந்தொகைப் பணம் காப்பாற்றப்பட்டுள்ளது.
*********************

ஐநா அறிக்கைக்கு எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகளின் நிபுணர்களின் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்பிக்கும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

இதற்காக ஐக்கிய நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் அந்த குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இவற்றிற்கு பதிலாக ஆர்ப்பாட்டங்களை முன் எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் வரையறைகளை மீறி பான் கீ மூன் நிபுணத்துவக் குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.
*******************