Sunday 10 April 2011

செய்திகள் 09/04


மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் கிடையாது என மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 26 வருடங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய தரவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியிருந்தது
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்கள் பற்றிய தரவுகளும் பேணப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா இராணுவம் குறிப்பிடப்படுகிறது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
****************

அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் எழுந்துள்ளது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறையை அடக்கி, நாட்டில் மீண்டும் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் எழுந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் கூறினார்.
வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவாறு தற்போது ஊடக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக தேசிய, சர்வதேச ரீதியில் விரிவான வேலைத் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.
அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிரான அடக்குமுறைகளை மிக மோசமாக முன்னெடுத்து வருகின்றது.
மகிந்த ராஜபக்ஷவின் ஆரம்பத் காலத்திலேயெ ஊடகங்களுக்கெதிரான அடக்குமுறைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
ஊடகவியலாளர் பலர் கொலை செய்யப்பட்டனர்.
ஊடக நிறுவனங்களுக்கு தீவைக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப்பட்டனர். தற்போதும் ஊடகவியலாளர்கள் சிலர் காணாமல் போயுள்ளனர்.
தனக்குக் கட்டுப்படாத ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்கி ஒடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
**************
ஸ்ரீலங்கா அரசாங்கம் சோனியாவிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அண்மையில் சோனியா தமிழ் நாட்டு சட்ட சபை தேர்தலினை முன்னிட்டு பரப்புரை செய்தார்.
இதில் இலங்கைத் தமிழர்க்கு சமவுரிமை வழங்க யாப்பு சீர்திருத்தம் செய்யுமாறு தாம் ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார்.
ஆனால் ஸ்ரீலங்கா அரசோ அப்படி எந்த அழுத்தமும் தமக்கு தரப்படவில்லையென்றும் அவ்வாறாயின் சோனியாவிடம்தான் அவரது அறிக்கை தொடர்பில் விளக்கம் கேட்கவேண்டும் என கிண்டலடித்துள்ளது.
பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இதனைக் கூறியுள்ளார்.
இந்தக் கிண்டல் கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் மஹிந்தவை புறக்கணித்த ஆத்திரமாக இருக்குமோ என பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இந்தியாவை கடிந்துள்ளார்.
ஸ்ரீலங்காவை உதைபந்து போல் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
*****************
தாங்கள் ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்கும் எதிரானவர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
எமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை இராணுவத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க அரச விரோத செயல் என்கிறார் எனவும் அது கண்டித்துள்ளது.
இராணுவத் தளபதியின் மிரட்டல்களுக்கு தாம் ஒரு போதும் அடிபணியப் போவதில்லை என்று யாழ்.மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் சவால்விடுத்தார்.
பிரதமர் மாதாமாதம் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகின்றார்.
கடந்த மாதம் இந்தியாவில் புலிகள் இயக்கம் மூன்று முகாம்களை நடத்துகின்றது என்று கூறிய பிரதமர் இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த முறை புலிகள் இயக்கம் சர்வதேச வலையமைப்பில் செயற்படுகின்றது.
அமெரிக்காவில் இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
மீண்டும் புலிகளுக்குப் புத்துயிர் ஊட்ட முனைகின்றனர் என்று கூறுகின்றார். எப்படியோ ஒரு காரணத்தை பிரதமர் கண்டுபிடித்து விடுகிறார் என்றும் தெரிவித்தார்.
அனுபவமிக்க மூத்த தலைவர் சம்பந்தர் அவர்கள் தலைமையில் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதாக தெரிவித்த அவர் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. இப்பொழுதுதான் பிரச்சினைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு ஜனநாயக அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்வு காணத்தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அரசுக்கு முதன்முதலில் அறிவித்தது.
இந்த உண்மை புரியாத தளபதி ஹத்துருசிங்க தங்களைப் பார்த்து அரசவிரோத செயலுக்குத் துணைபோவதாக கூறும் அவரின் அறியாமைக்கு வருந்துவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
************

முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த ஆயிரத்து 778 குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இக்குடும்பங்களைக் குடியமர்த்த வேறு காணிகளை அடையாளம் காணுமாறு முல்லைத்தீவு அரச அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடம்பெயர்ந்த அனைவரும் இன்னும் ஒருசில மாதங்களில் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டு விடுவர் என்று அரசு கூறுகின்றது.
ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கட்டளைத் தளபதி ஆயிரத்து 778 குடும்பங்களுக்கு வேறு மாற்று இடங்களைத் தெரிவு செயும்படி அரச அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 778 குடும்பங்கள் தமது சொந்த வாழ்விடங்களை இழக்க நேரிட்டுள்ளது.
முல்லைத்தீவு கிழக்கில் 612 குடும்பங்கள், முல்லைத்தீவு வடக்கில் 538 குடும்பங்கள், அம்பலவன் பொற்கணையின் 628குடும்பங்கள் என்ற அடப்படையில் மொத்தமாக ஆயிரத்து 778குடும்பங்கள் முல்லைத்தீவிலிருந்தே வெளியேற்றப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
*******************
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேச மக்கள் தம்மை கிராம சேவகர் மூலமாகப் பதிவு செய்து கொள்ள வெண்டும் என்று சிறிலங்கா படைத்தரப்பினர் உத்தரவிட்டுள்ளனர்.
கிராம சேவகர் ஊடாக வழங்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களில் வீட்டிலுள்ள அனைவரது விபரமும் பதியப்பட வேண்டும் என சிறிலங்கா படைத்தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபரங்களில் போராளிகள் குறித்த விபரங்களும், போரின் போது உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் குறித்த விபரங்களும் பதியப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், சிறிலங்கா படைத்தரப்பினரின் இந்த கட்டளைக்கு அப் பகுதி மகக்ள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா இவ் விவகாரம் குறித்து மட்டக்களப்பு படையதிகாரியைத் சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இதன்போது வடபகுதியில் சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டாய பதிவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
******************