Friday 8 April 2011

செய்திகள் 07/04


தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உயர் பாதுகாப்புவலயம், தடுப்பு முகாம்களில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக பேசப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

அரசதரப்பில் சிரேஷ்ட அமைச்சர்களான ரத்னசிறி விக்கிரமநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் தலைமையிலான குழுவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.சுமந்திரன், பொன்.செல்வராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அடுத்த சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெற உள்ளதாகவும் அதில் அரசியல் தீர்வுத் திட்டங்கள் குறித்து பேசப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-----------


அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக்கைச் சந்திப்பதற்கு தான் தயாரில்லை என்று அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கடும் தொனியில் மறுத்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை தொடர்பாக ரொபர்ட் பிளேக் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருவதும், அண்மையில் உலகத் தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடியதுமே அரசுத் தலைவரின் கோபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

அதன் காரணமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ரொபர்ட் பிளேக்கைச் சந்திப்பதற்கு தான் நேரம் ஒதுக்கத் தயாரில்லை என்று வலியுறுத்தியுள்ள அவர், அதற்குப் பதிலாக வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸைச் சந்திக்குமாறு அறிவித்துள்ளார்.

ஆயினும் வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போதைய நாட்களில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதன் காரணமாகவே ரொபர்ட் பிளேக்கின் இலங்கைக்கான விஜயம் தற்போதைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதே முறையில் கடும் தொனியிலான மறுப்பை முன்னை நாள் பிரிட்டன் வெளிநாட்டமைச்சர் அலிஸ்டெயார் பேர்ட்டி மற்றும் இலங்கைக்கான பிரிட்டனின் முன்னை நாள் தூதுவர் கலாநிதி டேவிட் ஹைஸ் ஆகியோர் விடயத்திலும் முன்னைய சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-------------


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டதாக கிடைத்த தகவல்களையடுத்து அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட 6000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் இவ் வருடத்திற்குள் முடிவடையும் என பிரதமர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 313 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். 

அவர்கள் சமூகத்தில் முறையான வகையில் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் அவரகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். 

70 வீதமானோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கையை தாங்கள் பூர்த்தி செய்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் ஏனையோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கை பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
----------------



ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான
நடவடிக்கையை மனித உரிமை மீறல் என அமெரிக்கா குற்றம்
சாட்டுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என அமைச்சர் அநுர
பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் மத்தியிலேயே மனித
உரிமை மீறல்களை மேற்கொண்டது எனவும் இதன்போது அதற்கு
எதிராக மேற்கு நாடுகள் எதுவும் குரல் கொடுக்கவில்லை என்றும்
ஸ்ரீலங்காவின் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது செயற்பாடு மனித உரிமை மீறலா அல்லது சுதந்திரமா
என்பதை வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்
ஊடாக கண்டுகொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
--------------------


இம் மாதம் 2ஆம் திகதி காணாமல் போன இராமேஸ்வரம்
மீனவர்கள் நான்கு பேரில் ஒருவரின் உடல் நெடுந்தீவில் கரை
ஒதுங்கியுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து கடலிற்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள்
நான்கு பேர் கடந்த 4ஆம் தேதி முதல் காணவில்லை என்று
முறைப்பாடு செய்யப்பட்டது.

இந் நிலையில், காணாமல் போன இவ் நான்கு மீனவர்களில்
ஒருவரான 42 வயதான விக்டஸ் என்பவரின் உடல் நெடுந்தீவில்
கரை ஒதுங்கியுள்ளதாக இராமநாதபுரம் மீனவர் சங்கத் தலைவர்
ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

இச் செய்தி இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இடையே பெரும்
பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய மூன்று மீனவர்களின் நிலைமை குறித்து இராமேஸ்வரம்
மீனவர்களுகக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளமையே இப் பதற்ற நிலைக்கு
காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன மீனவர்கள் எவரும் கடலில் மூழ்கி இறந்திருக்க
வாய்ப்பில்லை என இராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகின்றனர்.
விக்டஸ் சென்ற பெரும் படகு சிறிலங்கா கடற்படையினரால்
தாக்கப்பட்டு மூழ்கடிப்பட்டிருக்கலாம் என இராமேஸ்வரம் மீனவர்கள்
அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இம் மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில்
த.மி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மத்திய வெளிவிவகார
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி
வைத்துள்ளார்.

இக் கடிதத்தில் காணாமல் போன மீனவர்களின் உயிருக்கும்,
உடமைக்கும் எவ்வித ஆபத்தும் இன்றி அவர்களைப் பாதுகாப்பாக
மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ
கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
------------------


யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தை கிளிநொச்சியில்
விவசாய பீடத்துக்கு அருகில் ஆரம்பிப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக
மூதவையும், பேரவையும் இன்று தீர்க்கமான முடிவு எடுத்துள்ளது.

இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக பதிவாளரினால் உத்தியோக
பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட செய்தியறிக்கையில்
யாழ். பல்கலைக்கழகத்தின் மூதவையும், பேரவையும் பொறியியல்
பீடம் ஒன்றை கிளிநொச்சியில் ஸ்தாபிப்பது என்றும் அதற்கான
ஆரம்ப வேலைகளை இயன்றளவு விரைவில் தொடங்குவது என்றும்
தீர்மானித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால போர் முடிபுற்ற நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின்
மூதவையும், பேரவையும் தமது சமூகக் கடமையை நிறை வேற்றும்
நோக்குடனும் பீடத்தை அமைப்பதற்கு ஏற்படக் கூடிய
செலவீனங்களை குறைக்கும் நோக்குடனும் பொதுவான
செலவீனங்களை விவசாயப் பீடத்துடன் பங்கிடக் கூடிய
வாய்ப்பையும் முன்னைய குழுக்களின் பரிந்துரைகளையும்
கருத்திற்கொண்டு பொறியியல் பீடத்தை மிகவிரைவில்
கிளிநொச்சியில் விவசாய பீடத்துக்கு அருகில் தொடங்குதவதற்கான
முடிபை எடுத்துள்ளதுடன் அதற்கான விபர அறிக்கையை
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அனுமதிக்கு ஓரிரு
வாரங்களில் சமர்ப்பிப்பதென முடிபு செய்துள்ளது எனவும் அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------