Friday 8 April 2011

செய்திகள் 08/04


காணாமல் போனவர்கள் தொடர்பிலான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வெறுமனே நிராகரிக்காமல், அவற்றுக்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட சகலர் தொடர்பிலும் தரவுகளை வெளியிட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
---------------

 புலம் பெயர் நாடுகளில் வன்முறை மூலம் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களை அச்சுறுத்த முற்படுகின்றார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் தாயகமண்ணில் சிறிலங்காஅரசினால் நசுக்கப்பட்டபோதும், புலம் பெயர் தேசங்களில் ஜனநாயக வழியில் உலகசட்டங்களின் அடிப்படையில் சிறப்பாக முன்நகர்வதைப் புரிந்து கொண்ட, தமிழ் மக்களின் தேசிய நலன்களுக்கு எதிரானவர்கள் புலம் பெயர் நாடுகளில் வன்முறை மூலம் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களை அச்சுறுத்த முற்படுகின்றார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் தமிழ் மக்களால் நிறுவப்பட்ட அமைப்புக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கமைய ஐனநாயகரீதியான செயற்பாடுகளை முழுமூச்சாக மேற்கொண்டிருக்கும் இந்தவேளையில் வன்முறை மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி, மிரட்டும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அடிபணியமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது பொது எதிரிக்கு எதிராக பரந்து பட்ட முன்னணியை கட்டியெழுப்பப்பாடுபடும் பிரித்தானிய தமிழர் பேரவை, கருத்து வேறுபாடுகளுக்காகவோ அல்லது வேறு சூழ்ச்சிகளுக்காகவோ தனிநபர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது.
இப்படிச் செயற்படும் அமைப்புக்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ எந்த சூழ்நிலைகளிலும் தமிழ் மக்களின் ஆதரவுகிடைக்காது என்பதை பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்கள் சார்பாக வலியுறுத்த விரும்புகின்றது.
அண்மையில் பிரித்தானியாவில் இடம் பெற்ற செயற்பாட்டாளர் மீதான தாக்குதல், கருத்து முரன்பாடுகளை அச்சுறுத்தல் மூலம் மிரட்டிப் பணியவைக்கலாம் என்பதற்காகவோ அல்லது தமிழர் அல்லாதமக்கள் தமிழ்மக்களை வன்முறையாளர்கள் என்று கருதவேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ செயற்படுத்தப்பட்டதாக கருதவேண்டிஉள்ளது எவ்வாறாயினும் இதன் விளைவுகள் சிங்கள ஒடுக்கு முறையாளர்களின் நோக்கங்களை பலப்படுத்துவதாகவே அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-------------
இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து ஆராயும் என்பதுடன் உரிய பதிலை வழங்கும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
சர்வதேசமட்டத்தில் சில தரப்பினர் கூறுவது போன்று இலங்கையில் எந்தவிதமான மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை.
அதாவது சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் எந்த உரிமை மீறலும் இடம்பெறவில்லை.
அத்துடன் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் கூற்றுக் குறித்தும் வெளிவிவகார அமைச்சு உரிய பதிலளிக்கும் என்றும் யாப்பா தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்களுக்கு புதிய சுதந்திரத்தையும் சமாதானத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கல்நதுகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
---------------

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேச மக்கள் தம்மை கிராம சேவகர் மூலமாகப் பதிவு செய்து கொள்ள வெண்டும் என்று ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.
கிராமசேவகர் ஊடாக வழங்கப்படுகின்ற விண்ணப்பப் பத்திரங்களில் வீட்டிலுள்ள அனைவரது விபரமும் பதியப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விபரங்களில் முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களும் அங்கவீனமானவர்கள் பற்றிய விபரங்களும் பதியப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும் என இராணுவம் விடுத்த உத்தரவுக்கு இப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு இராணுவ அதிகாரியைத் சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்றம் இப்பதிவுக்கு எதிராக விதித்த தீர்ப்பையும் அவர் இது தொடர்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.
------------

ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் ஸ்ரீலங்கா அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா கலாச்சார விவகார அமைச்சு இவ்வாறுஅறிவித்துள்ளது என அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிமு 543 இல் விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் மகாசேனன் மன்னனின் ஆட்சிக்காலம் வரை மகாவம்சம் விபரிக்கிறது.
அதனுடன் இணைக்கப்பட்ட குலவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியவை நான்காம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர்கள் 1815 இல் இலங்கையை கைப்பற்றும் காலம் வரையிலான சரிதத்தை விபரிக்கிறது என்று ஸ்ரீலங்கா கலாச்சார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கூறினார்.
அதனையடுத்து முன்னணி எழுத்தாளர்களால், அதனது 6 வது பாகத்தில் 1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி குறித்து எழுதப்பட்டுவருவதாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷ்வின் காலப்பகுதிக்காக மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
30 வருடகால பிரிவினைவாதப் போரை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ஷ்வின் ஆற்றலுக்கு இணையாக மகாவம்சத்தில் எதுவும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
--------

வட மாகாணத்திலுள்ள 16 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை பிரதேச செயலகங்களாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டப்ளியு. ஜோன் செனவிரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அமைச்சரவைப் பதில் பேச்சாளரும் சுற்றாடல் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இச் சமயமே அமைச்சரவையின் இந்த முடிவை அமைச்சர் யாப்பா அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்திலுள்ள இரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும், வவுனியா மாவட்டத்திலுள்ள ஓர் உதவி அரசாங்க அதிபர் பிரிவும் இவ்வாறு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்படவிருக்கின்றன.
--------------