Tuesday 12 April 2011

செய்திகள் 12/04


ஐநா அறிக்கை இன்று?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, தனக்கு ஆலோசனை வழங்க, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்.கீ.மூன் நியமித்த நிபுணர்கள் குழு இன்று தனது அறிக்கையை .நா செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை முதலில் .நா செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும், கையளிக்கப்பட்ட பின்னர், அதனை பகிரங்கப்படுத்துவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிபுணர்கள் குழு, கடந்த வருடம் மே மாதம் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில், இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி தருஸ்மன், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை குறித்து, அரசாங்கம் தொடர்ந்தும் தனது அதிருப்தியை .நா செயலாளரிடம் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
****************
சரணடைதல் முன்னரே தெரியும்!
வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் உட்பட முக்கியவர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணித்தியாலத்துக்கு முன்னரே .நாவுக்கு தெரியும் என ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு பா நடேசன், புலித்தேவன் உட்பட முக்கியஸ்தர்கள் சரணடைவது குறித்த தகவல்கள் 18 மணிநேரங்களுக்கு முன்னரே .நாவுக்கு தெரியும். ஆனால் சரணடைந்தவர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்.
சரணடைபவர்களின் விபரங்களும் .நாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அவர்களை வரவேற்பதற்கு கொழும்பில் பணியாற்றிய .நா அதிகாரிகள் வவுனியாவுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தனர்.
அப்போது கொழும்பில் பணியாற்றிய .நா அதிகாரிகளில் பலர் தற்போது பணியில் இருந்து விலகியுள்ளனர் அல்லது சிறீலங்காவை விட்டு வெளியேறியுள்ளனர்.
சரணடைவது தொடர்பான மாயைகளை உருவாக்கி விடுதலைப்புலிகளை படுகொலை செய்யவே கொழும்பும், கொழும்புக்கு ஆதரவான .நா அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த சமயம், .நா செயலாளர் நாயகம் பான கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் கொழும்பில் தங்கியிருந்தார்.
இரு .நா அதிகாரிகளே ஒமந்தையில் உள்ள சிறீலங்கா சோதனை நிலையத்திற்கு இரகசியமாக அனுப்பப்பட்டபோதும், ஏனையவர்கள் தாண்டிக்குளத்தை தாண்டுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பில் அனைத்துலக விசாரணைகளின்போது சாட்சியமளிக்க தான் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**********************
கப்பம் கோரும் அமைச்சரும் அரசும்!
கொழும்பில் தமிழ் வர்த்தகரிடம் கப்பம் கோரிய சிறிலங்காவின் பொதுசனத்தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற விவகாரச் செயலரான ஜெயசேன முதியான்சலாகே புத்தி என்பவரும், சீருடையுடன் சென்ற இரு சிறிலங்கா காவல்துறையினரும் நேற்றுமுன்தினம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
கிரான்ஸ்பாஸ் பகுதியைச் சேர்ந்த சுப்பையா ஆனந்தகுமார் என்ற தமிழ் வர்த்தகரிடம் 5 மில்லியன் ரூபாவை கப்பமாகக் கோரியிருந்த இவர்கள், சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் அதிகாரபூர்வ வாகனத்தில் அதை வாங்க வந்தபோதே பிடிபட்டனர்.
சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 18ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறையினர் இருவருரையும் அமைச்சரின் செயலாளருடன் செல்வதற்கு மேலதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கப்பம் பெறும் நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறிய மேல்மாகாண காவல்துறை உயரதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் தயானந்த, களனி காவல்துறை பிரிவு மூத்த கண்காணிப்பாளர் கீர்த்தி கணேகம, பேலியகொட காவல்துறை தலைமையக ஆய்வாளர் பெரேரா ஆகியோரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று மேர்வின் சில்வாவின் ஊடகச் செயலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போதுதடுப்பிலுள்ள முக்கிய சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை முதல் அமைச்சரின் செயலாளர் பதவியில் விலகி விட்டதாகவும், மேர்வின் சில்வாவை அரசியல் ரீதியாக அழிக்க மேற்கொள்ளப்படும் சதியே இது என்றும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் கடந்த வியாழக்கிழமை அமைச்சரின் செயலாளர் பதவியில் இருந்து விலகியவர் எவ்வாறு ஞாயிற்றுக்கிழமை அமைச்சரின் வாகனத்தில் இரு காவல்துறையினருடன் கப்பம் பெறப்போனார் என்று கேள்வி எழுப்ப முனைந்த போது, தொலைபேசி இணைப்பை அவரது ஊடகச் செயலாளர் துண்டித்து விட்டதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா பேலியகொட புதிய மீன்சந்தையில் கப்பம் பெறுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேர்வின் சில்வா மீது இந்தக் குற்றச்சாட்டை மற்றொரு சிறிலங்கா அமைச்சரான ராஜித சேனாரத்னவே முன்வைத்திருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
*****************
ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை கோபுரம் அமைப்பு

சர்வதேச மட்டத்தில் உலக நாடுகளில் இடம்பெறும் நில நடுக்கங்கள் அதிகரித்துச் செல்கின்றமையினால் வட கிழக்குப் பிரதேசங்களில் ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையிலுள்ள கரையோர மாவட்டங்களை உள்ளடக்கியதாக இதுவரையில் 52 ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.
நெடுந்தீவு, முல்லைதீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோண மலை உள்ளிட்ட பிரதேசங்களில் 25 முன் எச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணிக் கப்பட்டு வருவதாகவும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவற்றின் நிர்மாணப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் ஏனைய நிர்மாணப் பணிகள் யாவும் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் பூர்த்திசெய்ய முடியுமெனவும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட் டுள்ள அறிக்கையில் மேலும் குறிப் பிடப்பட்டுள்ளது.
******************
ஊடக நிறுவன வாகனம் கடத்தல்
கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான வெள்ளை நிற வான் ஒன்று நேற்றுத் திங்கட்கிழமை இரவு கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் வைத்து காவல்துறை சீருடை அணிந்த இனந்தெரியாத குழு ஒன்றினால் வழி மறிக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றிரவு 7.00 மணியளவில் தினக்குரல் தலைமையகம் அமைந்திருக்கும் முகத்துவாரம் பகுதியிலிருந்து சுமார் அரை மைல் தொலைவிலுள்ள வோல்ஸ் லேனில் வைத்தே இந்த வாகனம் கடத்தப்பட்டிருக்கின்றது.
சீருடையில் வானை மறித்த மூன்று பேர் கொண்ட குழு ஒன்றே இந்த வானைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************