Wednesday 27 April 2011

செய்திகள் 27/04


விசாரணைக்கு வலியுறுத்தும் நவநீதம்பிள்ளை

நிபுணர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என .நா. மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
.நாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்த இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த அறிக்கை வழி செய்கிறது என்றும் .நாவின் மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தமது அறிக்கையை ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் .நாவின் மூவர் குழு கோரியுள்ளது.
இறுதிகட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு ஸ்ரீலங்கா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவுகோலுக்கு அமைய ஸ்ரீலங்கா அரசு யுத்தத்தின் இறுதி நாட்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த நியாயமான ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூவர் குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.
*******************

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் மனித உரிமை கண்காணிப்பம்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் இணைத்துள்ள 16 செய்மதிப் படங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அக்குழு பரிந்துரைத்துள்ள யோசனைகளை பான் கீ மூன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நியூயோர்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஏபரல் 25 ம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளில் ஸ்ரீலங்கா அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ தடங்கலை ஏற்படுத்த தலையிட அனுமதிக்கக்கூடாது என்றும் கண்காணிப்பகம் கேட்டுள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கைப்படி ஸ்ரீலங்காப் படையினரும் விடுதலைப்புலிகளும் இறுதிப்போரின் போது சர்வதேச மனித உரிமைக்கோட்பாடுகளை மீறினர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் போர் நிறைவடைந்த கடந்த இரண்டு வருடக்காலப்பகுதியில் ஸ்ரீலங்கா அரசுத் தலைவர் ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு வழங்கிய உறுதிமொழியையும் நிறைவேற்ற தவறிவிட்டார்.
அதேநேரம் படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அரசுத் தலைவர் முன்வரவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் ரஸ்யாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக செயற்பட்டால், ஏனைய நாடுகள் நிபுணாட குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியதை ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மறுத்து வருகிறார்.
எனினும் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கையில் ஸ்ரீலங்காப் படையினர் மருத்துவமனைகள் மற்றும் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கான மூன்று பாதுகாப்பு வலயங்கள் ஆகியவற்றின் எறிகணை தாக்குதல் நடத்தியது தொடர்பான 16 செய்திமதிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியானவுடனேயே அதனை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
எனவே அந்த அரசாங்கம், நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில், உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று நம்பமுடியாது.
எனவே பான் கீ மூன் தமது நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து, சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய தலைவர் பிரட் அடம்ஸ் கோரியுள்ளார்.
******************

கண்டிப்பான நடவடிக்கைக்கு வலியுறுத்தும் அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கையின் அடிப்படையில் .நா கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் சாம் சரிபி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுக்க, சிறிலங்கா அரசு வெள்ளையடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை .நாவின் அறிக்கை போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களை யார் செய்தது, யாருக்கு என்ன செய்தது என்று முடிவு செய்வதற்கும், குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போரின்போது இரண்டு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க .நாவின் விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதை .நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சாம் சரிபி கேட்டுக் கொண்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்த்தில் அதிலிருந்து தப்பிய சாட்சிகள் மிகப் பயங்கரமான காட்சிகளைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
காயங்கள் அடைந்தும் வாழ்க்கையை இழந்தும் போயுள்ளனர்.
உணவு, மருத்துவ வசதிகள், குடிநீர் என்பன அவர்களுக்குக் கிடைக்காமல் பிடுங்கிக் கொள்ளப்பட்டன.
போர் வலயத்தில் இருந்து தப்பிய அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் பரிதாபகரமான நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகள் கழிந்தும் பலர் இன்னமும் குற்றச்சாட்டுகள் ஏதும் சுமத்தப்படாமல் தடுப்பில் உள்ளனர்.
அவர்களுக்கான நீதியை நாம் எப்படி மறுக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகளாலும் சிறிலங்கா அரசினாலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக அனைத்துல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலமே சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
****************

தடுமாறி சமாளிக்க முனையும் பான் கீ மூன்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விஜய் நம்பியாரின் பங்கு தொடர்பாக பான் கீ மூனிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவிச் சென்றுள்ளார்.
பொதுமக்கள் இழப்புகள் பற்றிய சரியான புள்ளிவிபரங்களைத் திரட்டி, போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இருந்த வாய்ப்பை .நா பயன்படுத்தத் தவறியுள்ளதாக நிபுணர்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறித்து .நா பொதுச்செயலரிடம் இன்னர் சிற்றி பிரஸ் நேற்றுக் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளித்துள்ள பான் கீ மூன், .நா பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க சிறிலங்கா அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு நிலைமை நிச்சயமற்றதாக- மிகவும் மோசமானதாக இருந்தது.
அங்குள்ள ஐநாவின் பணியகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியது.
அந்த நேரத்தில் சிறிலங்காவின் ஆலோசனைப்படியே தம்மால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் வெள்ளைக்கொடிக் கொலைகள் விவகாரத்தில் வகித்த பங்கு தொடர்பாக இன்னொரு கேள்வியை இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் எழுப்பியிருந்தது.
அதற்குப் பதிலளித்துள்ள பான் கீ மூன், அந்த நேரத்தில் சிறிலங்காவில் இருந்த .நா பணியகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக தாம் மீளாய்வு செய்ய முயற்சிப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தனது மூத்த ஆலோசகர்களுடன் கலந்துரையாடச் செல்லவுள்ளதாகவும் நழுவலான பதிலை அளித்துள்ளார்.
**********************

பாதுகாப்பு பேரவையில் இந்தியா எதிர்ப்பு - சொல்வது வாசுதேவ நாணயக்கார
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை பாதுகாப்புப் பேரவையில் விவாதம் செய்யப்படுவதற்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை அமர்வுகளின் போது நிபுணர் குழு தொடர்பான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாமென இந்தியா கோரியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டுமாயின், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*****************.

எதிர்ப்பதற்கு கட்சிகளை ஒன்றியைக் கோரும் சிங்கள ஊடகம்
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக நாட்டின் அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டுமென திவயின சிங்களப் பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதனை அரசாங்கத்திடம் பொறுப்பளித்து வேடிக்கை பார்ப்பது பொருத்தமாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்ஷ போன்ற சிறந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனையோர் பான் கீ மூனின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் சாடுகின்றனர்.
புல்லைப் பற்றிப் பிடித்தேனும் பிரச்சாரம் மேற்கொள்ளக் காத்திருக்கும் விடுதலைப்புலி ஆதரவு அமைப்புக்களுக்கு இந்த அறிக்கை பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் சாதனை படைத்து வரும் மேற்குலக நாடுகள் இந்த நிபுணர் குழு அறிக்கையின் மூலம் மற்றுமொரு சூடானையோ அல்லது கொசோவோவையோ உருவாக்க முடியும் என்ற கனவில் இருக்கக் கூடுமென ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பான் கீ மூன் மற்றும் அவரது குழுவின் நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் இந்த சக்திகள் காலப்போக்கில் வீட்டுப் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************