Monday 18 April 2011

செய்திகள் 17/04


பதில் வழங்குவது குறித்து முடிவு இல்லை - ஸ்ரீலங்கா அமைச்சர்

நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு அதிகாரபூர்வ பதில் அனுப்புவது பற்றி சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா கூறியுள்ளார்.
.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றி சிறிலங்கா அரசாங்கம் ஆராயந்து வருகிறது.
அடிப்படையற்ற இந்த அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது பற்றி சட்டநிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒரு சிறிய பத்திரிகை கூட சரியான தகவல்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கிறது.
ஆனால் இந்தப் பெரிய அறிக்கை அடிப்படையற்ற தகவல்களை உள்ளடக்கியமாக இருப்பது ஆச்சரியம் தருகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் பதிலைப் பெறும் நோக்கிலேயே அவருக்கு நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்று அனுப்பப்பட்டிருப்பதாக .நா பொதுசெயலரின் பணியகம் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.
அதேவேளை, .நா பொதுச்செயலரின் அறிக்கையை ஆராய்ந்து அதற்குப் பதிலளிக்கும் அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு சட்டமா அதிபர் மெகான் பீரிஸ் தலைமையில் முன்னாள் வெளிவிவகாரச் செயலர்கள் நிகால் றொட்றிகோ, பேனாட் குணதிலக, பாலிக்ககார ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*****************
ஐநாவுக்கு எதிராக சீனா ரஸ்யாவை நாடலாம் - கோத்தாபாய
.நா தனது அங்கத்துவ நாடு ஒன்றைப் பாதுகாக்க முன்வராது போனால், சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் பாதுகாப்பை நாட சிறிலங்கா நிர்ப்பந்திக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
சில நாடுகளால் .நா கடத்தப்பட்டு விட்டதாகவே தோன்றுகிறது எனவும் சிறிலங்கா .நாவின் உறுப்பு நாடு அதற்கு .நா பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்தஅறிக்கையானது ஏனைய நாடுகளிடம் பாதுகாப்புக் கோர தம்மை நிர்ப்பந்திக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சில நாடுகளால் .நா அடமானம் வைக்கப்படக் கூடாது. நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கைக்குப் பின்னால் அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்துள்ளது. விடுதலைப் புலிகளால் நிபுணர்கள் குழு சலவை செய்யப்பட்டுள்ளது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
அறிவில்லாத ஆய்வுகளை நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை விபரிக்கிறது. அவர்கள் சில மேற்குலக சக்திகளின் தாளத்துக்கு ஏற்ப பாடியுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
***************
ஆதரவை திரட்ட குழுக்களை அனுப்பும் ஸ்ரீலங்கா

.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்கு பல்வேறு நாடுகளுக்கும் சிறிலங்கா அரசு தூதுக்குழுக்களை அவசரமாக அனுப்பவுள்ளது.
.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பாரதூரமானதாக எடுத்துக் கொண்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்காவில் உள்ள பொதுநலவாய நாடுகளுக்கு தூதுக்குழுக்களை அனுப்பி விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க படைபலத்தைப் பயன்படுத்தியது ஏன் என்று விளக்கம் அளித்து, ,நா நிபுணர்கள் குழுவுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு ஆதரவு தேடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றையும் சிறிலங்கா அரசாங்கம் தயாரித்து வெளியிடவுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்புகள், தீவிரவாதம் அழிக்கப்பட்டதால் வடக்கு, தெற்கு மக்கள் அடைந்துள்ள பயன்கள், இறுதிக் கட்டப்போரின்போது எடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள், குறிப்பாக வன்னி, முல்லைதீவு பகுதிகளின் நிலைமைகள் குறித்த இந்த வெள்ளை அறிக்கையில் விபரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, .நா பொதுச்செயலரின் அறிக்கையை ஆராய்ந்து அதற்கு எதிரான அறிக்கை ஒன்றை தயார் செய்யும்படி சிறிலங்காவின் சட்டமா அதிபரை அரசாங்கம் கேட்டுள்ளது.
சட்டமாஅதிபருக்கு உதவுமாறு ஓய்வுபெற்ற வெளிவிவகாரச் செயலர்களான நிகால் றொட்றிகோ, பேனாட் குணதிலக, பாலிக்ககார ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
**************
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தவிர்க்க கட்சியினருக்கு உத்தரவு

.நா செயலாளர் நாயகம் பான் - கீ - மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கும் வரை அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து எதனையும் வெளியிட வேண்டாம் என அந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாததாலும், அது குறித்து அரசாங்கம் உத்தியோபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடாத நிலையிலும் அவசரமாக அறிக்கைகளை வெளியிடும் தேவையில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடு சென்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் அவர், இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்கு கட்சியின் மற்றுமொரு பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் தலைவர், கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி அழைத்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
************

அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் - நோர்வே அமைச்சர்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை நிச்சயம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும், இறுதிக் கட்டப் போரில் தமது உற்ற உறவுகளை இழந்தவர்களுக்கும் நடந்தவற்றுக்கான பதிலைத் தேடுவோருக்கும் அது அவசியமானது என நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹைம் வலியுறுத்தியுள்ளார்  
இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர் மீறல்கள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹைம் நோர்வேயின் யுகவநnpழளவநn நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.  
.நா நிபுணர் குழுவின் அறிக்கை இரகசியமாகப் பேணப்படுமாயின் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  
போருக்குப் பின்னான இன நல்லிணக்கம் தொடர்பான சிறிலங்காவின் செயற்பாடுகள் குறித்து மதிப்பிடுமாறு சூல்ஹைமிடம் கேட்ட போது, தமிழ் மக்களுக்கு நேசக் கரம் நீட்டுமாறும், ஒரு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்துமாறும் நோர்வேயும் வேறு பல நாடுகளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
******************
முகாமின் அனைத்துச் சிப்பாய்களும் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை தட்டமுனி இராணுவ முகாமைச் சேர்ந்த அனைத்து இராணுவ சிப்பாய்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாழைச்சேனை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இறுதிப் பகுதியில் வாகரைப் பிரதேசத்தில் பதினாறு வயது தமிழ் யுவதியொருவர் விறகு தேடிக் காட்டுக்குச் சென்றிருந்த போது இராணுவ சிப்பாய் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து பிரஸ்தாப யுவதி கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்த விடயம் வெளியே தெரிய வந்ததனையடுத்து செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து ஏறாவூர் காவல்துறையினர் வாழைச்சேனை மஜிஸ்திரேட் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்தே மஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தன்னை வல்லுறவுக்குட்படுத்திய சிப்பாயை மீண்டும் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட யுவதி காவல்துறையினருக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*****************