Monday 18 April 2011

செய்திகள் 18/04


மஹிந்தவின் அழைப்புக்கு எதிர்ப்பு

போர்க்குற்றங்கள் குறித்து .நா. நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக மேதின ஊர்வலங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளமைக்குத் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஊடகங்களில் கசிந்த .நாவின் அந்த அறிக்கையின்படி ஸ்ரீலங்கா அரசின் மீது போர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
ஆனால், அவற்றை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.
தமது அரசிற்கும், செயலுக்கும் பொதுமக்களின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதைக் காண்பிப்பதற்காகவே, இந்த மேதினக் கொண்டாட்டங்களை .நாவின் அறிக்கைக்கு எதிராகக் குவிப்பதற்கு அரசுத் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமரவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தொழிலாளர் தினமான மே தினத்தை .நாவின் போர்க்குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாகப் பயன்படுத்துவதைத் தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.
ஸ்ரீலங்கா அரசில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவரும், செங்கொடிச் சங்கம் உட்பட பல மலையக தொழிற் சங்கங்களின் மூத்த தலைவருமான .இராமையா, தொழிற்சங்கவாதி என்ற ரீதியில் மே தினத்தை இதற்குப் பயன்படுத்துவதை தான் ஆதரிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அதேவேளை அரசில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான லங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ரி.எம்.ஆர்.ரசுல்டீனும் அரசுத் தலைவரின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
தமது சங்கங்கள் எல்லாம் அரசின் தனியார் துறைக்கான ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து அதனையே மே தின கோஷமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
*********************
காலம் கடத்தும் முயற்சிகள்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று பங்களாதேசுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்மட்ட இராணுவ, குடியியல் அதிகாரிகள், 11 ஊடகவியலாளர்களை உள்ளடக்கியதான 54 பேர் கொண்ட குழு ஒன்றும் சிறிலங்கா அதிபருடன் டாக்கா சென்றது.
மூன்று நாட்கள் பங்களாதேசில் தங்கவுள்ள சிறிலங்கா அதிபர் அங்கு பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதுடன், உடன்பாடுகள் சிலவும் கையெழுத்திடப்படவுள்ளன.
சிறிலங்கா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் மகிந்த ராஜபக்ச பங்களாதேசுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசுக்கு அனுப்பியுள்ள .நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதுதொடர்பான பதிலை எதிர்பார்த்துள்ள நிலையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச .நாவுக்குப் பதில் அளிப்பதை இழுத்தடிக்கும் நோக்கிலேயே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
***************
சீமான் கண்டனம்

.நா.நிபுணர் குழு, .நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்க அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேளி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் சிறிலங்க அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் .நா. நிபுணர் குழு அளித்து பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடன் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது எனவும் தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய சிறிலங்க அரசிடமே விசாரணைப்ப பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரான கேலிக்கூத்தாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப் பிரச்சனை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான சிறிலங்க அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது. இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் .நா. செய்யத் தவறுமானால், அது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்கு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றிற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் .நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரிப்பதாகவும் சீமான் வெளியிட'; அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
*******************

கடத்திக் கொலை

புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரது சடலம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதியில் புகையிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகில் காணப்பட்ட கடவுச் சீட்டின் மூலம் கொல்லப்பட்டவர் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய வைத்திலிங்கம் செல்வ கணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளது
இவர் யாரால் கடத்தப்பட்டார்? ஏன் கடத்தப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? அவரது தடயங்களை எரித்து அழிக்க முற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.
*****************
யாழில் தமிழ் அரசியல்வாதியை கைது செய்ய இராணுவம் முயற்சி
யாழ்ப்பாணத்தில் மீண்டும் போரைத் தூண்டி விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரை கைது செய்யவுள்ளதாக சிறிலங்காவின் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகள் தான் மீளவும் போரை ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்களின் பின்னணியில் தான் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
போரைத் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதி ஒருவர் பற்றிய சாட்சியங்களை சேகரித்துள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக்குழுக்கள் எதுவும் செயற்படவில்லை.
அண்மையில் சிறிலங்கா காவல்துறையினருக்கு உதவியாக சிறிலங்கா படையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கிய பின்னர் தான் அங்கு குற்றச்செயல்கள் குறைந்துள்ளன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் கொள்ளைகள், கொலைகள், பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் அதிகரித்ததால் தான் மீளவும் சிறிலங்காப் படையினர் வீதிச் சோதனைகளில் இறங்க நேரிட்டது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*******************
பிரதேசவாத அரசியல் தேர்தலுக்கு மட்டும் போதுமென்கிறார் அமைச்சர்
பிரதேசவாத அரசியல் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் மட்டுமே அரசியல் பிரிவினைவாதம் காட்டப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை ஊருகமுவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெட்டினாலும் நீல நிறம், பச்சை நிறம் மற்றும் சிகப்பு நிறம் எனக் கூறிக்கொள்ளும் கடுமையான கட்சிவாத அரசியல் ஒட்டுமொத்த நாட்டு அபிவிருத்தியை பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*********************