Friday 1 April 2011

செய்திகள் 01/04


குடும்ப ஆட்சியில் குழப்பம்

குடும்ப ஆட்சி மூலம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருந்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் கூட்டிணைந்து செயற்படுவதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவிப்பதாக லங்கா வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டள்ளது.

இந்த கூட்டணியில் இருந்த பசில் ராஜபக்ஷ ஒரங் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாம் வகிக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு தற்சமயம் இடமளிக்காமையே இவர் விலகியுள்ளமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதிய செயற்றிட்டங்களுடன் வருகை தரும் எவரையும் பசில் ராஜபக்ஷ சந்திப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், பசில் மீது விழுந்த வெட்டுக்களில் முக்கிய அம்சமாக, நிதியமைச்சில் பசில் ராஜபக்ஷவின் செயற்றிட்டங்களுக்கான நிதி வழங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆரியரட்ன என்பவரை காரணம் எதுவும் இன்றி அரசுத் தலைவர் பதவி விலக்கியமை அமைந்துள்ளது.

ஆரியரட்ன கடந்த காலங்களில் மூவாயிரம் கோடி ரூபாய்க்கான பசில் ராஜபக்ஷவின் செயற்றிட்டங்களுக்கு பொறுப்பு கூறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரியரட்னவை விரட்டிவிட்டு அவரின் பொறுப்புக்கு நிதியமைச்சின் செயலாளரான பீ.பி.ஜயசுந்தர நியமிக்கப்பட்டமையும், அவர் பசில் ராஜபக்ஷ கூறும் எந்தவொரு விடயத்தையும் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-------------------------

சட்டவிரோத கட்டங்கள் அகற்றல்

பொரளை சத்திசிறிபுர பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இன்று இடித்து அகற்றப்பட்டன.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள குறித்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு குடியிருப்பாளர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் அவர்கள் அறிவுறுத்தலை பின்பற்றாமையால் வீடுகள் இடித்து உடைக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சத்திசிறிபுர பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கங்களைக் கருத்திற் கொண்டே சட்டவிரோத குடியிருப்புக்கள் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளத
--------------

லிபியா மீதான தாக்குதலை கண்டித்து ஸ்ரீலங்காவில் ஆர்ப்பாட்டம்


லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் கிழக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஏறாரில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்பு மீரா ஜூம்மா பள்ளிவாசல் முன்பாக கூடிய முஸ்லிம்கள் பிரதேச செயலகம் வரை பேரணியொன்றை நடத்தினார்கள்.

மேற்குலக நாடுகள் லிபியாவில் தொடுத்துள்ள வான் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த தாக்குதல்களை நிறுத்தக் கோரி மகஜரொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்த்திற்கு தலைமை தாங்கிய ஏறாவூர் ஜாமி - அத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.சி.அப்துல் மஜீத்
அரபு நாடுகளில் காணப்படுகின்ற வளங்களை அமெரிக்காவும் அதன் நேச நாட்டு படைகளும் சூறையாடி தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற யுத்தமே தவிர இது மக்களை மீட்பதற்கான யுத்தம் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
------------------

வடமாராட்சியல் அதிகரிக்கும் இராணுவ கெடுபிடி

வெளிஇடங்களிலிருந்து யாராவது வீட்டிற்கு வந்தால் உடனடியாக இராணுவத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் இராணுவத்தின் அனுமதியுடனேயே வெளியார் தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கு உடுத்துறை கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் பொதுமக்கள் அனைவரையும் கிராமசேவை உத்தியோகத்தர் காரியாலயத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டனர்.

இந்த சுற்றிவளைப்பில் கட்டைக்காட்டில் உள்ள 55ஆவது பிரிக்கேற் இராணுவ அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.

அதிகாலையில் கிராமசேவை உத்தியோகத்தர் காரியாலயத்தில் கூடிய மக்கள் நண்பகல்வரை அங்கு காத்திருந்தனர்.

வீடு வீடாக சோதனை நடத்திய இராணுவத்தினர் நண்பகலுக்கு பின்னர் உடுத்துறை கிராம மக்களுக்கு கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அக்கூட்டத்தில் 55ஆவது படைப்பிரிவின் இராணுவ உயர்அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதாகவும், இந்த பகுதி உயர்கண்காணிப்புக்கு உட்பட்ட பகுதி என்றும் வெளியாரை இங்கு அனுமதிக்க கூடாது என்றும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

உறவினர்கள் நண்பர்கள் யாராவது வெளியிடங்களிலிருந்து வந்தால் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் முக்கியமாக இரவில் யாரையும் தங்குவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் இராணுவத்தினர் உத்தரவிட்டனர்.

தவிர்க்க முடியாது தங்கவேண்டி ஏற்பட்டால் தங்குபவரின் முழுவிபரங்களையும் இராணுவ முகாமில் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்பே தங்க வைக்க வேண்டும் என்றும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
-----------------

யாழில் இராணுவ சோதனை அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் இனிமேல் இரவு 9 மணிக்குப் பின்னரும் நீடிக்கும் என யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சர்வ மதத் தலைவர்கள் குழுவினருடனான சந்திப்பின் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை காலமும் இரவு 6 மணிக்கு ஆரம்பமாகும் இராணுவத்தினரின் வீதிச் சோதனைகள் இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றுவிடும்.

அதன் பின்னர் செல்லும் வாகனங்களோ மோட்டார் சைக்கிள்களோ மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதில்லை.

குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட களவுகளும் கொலைகளும் பெரும்பாலும் பின்னிரவுகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதேவேளை நெடுந்தூர வாகனங்களும் இரவு 9 மணிக்குப் பின்னரே யாழ்.குடாநாட்டுக்குள் நுழைகின்றன.

இது தொடர்பாக பல தரப்பட்டவர்களாலும் இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறப்பட்டபோதும் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட நேரம் மட்டுமே வீதிச் சோதனை மேற்கொண்டு வந்தன.

இதனையடுத்தே தற்போது சோதனை நடவடிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன என இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------

உள்ளுராட்சி மன்றங்களை அச்சுறுத்தும் அரசு


இனி வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டம் தோல்வியுற்றால் அதன் தலைவர் அல்லது நகராதிபதியின் பதவி பறிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹொரணை நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் வைத்து சிரேஷ்ட அமைச்சர் ரத்தினசிரி விக்கிரமாநாயக்கவே அதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் அதன் தலைவர் மற்றும் நகராதிபதிகளின் பதவியைப் பறிப்பதற்கு ஏதுவான வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டங்கள் தோல்வியடைந்திருந்தன.

அவ்வாறு இனிமேல் நடக்காமல் இருக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தலைவர் மற்றும் நகராதிபதிகளை நெருக்கடிக்குள் வைத்திருக்க விரும்புவதையே அமைச்சர் விக்கிரமநாயக்கவின் கூற்று புலப்படுத்துகின்றது.
---------------------