Sunday 3 April 2011

செய்திகள் 03/04


விளையாட்டை விளையாட்டாக கருதாத சிங்கள பேரினவாதத்தின் தமிழர் மீதான வன்முறை!

சிறிலங்கா கிரிக்கற் அணி தோல்வியடைந்ததையடுத்து ஹற்றன் நகரில் தமிழ் தோட்டதொழிலாளர்கள் மீது சிங்கள குழு ஒன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதில் காயமடைந்த தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா கிரிக்கட் அணி தோல்வியடைந்த உடன் கத்திகள் வாள்கள், தடிகளுடன் புறப்பட்ட சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஏதும் அறியாத அப்பாவி தமிழ் தோட்டதொழிலாளர்கள் தங்களுடைய லயன்களுக்குள் ஓடி ஒளிந்த போதும் வீடுகளுக்குள் புகுந்தும் சிங்கள குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் இரவு 10மணிமுதல் நள்ளிரவுக்கு பின்னரும் தொடர்ந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த பின்னரே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் கத்திகள், பொல்லுகளுடன் காணப்பட்ட போதிலும் காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை என்றும் மலையக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்றிரவு யாழ் குடாநாட்டின் பல இடங்களில் வெள்ளைவானிலும் மோட்டார் சைக்கிளிலும் வந்தவர்கள் வீதிகளில் நின்ற பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர்கள் வீடுகளுக்குள் அடைக்கலம் தேடி ஒடியபோது அங்கும் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். குடாநாட்டில் பரவலாக பலர் வெடி கொளுத்திக் கொண்டாடினர்.

யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி என பரவலாக கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராணுவத்தினர் வெள்ளைவான் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றிரவு பரவலாக இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இத் தாக்குதல்காரர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மக்கள் சிதறியோடி அருகிலிருந்த வீடுகளில் அடைக்கலம் புகுந்து கொண்டதாகவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக வலம்புரி பத்திரிகை தெரிவித்துள்ளது.
*********************

பகிரங்கமாகும் ஐநா அறிக்கை - உண்மையை பகிருமா?

வன்னி இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் நடுப்பகுதியில் பகிரங்க அறிக்கையாக வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ் அறிக்கையின் பிரதி முதலில் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பகிரங்கப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாத இறுதியில் சமர்ப்பிப்பிக்கப்படும் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இறுதி நேரத்தில் இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் ஐநா செயலர் பான் கீ மூனுடனும் நிபுணர் குழுவினருடனும் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் பின்னர் அறிக்கையைக் கையளிக்கும் திகதி பிற்போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவ் அறிக்கை இந்த மாத நடுப்பகுதியில் ஐ.நா. பொதுச் செயலரிடம் உறுதியாகக் கையளிக்கப்படும் எனவும் அதன் பின்னர் அந்த அறிக்கை பகிரங்க ஆவணமாக வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையும் அதற்கு ஆதரவான வகையிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கை செல்லவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேகின் இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கடுந்தொனியில் அமைந்த செய்தி ஒன்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்காகக் கொண்டு செல்லப்படும் என எதிர்பாரக்கப்படும் போதிலும் அமெரிக்க தரப்பில் இருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
**********************

நட்பை நாடும் பீரிஸ்!

பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் சந்திக்க மறுத்துள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்க முன்னர், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தார்.

சந்திப்பக்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையிலும், அவரைச் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லண்டன் வந்திருந்தார்.

ஆயினும், அவரை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் சந்தித்துப் பேசவில்லை.

இதன்காரணமாக, பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர், லியம் பொக்ஸ், வர்த்தக முதலீட்டு அமைச்சர் லோர்ட் கிறீன், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் ஆகியோரையே அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரித்தானிய வெளிவகார அமைச்சருடனான சந்திப்பு சாத்தியமாகாத நிலையில், தமது அதிகாரபூர்வ பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு, தொடர்ந்தும் தனிப்பட்ட ரீதியாகத் தங்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சர் பீரிசின் மகளும், பேரக்குழந்தையும் லண்டனில் இருப்பதைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

லண்டனில் இருந்து அடுத்த வாரமே கொழும்பு திரும்பவுள்ள அவர், தனிப்பட்ட ரீதியாக இங்கு தங்கவுள்ளதாகக் கூறியுள்ள போதும், அதிகாரபூர்வமான பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்களின் சங்கத்தில் சிறிலங்கா அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

சிறிலங்கா வம்சாவழியினரான சுமார் 400 துறைசார் வல்லுனர்கள் இந்தக் கூடத்தில் கலந்து கொள்வர் என்று லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது.
அத்துடன் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் பங்கேற்கும் ஊடகச் சந்திப்பு ஒன்றிலும் பீரிஸ் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கோரியதன் பின்னர் சிறிலங்காவுடன் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமரின் இந்த வேண்டுகோளை சிறிலங்கா நிராகரித்து விட்டது.

இந்தநிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து சமாதானப்படுத்தவே சிறிலங்கா அமைச்சர் பிரீஸ் முயற்சி மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.
*********************

நோக்கம் நிறைவேறாமல் நொந்து போன மகிந்த!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறவில்லை என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மும்பையில் இந்திய - சிறிலங்கா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்கு என்ற சாக்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் இந்தியா சென்றிருந்தார்.

முதலில் திருப்பதி சென்று வழிபாடுகளை நடத்திய அவர், தனது தனிப்பட்ட நேர்த்திக்கடனைச் செலுத்திய பின்னர் மும்பைக்குச் சென்றிருந்தார்.

மும்பையில் இறுதியாட்டம் நடைபெறும் மைதானத்தில் தமக்கும் தம்முடன் வருவோருக்குமாக முக்கிய பிரமுகர்களுக்கான ஆசனப் பகுதியில் 40 ஆசனங்களை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் துடுப்பாட்டச் சபையிடம் கோரியிருந்தார்.

ஆனால் அவருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் 20 ஆசனங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குழப்பமடைந்தார்.

அத்துடன் இந்தப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மும்பை வரவில்லை.

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டேல் மட்டுமே மகிந்த ராஜபக்சவுடன் அமர்ந்திருந்து போட்டியைக் கண்டு களித்தார்.

மன்மோகன்சிங்குடனான சந்திப்பை எதிர்பார்த்த சிறிலங்கா அதிபருக்கு அவர் அங்கு வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மொகாலியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின்போது இந்திய- பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இரு அணி வீரர்களையும் மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆனால் சிறிலங்கா அதிபரும், இந்திய குடியரசுத் தலைவரும் இறுதிப் போட்டியைக் காணச் சென்றிருந்த போதும்- வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடத்தப்படவில்லை.

அதுமட்டுமன்றி இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுமில்லை.

மும்பை மைதானத்தில் இந்திய அமைச்சர்கள் பலரும், பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.
அவர்களும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் கடுமையான மன அழுத்ததுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, அழையா விருந்தாளியாகவே அவர் மும்பை சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிகின் லங்கா சிறப்பு விமானம் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து மும்பைக்குச் சென்றிருந்தார்.

அவருடன் அவரது மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர். அதேவேளை, இந்தப் போட்டியைக் காண சிறிலங்காவில் இருந்து 32 அமைச்சர்கள் தலா 95 ஆயிரம் ரூபாவை செலுத்தி சிறிலங்கன் விமான சேவையின் சிறப்பு வாடகை விமானத்தில் மும்பைக்குச் சென்றிருந்தனர்.

நேற்றைய இறுதிப்போட்டியில் சிறிலங்கா அணி தோல்வியடைந்தது. உலகக்கிண்ணத்தை போரில் மடிந்த படையினருக்குக் காணிக்கையாக்குவதற்கு சிறிலங்கா காத்திருந்தது.

இறுதிப்போட்டியில் தோல்வியுற்றதால், சிறிலங்காவின் இந்தக் கனவு தகர்ந்து போயுள்ளது.
**********************

அகதிகள் நாடுகடத்தலை தடுக்க கோரிக்கை

சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கோரி பேர்ண் பாராளுமன்றத்திற்கு முன்னால் நடந்த ஒன்று கூடலில் அச்சுறுத்தலுக்குள்ளான இனங்களுக்கான சர்வதேச அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, உட்பட மனித உரிமை அமைப்புக்களும், சுவிஸ் நாட்டின் அரசியல் கட்சிகளான பசுமைக்கட்சி , சோஷலிசக்கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாட்டை சுவிஸ் ஈழத்தமிழர் அவை மேற்கொண்டிருந்தது.

பிற்பகல் 2.30க்கு ஆரம்பமான இந்த ஒன்று கூடல் 4.30மணியளவில் நிறைவடைந்தது.

இந்த ஒன்று கூடலில் உரையாற்றிய மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிறிலங்காவில் தமிழர்களுக்கு ஆபத்து நீங்கிவிடவில்லை என தெரிவித்தனர்.

போர் முடிந்தாலும் அச்சுறுத்தல்களும் ஆட்கடத்தல்களும் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் தமிழ் மக்களின் அவலங்களையும் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளையும் சித்தரிக்கும் வகையில் அரங்க நிகழ்வு ஒன்றும் பேர்ண் நாடாளுமன்றத்திற்கு முன்னால் நிகழ்த்திக்காட்டப்பட்டது.

சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான மனுவில் கையொப்பங்களும் இந்த நிகழ்வின் இறுதியில் பெறப்பட்டது.
***********************

தமிழரும் முஸ்லீம்களும் சமாதானமாக வாழ்வதில் என்ன தவறு - கேள்வி எழுப்பும் மு.கா

முஸ்லிம்களின் பெரும் அரசியல் சக்தியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ் மக்களின் பாரிய அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமக்கிடையில் பேசுவதில் என்ன தவறு உள்ளது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒரே மொழி பேசும் இரு சமூகக் கட்சிகள் தங்களது அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேசுவதில் என்ன தப்பு உள்ளது? எனக் கேள்வியெழுப்பிய ஹசன் அலி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்ட காலந்தொட்டு ஆண்டாண்டு காலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய நிருவாகிகளின் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இரு கட்சிகளும் பேசிவரும் நிலையில் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எந்த வேலையும் கிடையாது. இது நல்லெண்ண முயற்சிகளுக்கு எதிரான சக்திகளின் திருவிளையாடலாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இப்படியான சதிகாரர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு நாட்டுப் பற்றாளர்களாக வாழவேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.
********************