Friday 15 April 2011

செய்திகள் 15/04


போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா விருப்பம்

ஐக்கிய நாடுகள் நிபுணர்களின் அறிக்கையை கொண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களை கண்டறியப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
அரசுத் தலைவர் பரக் ஒபாமாவின் நிர்வாகம் இதனை விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்திநிறுவனமான இன்னர் சிட்டி பிரஸிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரின் போது இடம்பெற்ற யுத்த மீறல்கள் குறித்து ஆராய ஸ்ரீலங்கா அரசாங்கம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று மார்க் டோனர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தலைவர் நல்லிணக்க ஆணைக்குழு நல்ல ஆரம்பமாகும்.
எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என மார்க் டோனர் குறிப்பிட்டுள்ளார்.
*****************
அமெரிக்க காங்கிரஸின் அழுத்தம்

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக்கேல் கிறிம் புதிய மிகவும் காத்திரமான தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என காங்கரஸ் உறுப்பினர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகள், அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் மனித உரிமை அறிக்கை, .நா போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை ஆகியன தொடர்பில் ஒபாமா நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
****************
யுத்தக் குற்றம் குறித்த புதிய ஆதாரம்
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீலங்காப் படையினர் வன்னியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு மற்றும் ஒரு சான்று கிடைத்துள்ளது.
கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாகக் காட்டமுடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள ...எஸ் எனப்படும் நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது செய்மதிகளின் மூலம் யுத்த நிலவரங்களைச் சேகரித்துள்ளார்.
சுமார் 15 மணித்தியாலங்களாகச் சேகரித்த இந்த தகவல்கள் மூலம் வன்னியில் ஏற்கனவே பொதுமக்கள் ஒன்றுகூடிய இடங்கள், விடுதலைப்புலிகளின் மயானங்கள், பொதுக்கட்டடங்கள் என்பவற்றின் மீது படையினர் தாக்குதல் நடத்தியமையை அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில் செய்மதிப் படங்களின் மூலம் ஸ்ரீலங்காப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களின் மீதே தாக்குதல் நடத்தியதாக நம்புவதாக புரொம்லி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது படையினர் பொது மக்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை என்று ஸ்ரீலங்கா அரசு மறுப்பு வெளியிட்டு வருகிறது.
எனினும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை ஒப்புவிக்க முடியும் என்று " கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ்" என்ற இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
****************

சர்வதேசப் பொறிமுறைக்கு பரிந்துரை
இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேசப் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமென்று .நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை .நா.செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவானது கடந்த எட்டு மாதங்களாக விசாரணை செய்து வந்தது.
அதன் பின் அக்குழுவின் உத்தியோகபூர்வ அறிக்கை அண்மையில் .நா. செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமும் இன்னொரு பிரதி வழங்கப்பட்டுள்ளது.
.நா. நிபுணர் குழு கையளித்துள்ள பிரஸ்தாப உத்தியோகபூர்வ அறிக்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்றுள்ள போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக சர்வதேச பொறிமுறையொன்றை அமைக்குமாறு .நா.செயலாளர் நாயகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
**************

யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் 70,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், சிறீலங்கா அரசின் தடை முகாம்களில் இருந்த 13,130 பேர் காணாமல்போயுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சிராகோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துப்பட்டறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் நாள் நடைபெற்ற இந்த கருத்துபட்டறையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமைதி முயற்சிக்கான தமிழர் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி காருண்யன் அருள்நாதன் ஆற்றிய உரையிலோயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,000 தமிழ் மக்களும், மே மாதம் 9 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் 25,000 தமிழ் மக்களுக்கு கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************

எதிர் பிரச்சாரத்துக்கு பரிசு

.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிடும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களுக்கும் பணப்பரிசுகளை வழங்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக கருத்து வெளியிடும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 1 கோடி ரூபாவையும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு தலா 75 இலட்சம் ரூபாவையும் பணப்பரிசாக வழங்குமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையை விமர்சித்து கட்டுரைகளை எழுதும் தனிப்பட்ட நபர்கள், மற்றும் நிறுவனங்களுக்கும் பணக் கொடுப்பனவுகளை வழங்குமாறும், இதற்கான கொடுப்பனவுகளை பாதுகாப்பு அமைச்சின் இரகசியக் கணக்கில் பேணுமாறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
அதேவேளை, .நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரான பரப்புரைகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி அரச ஊடகங்களின் தலைவர்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக சஜித் பிறேமதாச, தயாசிறி ஜெயசேகர, சுஜீவ சேனசிங்க, புத்திக பத்திரன, ஜோன் அமரதுங்க, கபீர் காசிம் போன்ற ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைப் பெற்று பரப்புரை செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசுக்கு ஆதரவான பல தனியார்துறை ஊடகங்களின் பிரதானிகளிடமும் இதுபோன்று .நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ள உதவுமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
*************