Tuesday 26 April 2011

செய்திகள் 26/04


ஐநா அறிக்கை வெளியானது!

இலங்கையில் பல தசாப்த காலமாக இடம் பெற்றுவந்த ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்ற விடயங்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கவென ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை ஏப்ரல் 12, 2011 அன்று பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
216 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை ஐநா செயலாளர் நாயகத்தின் ஒன்றரைப்பக்க முகப்புக் குறிப்புடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.
இலங்கையில் இறுதிப் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ள இவ்வறிக்கையே யுத்தக் குற்ற விசாரணை ஒரு உள்ளக விசாரணையாக நடைபெறுமா அல்லது வேறு அலகுகளுடன் இணைந்த ஒரு விசாரணையாக இடம்பெறுமா என்பதை முடிவு செய்ய சிறீலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் உதவும்.
****************

குற்றவாளியிடமே விசாரணைக்கான அனுமதியை கோரும் விசித்திரம்!

ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பான் கீ மூன் அதனுடன் வெளியிட்ட அறிக்கை பல்வேறு வகையான குழப்பங்களைத் தோற்றுவித்;துள்ளது.
படுகொலைகள் குறித்து விசாரிக்க படுகொலைக்கு காரணமாணவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களிடமே அனுமதியை எதிர்பார்த்திருப்பதாக கூறும் விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிக்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும் வழி முறைகள் தொடர்பிலேயே இந்த குழப்ப நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
. நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை பாதுகாப்புக் கவுன்சிலிடம் ஒப்படைக்க பான் கீ மூன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்புரிமை நாடுகளின் கருத்தை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் விசாரித்தறிந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா மட்டுமன்றி மேலும் பல்வேறு நாடுகளும் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே அது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலிடம் ஒப்படைப்பதற்கு செயலாளர் நாயகம் முடிவெடுத்துள்ளார்.
பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருப்பதுடன், இந்தியா, போர்த்துக்கல் உள்ளிட்ட பத்து நாடுகள் தற்காலிக உறுப்புரிமை அந்தஸ்தில் செயற்படுகின்றன.
****************

செய்மதி ஆதாரம் போதும்
செய்மதி முலம் எடுக்கப்பட்ட படங்களே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கைக்கு சான்றாக உள்ளது என செய்மதிப்பட தொழில் நுட்ப கழக இயக்குனர் புறொம்லி தெரிவித்துள்ளார்.
வொயிஸ் ஒஃப் அமெரிக்கா விற்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றசாட்டிற்கு ஆதாரமாக தம்மால் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் இருக்கின்றன.
இந்த படங்கள் மே மாதம் 6 ஆம் திகதியும் மே 10 ஆம் திகதியும் எடுக்கப்பட்டன.
இந்த படங்களில் ஸ்ரீலங்கா அரச படைகள் சிவிலியன் பாதுகாப்பு வலையத்தினுள் கண்மூடித்தனமாக ஆட்டிலறி ஷெல் தாக்குதல்கள் மேற்கொண்டமை தெளிவாக உள்ளது.
இந்த படங்களே ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற ஆதாரத்திற்கு போதுமானவை என கூறியுள்ளார்.
மேலும் இந்த படங்கள் சிங்கள இராணுவத்தின் பீரங்கிகள் எவ்வாறு பொதுமக்கள் இலக்கு நோக்கி நகர்த்தபப்ட்டன என்பதனையும் தெளிவாக காட்டுகின்றன.
ஆனால் இந்த படங்கள் மிக அதிக செலவு கொண்டவை.
20 அடி சுற்றுவட்டமுள்ள படம் ஒன்றின் விலை 10 ஆயிரம் டொலர்கள் எனவும் ஆகையால் இதனை சாதாரணமாக நிறுவனங்கள் வாங்க முற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
********************

ஐநாவுக்கு எதிராக தயாராகும் சிஙிகள பேரணிகள்

மே தினத்தன்று .நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, கொழும்பில் நான்கு இடங்களில் இருந்து அரசதரப்பின் பேரணிகள் வந்து தலைநகரையே அதிரவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மருதானை, மாளிகாகந்தவில் இருந்து அமைச்சர் வீரவன்ஸவின் தலைமையில் இடம் பெறவுள்ள பேரணி .நாவுக்கு எதிரான முழக்கங்களுடன் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் வலிமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைய வேண்டும் என்றும் மஹிந்த கேட்டிருந்தார்.
அவரின் ஆணையின்படி ஆளும்தரப்புச் சார்பாக நவசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் ராஜகிரியவில் இருந்தும்,
அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் ஏற்பாட்டில் நாரஹேன்பிட்டியில் இருந்தும்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் கம்பல் பார்க்கில் இருந்தும் பேரணிகள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பேரணிகள் அனைத்தும் அந்த அந்தக் கட்சிகளின் தொழில் சங்கங்களின் உறுப்பினர்களை இணைத்தே நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விமல் வீரவன்ஸ ஏற்பாடு செய்யும் பேரணியில் .நாவுக்கு எதிரான பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்கள் சுலோகங்கள் மற்றும் ஊர்திகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
***************

தொண்டு நிறுவனங்களை குற்றஞ்சாட்டும் திவயின

நிபுணர் குழு அறிக்கைக்கு சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்க வெளிநாட்டு உதவிகளில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சிப்பதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.
பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கையில் செயற்படும் ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதற்கென முன்னிலை வகிக்கும் அரச சார்பற்ற நிறுவனத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து முப்பது மில்லியன் டொலர்கள் நிதியுதவி கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிபுணர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது போன்று போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான சுயாதீன கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதுடன், அதில் தமிழ் மக்கள் சார்பான பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்றும் பிரஸ்தாப அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குக் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் திவயின பத்திரிகையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
******************

தமிழர்களிடையே அதிகரிக்கும் மனஅழுத்தம்

யாழ். குடாநாட்டில் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து நேற்று வரை 45 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கித் தற்கொலை, தீ மூட்டித் தற்கொலை, நஞ்சருந்தித் தற்கொலை எனப் பல்வேறு வகைகளில் இந்த 45 பேரும் மரணமடைந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 8 பேரும், பெப்ரவரி மாதம் 9 பேரும், மார்ச் மாதம் 16 பேரும் ஏப்ரல் மாதம் நேற்று வரை 12 பேரும் தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளனர்.
இவற்றை விட நீரில் மூழ்கி ஜனவரி மாதம் 7 பேரும், பெப்ரவரி மாதம் 8 பேரும், மார்ச் மாதம் 10 பேரும், ஏப்ரல் மாதம் நேற்று வரை ஒருவருமாக 26 பேர் மரணமடைந்துள்ளனர்.
குடும்பத் தகராறு மற்றும் ஏனைய காரணங்களால் கொலை செய்யப்பட்டவர்கள், ஜனவரி மாதம் 2 பேரும், பெப்ரவரி மாதம் 3 பேரும், மார்ச் மாதம் 6 பேரும் ஏப்ரல் மாதம் நேற்று வரை 7 பேருமாக மொத்தம் 18 பேர் மரணமடைந்துள்ளனர்.
வீதி விபத்துக்களால் இது வரை 17 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஜனவரி மாதம் 4 பேரும், பெப்ரவரி மாதம் 3 பேரும், மார்ச் மாதம் 4 பேரும் ஏப்ரல் மாதம் 6 பேரும் விபத்தின் மூலம் கொல்லப்பட்டனர்.
இது தவிர இரண்டு சிசுக் கொலை இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதத்தில் மட்டும் 15 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்கொலை அதிகரித்திருப்பது தொடர்பாக மனோதத்துவ நிபுணர்களிடம் கேட்ட போது மனவலிமையின்மையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையுமே அதிகரிப்புக்கான காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
****************