Thursday 8 September 2011

செய்திகள் 08/09


மக்கள் போராட்டம் வெடிக்கும் - ததேகூ எச்சரிக்கை
இராணுவத்தால் உருவாக்கப்பட்ட கிறீஸ்பூதம் என்ற மர்ம மனிதப் பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், அதனைத் தடுக்கத் தவறினால் மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த நினைத்தால் தமிழ் மக்கள் ஒருபோதும் அடங்கிப் போகமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்கிய அரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் கூறினார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதும் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவம் ஆட்சி புரிகின்றது.
நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணம் இலங்கையில் ஒரு பகுதியாக இல்லையா? ஏன் இந்தப் பாரபட்சம்? எனவும் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஜூலை மாதம் மலையகத்தில் ஆரம்பித்த கிறீஸ் பூதங்களின் அச்சுறுத்தல் படிப்படியாகப் புத்தளம், கிழக்கு மாகாணம் எனப் பரவி இப்பொழுது யாழ்ப்பாண மக்களையும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவர்கள் பெண்களைத் தேடித் தேடித் தாக்குகின்றனர். இம்சிக்கின்றனர்.
இப்பிரதேச மக்கள் மிகவும் பீதியுடன் வாழ்கின்றனர். கோயில்களிலும் பாடசாலைகளிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கிறீஸ் பூதம் என்று ஒன்று இல்லை என்று கூறுகின்றனர்.
ஆனால் பொதுமக்களால் விரட்டிச் செல்லும் இந்த மர்ம மனிதர்கள் இராணுவ முகாம்களுக்குள் சென்று மறைகின்றனர்.
இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றது. மக்கள் பிடித்து ஒப்படைத்தால் அவர்கள் எல்லோருமே மனநோயாளர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுகின்றனர்.
இந்த மர்ம மனிதர்களைப் பிடிக்க முயற்சிக்கும் பொதுமக்களை இராணுவத்தினர் கைதுசெய்து சித்திரவதை செய்கின்றனர்.
நாவாந்துறையில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
கை, கால்கள் முறிக்கப்பட்ட அவர்கள் இப்பொழுதும் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சிறுபான்மை மக்களைத் தொடர்ந்தும் ஒரு அச்ச சூழலில் அடக்கி, ஒடுக்கி வைப்பதே இந்த அரசின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கியத்துடன் வாழ விரும்பும் தமிழ் மக்களை அடக்கி அடிமைப்படுத்த முனைகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் மகாவலித் திட்டம் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தனியான ஒரு செயலாளர் பிரிவை உருவாக்கும் பொறுப்பு அநுராதபுர அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசுத் தலைவர் மேலும் பலப்படுத்தி உள்ளார்.
மர்ம மனிதப் பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால் அங்கு மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
***************

அவசரகாலச் சட்ட நீக்கத்தின் பின்னும் தொடரும் இராணுவ ஆட்சி
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் மக்களிடம் கூறி வருகின்றனர்.
ஆனால், இராணுவக் கெடுபிடிகள் தொடர்வதாக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை வக்மனை வீதியிலுள்ள ஐ.தே.க. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட போராட்டமே இதற்குக் காரணம் இதற்காக அரசுத் தலைவர்க்கு நன்றி கூற வேண்டும்.
அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்டால் 18 ஆவது அரசியல் திட்டத்தையும் ஒழிக்க வேண்டும்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் ஜனநாயகம் ஒழுக்கக் கோட்பாடுகள் அறவே கிடையாது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்போர் ஐக்கிய தேசியக் கட்சியினரே. அதனால்தான் மக்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சூழ்ந்து நிற்கின்றனர்.
எவராலும் எப்போதும் பொய்யான நாடகங்களை நடிக்க முடியாது. ஏமாற்றவும் முடியாது என்றார்.
மாத்தறை மாநகரசபை முன்னாள் மேயர் உப்புல் நிசாந்த தமது உரையில் தான் மாத்தறை மேயராகப் பணியாற்றியபோது அகில இலங்கையில் மாத்தறை மாநகரசபை சிறந்தது எனப் பரிசும் வழங்கப்பட்டது.
அதற்குக் காரணம் சிறந்த நிர்வாகம், ஊழலற்ற பணிகளே.
ஆனால், தன்மீது வீணான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பழிவாங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.
***************

உலகை ஏமாற்ற அமைச்சரவையின் அங்கீகாரம்!
மனித உரிமையை விஸ்தரிப்பதும் பாதுகாப்பதும் தொடர்பில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட திட்டத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக செல்லும்போது நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவையினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்கு இணங்க முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கே தற்போது அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் இன்று காலை ஜெனீவாவிற்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
***************

தடுத்து வைக்க கால அவகாசம், கடத்தப்படுவேரா விடுவிக்க.......?
கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் வரையில் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி கோரவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள சாதாரண சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்களை 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க முடியாது.
இந்த கால அவகாசத்தை 48 மணித்தியாலங்கள் வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
சட்டத் திருத்தம் குறித்த பிரேரணை இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளது.
விசாரணைகளை நடத்துவதற்கு 24 மணித்தியாலங்கள் போதுமானதல்ல என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோரை அடக்குமுறைக்கு உட்படுத்த அரசாங்கம் இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
***************

ஸ்ரீலங்காவின் படுகடன் தொகை அதிகரிப்பு?
இலங்கையின் அண்மைக்கால பொருளாதார நிலைமைகளில் கடன் அல்லாத இருப்புகள் துரிதமான வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் படுகடன் தொகை அதிகரித்துச் செல்லுவது கண்டறிப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.
இந்தப் படுகடன் தொகையில் துரித அதிகரிப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் கடனுதவி தொகையின் ஏழாம் கட்ட தவணைக் கடன் தொடர்பிலான ஆய்வின் நிறைவில் கொழும்பில் நேற்று ஊடவியலாளர் மகாநாடு இடம்பெற்றது.
அதன்போது கருத்துத் தெரிவித்த கலாநிதி பிரயன் எய்ட்கான் வெளிநாட்டுக் கடன்களை அடிப்படையாகக் கொண்டு இருப்புகளை பேணுகின்றமை அவதானத்திற்குரிய ஓர் நிலைமையாகும் எனத் தெரிவித்தார்.
இலங்கையின் கடன் அல்லாத இருப்புகள் துரித வீழ்ச்சி கண்டுள்ளன.
எனினும் இலங்கையின் படுகடன் தொகையில் துரித அதிகரிப்பு தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கிறது.
எதிர்காலத்தில் சந்தை தலையீடுகளை இலங்கை மத்திய வங்கி வரையறுக்க நேரிடும் என்பதுடன், அந்நிய செலாவனி சுயமாக தீர்மானிக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பின்பற்றப்படாத பட்சத்தில் ஏற்றுமதிக்கான போட்டித் தன்மையை பேணுவதில் சவாலை எதிர்நோக்க நேரிடும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாக உள்ளதென இந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
***************

உறவாடும் இந்திய ஸ்ரீலங்கா படைகளின் பேச்சுவார்த்தை!
இந்திய சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் பேச்சுக்கள் நாளை வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தப் பேச்சுக்களின் போது ஆராயப்படுவதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் வெளிநாட்டு உறவுகளுக்கான பிரிவின் உதவித் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் முருகேசன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்க கொழும்பு சென்றுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைகள் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா தலைமையிலான குழுவினருடன் இவர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
இரு நாட்டுக் கடற்படைகளுக்கும் இடையில் நடவடிக்கை, பயிற்சி, விநியோகம், தொழில்நுட்பம் ஆகிய விடயங்களில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.
பாக்கு நீரிணையில் சட்டவிரோத கடத்தல்கள், ஆயுத மற்றும் ஆட்கடத்தல்களை தடுப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் கூறியுள்ளன.
***************

ஊடகத்தின் அவசியம்
ஊடகங்களின் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடு முழு நாட்டையும் மக்களையும் பாதிக்கும் என இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறுகல் தீர்வு சபையின் தலைவர் சாம் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு ஒன்றில் ஊடகங்கள் பிழையாக வழிநடத்தப்பட்டால் அது மக்களை பாதுகாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது.
இந்த தகவலை ஊடகத்தின் சுய ஒழுங்கு சம்பந்தமாக கொழும்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டின் போது அவர் வெளியிட்டார்.
இதன்போது உரையாற்றிய காப்புறுதி ஒம்புட்சுமன் விக்கிரம வீரசூரிய 1970 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்கங்கள் ஊடக அடங்குமுறையை கையாண்டதாக குறிப்பிட்டார்.
செய்திதாள் நிறுவனங்கள் மூடப்பட்டன, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர், பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, செய்தி தணிக்கை உட்பட்ட விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
***************