Monday 11 April 2011

செய்திகள் 11/04


நடவடிக்கை கோரி கடிதம்

யாழ் ஊர்காவற்துறை பங்குத் தந்தை ஜெயக்குமார் அடிகளார் மீது அழுக்கு நீர் வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யக் கோரியும் யாழ் அரசசார்பற்ற அமைப்புகளின் ஒன்றியம் யாழ் படைகளின் கட்டளையதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த சம்பவத்தை சமூகப் பிரச்சனைகளை பேசவிடாது எச்சரிக்கும் நடவடிக்கை என அந்த அமைப்பு கண்டித்துள்ளது.
அருட்தந்தை ஜெயக்குமார் இனந்தெரியாத சிலரால் அழுக்குநீர் வீசி நிந்திக்கப்பட்ட விடயம், யாழ்.குடாநாட்டில் பல்கலைக்கழக சமூகம், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் என சிவில் சமூகத்தின் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கிலிருந்து வந்த சர்வமத தலைவர்களுடனான சந்திப்பின்போது யாழ் குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படையாக அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார் கூறியிருந்ததாக யாழ் அரச சார்பற்ற அமைப்புகளின் இணையத்தின் தலைவர் வீ.கேசவன் தெரிவித்தார்.
அந்தக் கருத்துக்களை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
***************

அமெரிக்காவைக் கண்டிக்கும் ஸ்ரீலங்கா
அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளதென ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து உலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிப்பதாகவும் ஆனாலும் பாதிப்புக்குள்ளாகியோரென வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் அதிகம் சிங்களவர்களின் பெயர்களே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அறிக்கையை அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையாகவே காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒருசில மனித உரிமைக மீறல்களும் நாட்டின் தெற்கு பகுதியிலே இடம்பெறுவதாகக் கூறிய அவர், யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அக்காலக்கட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ள மிகவும் கடினமாக அமைந்ததெனவும் கூறியுள்ளார்
இதேவேளை, இலங்கையில் சட்டம் முறையாகப் பேணப்படுவதில்லை என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ரஜிவ் விஜேசிங்க முற்றாக மறுத்துள்ளார்.
அமெரிக்க இராஜங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மற்றும் ஒரு கருத்தான அரசுத் தலைவரின் குடும்ப ஆதிக்கம் என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை பெற்று அரசுத் தலைவரின் சகோதரர் பாராளுமன்றுக்கு தெரிவுசெய்யப்பட்டமை தவறென்றால் வாக்களித்தவர்கள் முட்டாள்களா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அரசுத் தலைவரின் மற்றுமொரு சகோதரரான பாதுகாப்பு செயலாளர் நாட்டுக்குரிய சிறிய நிலப்பரப்பில் சிறந்ததொரு சேவையை ஆற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
*******************
ஸ்ரீலங்காவுக்கு எதிராக சூழ்ச்சி - ஜே.என்.பி

ஸ்ரீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் அமெரிக்கா, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இந்தக் குற்ச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்கா இவ்வாறான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த சூழ்ச்சித் திட்டங்களுடன் வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதற்கு தமது கட்சி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.
******************
ஸ்ரீலங்கா குறித்த அமெரிக்க கலந்துரையாடல்
'சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புதல்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிறகியூஸ் பல்கலைக்கழகத்தின்மக்ஸ்வெல் அனைத்துலக விவகாரக் கல்லூரியின் தெற்காசிய நிலையம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா அரச மற்றும் அமெரிக்காவில் உள்ள தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 தொடக்கம் 2 மணி வரை மக்ஸ்வெல் அனைத்துலக விவகாரக் கல்லூரியில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
சிறிலங்கா அரசின் சார்பில் - .நாவுக்கான அதன் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன்னவும், அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை சார்பில் - கலாநிதி காருண்யன் அருளானந்தமும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் சமூக முரண்பாட்டு கற்கைகளுக்கான ஓய்வுபெற்ற பேராசிரியரும், முரண்பாடுகளுக்கான ஆய்வுகள் மற்றும் தீர்வு திட்டத்தின் நிறுவனப் பணிப்பாளருமான கலாநிதி எஸ்.கிறிஸ்பேர்க்கும் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் நேரலையாகக் காணமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் மக்ஸ்வெல் அனைத்துலக விவகாரக் கல்லூரியின் இணையத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படவுள்ளது.
**********
தொடரும் திட்டமிட்ட குடியேற்றம்

மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்டவகையில் பெரும்பான்மையின மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாகவுள்ள சில பகுதிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
இப்பகுதிகளை உள்ளடக்கிய முள்ளிக்குளம் கிராமம் கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக தகவல் மூலம் அறிய வருகின்றது.
முள்ளிக்குளம் பிரதேசம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீள் குடியேற்றம் இதுவரை மறுக்கப்பட்டு இதன் கரையோரப் பிரதேசங்கள் கடற்படைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது.
கொண்டச்சி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் முந்திரிகைச் செய்கைக்கு பெயர் பெற்றது.
யுத்தகால நடவடிக்கையின் காரணமாக முந்திரிகைச்செய்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் முற்றாக அழிக்கப்பட்டது என்றே கூற முடியும்.
தற்போது அப்பகுதியில் புனரமைப்பு என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் முயற்சிகள் அரச தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியவருகின்றது.
இவ்வாறு மடுவீதி மற்றம் மடுப் பிரதேசப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு, பெரும்பான்மைக் குடியிருப்புக்கள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறே கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மக்களின் மிகப்பபெரும் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ் குடா நாட்டில் அதிகாரத்திலுள்ளவர்களின் துணையுடன் பெரும்பான்மையினக் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோரால் கூட இதனை தட்டிக்கேட்க முடியாத நிலைமையே தொடர்ந்து காணப்படுகின்றது.
அதே நேரம் அம்பாறை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்கு சொந்தமான பெருமளவான நிலப்பரப்புக்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இல்லையேல் மக்கள் போராட்டத்தினூடாக கிள்ர்ந்தெழுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
***********
அரசியலமைப்புக்கு 19வது திருத்தம்
அரசியலமைப்பில் 18 ஆவது திருத்தத்தை கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக்கொண்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 ஆவது திருத்தத்திற்கான சட்டவரைபுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது அதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு முன்னரான இறுதி அமைச்சரவைக்கூட்டம் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் கடந்த புதன் கிழமை கூடியது.
சித்திரை புத்தாண்டிற்கு பின்னரான முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி சுபநேரத்தில் கூடவிருக்கிறது.
முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே அதற்கான அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அதற்கு ஏற்றவகையிலேயே சட்டவரைபுகளை தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமரே தாக்கல் செய்யவிருப்பதாகவும் அறியமுடிகிறது.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசுத் தலைவர் ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் அரசுத் தலைவராக முடியாது எனும் சரத்து நீக்கப்பட்டுள்ளதுடன் மூன்று மாதங்களுக்கு ஒருதடவை சபைக்கு வருகைதந்து உரையாற்ற முடியும் உள்ளிட்ட விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை 19 ஆவது திருத்தத்தில் நீதியரசரின் பதவிக்காலத்தை 5 வருடங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கும், சுயாதீன நீதிசேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுத் தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களே மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற 19 ஆவது திருத்தம் தொடர்பிலான சட்டமூலம் மே மாதத்தின் இரண்டாவது அமர்வின் போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
***************