Thursday 14 April 2011

செய்திகள் 14/04


நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தமிழ் தெரிவித்துக் கொள்கின்றது.

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து உரிமைபெற்ற இனமாக நிலையான சமாதானத்துடனும் நிரந்தர அமைதியுடனும் வாழ நேயர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றது.
உலக அரங்கில் உண்மையை நிலைநாட்டி நீதியை வென்று நியாயத்தை நிலைநாட்டி நிலையான சமாதானத்தையும் நிரந்தர விடுதலையை பெற்று இனமானத் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ உலகத் தமிழினத்துடன் சேர்ந்து நாமும் இந்த இனிய நாளில் பிரார்த்திக்கின்றோம்.
---------

விசாரணை நடத்துமாறு சர்வதேச அழுத்தம்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக மட்டத்தில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின், இலங்கை தொடர்பான அறிக்கையை பொதுச்செயலர் பான் கீ மூன் ஆராய்ந்து வரும் பின்னணியில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளன என்பதை இராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை கையளித்தது.
மேற்கொண்டு என்ன நடவடிக்கையை எடுப்பது என்பதை முடிவு செய்வதற்காக அந்த அறிக்கையை .நா. பொதுச் செயலாளர் கவனமாக ஆராய்ந்து வருகிறார்.
அந்த அறிக்கையில் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான, பாதகமான அம்சங்களே அதிகம் காணப்படுகின்றன என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இரு தரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதை .நா. நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று .நா. ராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே அவற்றுக்குப் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அனைத்துலக விசாரணையை .நா. முன்னெடுக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு அறிக்கையில் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று அந்த ராஜதந்திரி மேலும் தெரிவித்தார்.
அதேவேளை பெயர் குறிப்பிட விரும்பாத .நாவுக்கான ஆசிய வதிவிடப் பிரதிநிதி ஒருவர், இலங்கை நிகழ்வுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மிகப் பெரியளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அத்தகைய ஒரு விசாரணைக்கு நிபுணர் குழு கோரிக்கை விடுக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
---------------

பகிரங்கப்படுத்துமாறு பிரதமர் வேண்டுகோள்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு .நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழு கையளித்திருக்கும் அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிபுணர் குழுவை அமைப்பதற்காகக் குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நாடுகடந்த தமிமீழ அரசாங்கம் நன்றி தெரிவிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிபுணர் குழு தமது அறிக்கையை .நா பொதுச்செயலரிடம் நாயகத்திடம் கையளித்ததற்கும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 60,000 உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழீழத்திலும் அதற்கு வெளியே உலகளவிலும் வாழும் தமிழ்மக்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இன்னும் ஒருவார காலத்துக்குள், ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
தமிழ்மக்களைப் பொறுத்தவரை நீதிக்கான அவர்களது போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
-------------
உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டமே இன்றைய தேவை - செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழும் எமது மக்களின் இழந்து போன உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் உரிமைகளுக்கான போராட்டமே இன்றைய அவசியத் தேவையாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான புதியதோர் மாற்றத்தை உருவாக்க சித்திரைப் புதுவருடம் வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்க கொண்டுவரப்பட்டு இரண்டு வருட காலம் கழிந்து போகின்ற இன்றைய நிலைமையில், அரசாங்கம் சர்வதேச சமுகத்திற்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதிகளையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை.
யுத்தக் கொடுரங்களினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இன்னமும் இன்னல்களையும், அவதிகளையும் எதிர்கொண்ட வண்ணமே தமது வாழ் நாட்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை எமது பிரதேசங்களுக்கு வரும் எவராலும் அறியக் கூடியதாகவுள்ளது.
அதேநேரம் வடக்கு - கிழக்கில் யுத்தக் கொடுரங்களால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே காணப்படுகின்றன.
ஆனால் தேவைக்கு அதிகமான அபிவிருத்திகள் தேவையற்ற பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது கவலையளிக்கின்றது.
இதனை நாம் இன ரீதியான சிந்தனையுடன் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாகுபாடற்ற ரீதியில் செயற்பட வேண்டுமென்பதே எமது உண்மையான கோரிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழும் எமது மக்களின் இழந்து போன உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் உரிமைகளுக்கான போராட்டமே இன்றைய அவசியத் தேவையாகும்.
அதற்கான அரசியல் வழி நடத்தலை கட்டியெழுப்புவதற்கான அரசியல் வழிநடத்தலே இன்றைய அவசியத்தேவையாகும்.
இதற்கான முன்னெடுத்தல்களையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
சித்திரைப் புதுவருடம் கடந்த கால துன்ப நிகழ்வுகளை களைந்தெறிந்து தமிழர் வாழ்வியலில் புதியதோர் மாற்றத்தை உருவாக்க வழிவகுக்க வேண்டும் என அவரது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-------------
தமிழர்களின் அவலநிலை இன்னும் மாறவில்லை - சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடந்த 30 வருடங்களாக இன்னல்கள், அவலங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் புத்தாண்டுகளை எவ்வாறு எதிர்கொண்டார்களோ அதேபோன்றே இமமுறையும் எதிர்கொள்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பெருமெடுப்பில் நடாத்தி தமிழர் பகுதிகளில் சுமுகநிலை திரும்பிவிட்டது என்று காட்ட இராணுவம் முனைகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமனா சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று புத்தாண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களின் வாழ்வியல் களநிலையை விளக்கி அவர் தெரிவித்த தகவலில் யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் மீளக்குடியமர்ந்த மக்கள் அவலத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியிலேயே தொடர்ந்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
மீளக்குடியமர அனுமதி வழங்கியதுடன் தமது பொறுப்பு முடிந்துவிட்டது என தமிழ் மக்களை அரசு கைவிட்டு விட்டது.
அந்த மக்கள் வீடுகளைக் கட்டவோ, வாழ்வாதாரத்துக்கான தொழில்களை ஆரம்பிக்கவோ அரசால் உதவிகள் வழங்கப்படவில்லை.
அந்த மக்கள் தமது அவல வாழ்வை தொடரட்டும் என்று அரசு கைகழுவி விட்டுவிட்டது.
மக்கள் துன்பத்துடனும் அவலத்துடனும் வாழும்போது, அந்த மக்கள் படையினருடன் நட்பாக இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக புத்தாண்டை ஒட்டி பெரிய அளவில் விளையாட்டு விழாக்களை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது.
வல்வெட்டித்துறையில் விளையாட்டு விழாவை இராணுவம் நடத்தி மக்கள் தம்முடன் நிற்கிறார்கள் எனக் காட்ட முனையலாம்.
அதன் மூலம் மக்களின் அவலங்களுக்கும் இன்னல்களுக்கும் விடிவு எட்டப்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக எத்தகைய இன்னல்களுக்கு முகம் கொடுத்த நிலையில் புத்தாண்டை மக்கள் எதிர்கொண்டார்களோ அதே நிலைமைதான் இப்போதும் தொடர்கிறது.
துன்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு எப்போது விடிவு கிட்டுகிறதோ அப்போதுதான் தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாட முடியும் என்று சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
-----------

பிரித்தானிய பிரதமர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் இன்று தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது உளமார்ந்தவாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சித்திரைத் தமிழ்ப்பு த்தாண்டையிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றிலே அவர், பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கும் முக்கியமான பங்களிப்பை இந்தத் தருணத்தில் தான் அங்கீகரிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அர்ப்பணிப்பு, சமூக மற்றும் குடும்பம்சார் பொறுப்புணர்வு முதலான அம்சங்களின் மீதாகவே தமிழ்ச் சமூகத்தின் இந்தப் பங்களிப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அவர்களின் இந்த விழுமியங்களை கொன்சவேர்டிவ் கட்சியும் கைக்கொண்டுள்ளது.
தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த முக்கியமான பண்டிகையைக் கொண்டாடும் வேளையில், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-------------
கனடிய லிபரல் கட்சி புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது.

தமிழர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்து விட்ட ஒரு கட்சியான கனடிய லிபரல் கட்சி தனது உளமார்ந்த புதுவருட வாழ்த்துக்களை தமிழர்களிற்குத் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் இவ்வேளை ஏனைய கனடியர்கள் தமிழர்களின் பெருமைகளையும் பாராம்பரியங்களையும் நினைவு கொள்ள வேண்டுமென லிபரல் கட்சியின் தலைவர் மைக்கல் இக்னாரிப் தெரிவித்துள்ளார்.
கனடாவில் குடிபெயர்ந்த தமிழர்களின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் தன்னைப் பதிவு செய்த ஒரு அரசாக இருந்த இக் கட்சி தமிழர்களிற்கான ஒரு ஆதரவு சக்தி என்ற காராணத்தினாலேயே தனது பதவியைக் கூட இழந்தது.
குறிப்பாக தமிழர்களிற்கு ஒரு பொது அலை வானொலி தேவையெனக் கருதப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த கொன்சவேட்டிவ் கட்சியின் பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழர்களிற்கென ஒரு சமூக வானொலியொன்றை உருவாக்கக் கைகொடுத்தது.
இருந்த போதும் அந்த வானொலி பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் என அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய போதும் லிபரல் கட்சி அமைச்சரவை அவற்றையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காமல் தமிழர்களிற்கு உதவி புரிந்தது.
அதுபோலவே தமிழர்களிற்கு ஆதரவான அமைப்புக்களை தடைசெய்ய பாதுகாப்பு அமைப்புக்கள் பரிந்துரை செய்த போதும் அதைப் பிற்போட்டு தமிழர்களிற்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை எடுத்தியம்பி வந்தது.
இருந்தபோதும். தற்போதைய கொன்சவேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகளைத் தடை செய்திருந்தது.
மேலும் 2008ல் உலகத்தமிழர் இயக்கத்தைத் தடை செய்திருந்தது.
தற்போது கப்பல் அகதிகளிற்கு எதிராக கொண்டுவரப்பட இருந்த சட்டத்தை எதிர்ப்போம் எனப் பகிரங்கமாக தெரிவித்த ஒரு கட்சியே லிபரல் கட்சி ஆகும்.
இந்தக் கட்சியே தமிழர்களினால் பயங்கரவாதத்திற்கு பணம் சேர்க்க ஒத்தாசையாகச் செயற்படுகிறது என்று கொன்சவேட்டிவ் கட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டு பதவியிழக்க வைக்கப்பட்ட கட்சியாகும்.
-----------