Sunday 10 April 2011

செய்திகள் 10/04


சிங்கள-தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சிறிலங்கா மீது பதுங்கித் தாக்குதல் நடத்த ஐ.நா திட்டமிட்டிருப்பதாகக் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களில் பான் கீ மூனிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கை வெளியாகவுள்ள சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் கொழும்பு வரவுள்ளமை சிறிலங்காவுக்கு இரட்டிப்பான அடியாக அமையும்.
சிறிலங்கா மீது எந்த நேரமும் வீசவுள்ள இந்தப் புயல் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு நட்பு நாடுகளின் ஆதரவைத் திரட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தவறியுள்ளதாகவும் அந்த வாரஇதழ் குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே மற்றொரு கொழும்பு வாரஇதழ்- இந்த அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர், அதுபற்றிய தகவல்களை ஐ.நா வெளியிட இரண்டு விதமான சாத்தியங்கள் உள்ளதாக நியுயோர்க்கில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன எனத் தெரிவித்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்னர் பான் கீ மூன் அறிக்கை ஒன்றை வெளியிடலாம்.
அந்த அறிக்கை, நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கும் வகையிலானதாக அமையலாம்.
இந்த நிபுணர்கள் குழு தமது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தும் மற்றொரு வாய்ப்பும் உள்ளது.
ஆனால் இதுவரை அதுபற்றி தெளிவான நிலை ஏதும் இல்லை.
இந்த விடயம் தொடர்பாக பான் கீ மூன் தான் முடிவு செய்வார் என்று நியுயோர்க்கில் உள்ள ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றன.
அந்த நடவடிக்கையை ஐ.நாவின் எந்த அமைப்பின் ஊடாக கோருவதென்று அவர்கள் இன்னமும் தெளிவான நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளது.
--------------

அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான திட்டத்தை அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கையளித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவற்துறை அதிகாரம், வெளிநாட்டு நிதியுதவிகளை நேரடியாக பெறுவதற்கு அனுமதி, துறைமுகம், வடிகாலமைப்பு, பெற்றோலிய வளம், மீன்பிடி, வானொலி,தொலைக்காட்சி சேவைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட 46 அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும் என கூட்டமைப்பு, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் யோசனை முன்வைத்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், உயர்க்கல்வி, நீரியல்வளம், கடலோர பாதுகாப்பு, மின்சக்தி, போக்குவரத்து, பெருந்தெருக்கள், வீடமைப்பு, நிர்மாணம், சுற்றுலாத்துறை கூட்டுறவு வங்கி, நகர விவகாரங்கள், வாகன வரி, நீதிமன்ற வரி அறவீடு உள்ளிட்ட அதிகாரங்களும் உள்ளடங்குகின்றன.
இதனை தவிர வடக்கு கிழக்கில் உள்ள சகல வளங்களையும் நிர்வகிக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டு முதலீடுகளை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகள் விடுதலைப்புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக யோசனைக்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி இந்த யோசனைகளை தயாரித்துள்ளதாகவும் இந்த யோசனைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
---------------------

சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களைத் தனித்தனி அலகுகளாக அங்கீகரித்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக் கப்படுவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக முன்வைத்த யோசனைத் திட்டங்களில் இதனைப் பல தடவைகள் குறிப்பிட்டிருந்ததாகவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மைச் சமூகங்கள் தனித்தனி சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, கௌரவிக்கப்பட்டு அரசாங்கம் அவர்களுக்கும் அதிகாரத்தில் பங்கைக் கொடுக்க வேண்டும் என்றும், உலகின் பல நாடுகளில் இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட ஹசன் அலி, இரு சமூகத்திற்கும் ஒரு தேவை ஏற்படவேண்டுமாயின் இரண்டு சமூகமும் உடன்பாடொன்றுக்கு வரவேண்டிய தேவைப்பாடு உள்ளது என்றும் கூறினார்.
-----------------------

பண்டிகைக்காலத்தில் பொதுமக்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பொருட்களின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னான்டோ கூறியபோது பொதுமக்களின் நலன் கருதி கட்டுப்பாட்டு விலைகளின் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் முதல் இதுவரை நுகர்வோர் சட்டதிட்டங்களை மீறி பொருட்களை விநியோகித்த 12 ஆயிரத்து 500 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------

இலங்கை தாதியர் சேவை பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியாக மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தாதியர் சங்கங்கள் பல மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, குறித்த வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பு தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தாதியர் பிரதிநிதிகள் தெரிவு வாக்கெடுப்பு முறைகேடுகள் நிறைந்தது என அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், தாதியர் சபையை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கு இந்த வாக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என அந்த சங்கத்தின் தலைவர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அஜித் மென்டிஸ் இலங்கை ஒரு ஜனநாயக நாடாக இருப்பதனால் எந்தவொரு அமைப்பிற்கும் தேவையேற்பட்டால் நீதிமன்றத்தை நாடமுடியும் என தெரிவித்துள்ளார்.
-----------------

யாழ்.நகரில் பிரபல கல்லூரியைச் சேர்ந்த இளம் ஆசிரியையின் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.
சில்லாலை, சாந்தைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான செல்வராஜா அனுஷா என்ற யாழ்.இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையின் சடலமே நேற்றுமுன்தினம் வீட்டில் சேலையினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டது.
உடலில் நகக் கீறல் காயங்கள் காணப்படும் அதேசமயம், வேறு சில தடயங்களும் இருப்பதால், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
முழந்தாள் நிலத்தில் பட்டும் படாமலும் மடிந்த நிலையில் சடலம் கிடந்துள்ளது.
கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கமாக அன்றி இளகிய நிலையில் காணப்பட்ட தாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
நேற்றையதினம் மல்லாகம் பதில் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறும் உடற் கூற்றுப் பரிசோதனை நடத்தி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தினார்.
உடலில் கீறல் காயங்கள் காணப்படுவதாலும் வேறு சில தடயங்கள் இருப்பதாலும் இந்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
சடலம் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
---------------------