Saturday 23 April 2011

செய்திகள் 23/04


தாமதமாகும் ஐநா அறிக்கை

.நா நிபுணர்குழுவின் அறிக்கை ஈஸ்டர் விடுமுறைக்குப் பின்னரே வெளியிடப்படும் என்று .நா பொதுசெயலரின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த அறிக்கை இந்தவாரம் வெளியிடப்படும் என்று நேற்றுமுன்தினம் மாலை பர்ஹான் ஹக் கூறியிருந்தார்.
எனினும் ஈஸ்டர் விடுமுறைகளுக்கு பின்னர் அடுத்தவாரமே நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் தற்போது அறிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டாம் என்று .நாவிடம் கேட்டுக் கொண்ட போதும் அந்த வேண்டுகோளை .நா நிராகரித்துள்ளது.
நிபுணர்குழுவின் அறிக்கை முழுமையாக- திருத்தங்கள் ஏதும் செய்யப்படாமல் விரைவில் வெளியிடப்படும் என்பதில் .நா உறுதியாக இருப்பதாகவும் பர்ஹான் ஹக் மேலும் கூறியுள்ளார்.
****************

பங்கேற்க மறுக்கும் ஆணைக்குழு

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பங்கேற்கப் போவதில்லை என உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழு அறிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் உறுப்பினர் எச்.எம் பலிஹக்கார, நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கும் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் பதிலளிப்பது பொருத்தமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுத் தலைவரினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு சுயாதீனமான செயற்பட்டு வருவதாகவும், அதன் உறுப்பினர்கள் வேறும் ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பது பொருத்தமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
**************

எதற்கும் தயார் - ஹெகலிய
.நா நிபுணர்குழுவின் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்தால், வீட்டோ அதிகாரம் மூலம் அதைத் தோற்கடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நிபுணர்குழுவின் அறிக்கை .நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வரப்பட்டால் கூட தாம் கவலைப்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
பாதுகாப்புச்சபையில் அங்கம் வகிக்கும் பலம்வாய்ந்த தமது நட்பு நாடுகளான சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகளைக் கொண்டு அதை எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.
சிறிலங்காவுக்கு எதிரான எந்தவொரு விவகாரத்தையும் தோற்கடிக்க இந்த நாடுகள் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
***************

பதிலளிக்க ஆளும் கட்சி தீர்மானம்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு பதில் அனுப்பி வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் விரிவான பதிலை அளிப்பதற்கு இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என அரசுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை தொடர்பில் நட்பு நாடுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் பதில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ள அதேவேளை,
இராஜதந்திர ரீதியில் விளக்கமளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
*****************

இனப்பிரச்சனைத் தீர்வு அவசியம் - தயாசிறி

தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கம் விரைவாக தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டும் என தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்கின்றதா? அல்லது இல்லையா? என்பது முக்கியமல்ல.
அரசாங்கம் உடனடியாக தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதே முக்கிய தேவையாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதி பிரதம அமைப்பாளருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
மேலும் பான் கீ. மூனின் நிபுணர் குழுவின் அறிக்கை விடயத்தில் அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக செயற்படவேண்டும் எனவும் விமல் வீரவங்ச உதய கம்மன்பில மற்றும் தமது கட்சியினர் என அனைவரும் ஒன்றிணைந்து பான் கீ. மூனுடன் பேச்சுநடத்தவேண்டும்.
ஆனால் அதற்கு முன்னர் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியது அவசியமாகும் என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.
பான் கீ. மூனின் குழுவின் அறிக்கை வெளியிடப்படக்கூடாது என்று அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை மற்றும் ஆளும் தரப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை என்பன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் அரசாங்கம் இதுவரை தேசிய பிரச்சினை விடயத்தில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்காமல் இருக்கின்றது. பல தரப்பினர் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனல் அரசாங்கம் எவ்வாறன தீர்வை முன்வைக்கப்போகின்றது என்பது தொடர்பில் எந்த அறிவிப்புக்களும் இல்லாமல் உள்ளது.
எனவே, அரசாங்கம் விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கவேண்டியது அவசியமாகும்.
தற்போது அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றது. எனவே, விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியமாகும்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை விடயத்தில் அரசாங்கம் மிகவும் இராஜதந்திரமாக செயற்படவேண்டியது முக்கியமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
**************

அடுத்த கட்டப் பேச்சு 29ஆம் திகதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்ததை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்கனவே நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசுத் தலைவர் செயலகத்தில் எதிர்வரும் 29ம் திகதி ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ள விவகாரங்கள் பற்றி ஊடகங்களுக்கு தகவல் வெளியிடுவதில்லை என இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
*****************