Monday 5 September 2011

செய்திகள் 04/09


தமிழர்களை தாக்கும் இனவாத இனவழிப்பு இராணுவம்
உடுவில் ஆலடிப் பகுதியில் மர்ம மனிதனது நடமாட்டத்தினால் வீதிக்கு வந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிடி மற்றும் கொட்டன்களால் தாக்கப்பட்டதில் மோசமான காயங்களுக்கு உள்ளான மூவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றுமாலை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சந்தேகப்படும்படியாக நடமாடிய நபர்களைத் துரத்திச் சென்றபோதே இராணுவத்தினர் திடீரென வந்து தங்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர் என்று அந்தப் பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் தெரிவித்தனர்.
நேற்றுப் பகல் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று அந்த மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இராணுவத்தினர் கை, கால்களில் மட்டுமன்றி தமது பிறப்பு உறுப்புக்களை இலக்கு வைத்தும் தாக்கினர் என்றும் மக்கள் முறையிட்டனர்.
தாக்குதலின் பின்னர் தாம் பிடித்த மூவரை இராணுவத்தினர் மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் அவர்களை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
அவர்கள் மூவரையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவ அறிக்கையுடன் அவர்களை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துள் அடங்கும் மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து உடுவில் ஆலடியில் வசித்த மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
******************

வாக்காளத்து வாங்கும் கூட்டம் தயார்?
இந்த மாத நடுப்பகுதியில் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை நேரடி சாட்சியாகக் களம் இறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக இந்தோனேஷியத் தலைநகர் மணிலாவில் தற்போது நடைபெற்றுவரும் உலக உணவுத்திட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ள இமெல்டா, அங்கிருந்து நேரடியாக ஜெனீவா செல்வார் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வன்னியில் போர் தீவிரமாக நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவில் அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் இறுதிவரை கடமையாற்றியவர்.
அப்போது எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தும் இருந்தார்.
எனவேதான் அவரை இறுதிப் போர் குறித்த அரச தரப்பு சாட்சியாக ஜெனீவாவில் முன்நிறுத்த அரச தரப்புத் தீர்மானித்துள்ளது.
போரின் நேரடிச் சாட்சி என்ற வகையில் அரசு மீதான குற்றச்சாட்டுக்களைத் தமிழர் ஒருவரை வைத்தே முறியடிக்க அரசு இராஜதந்திர ரீதியில் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
போரின் பின்னர் அரசு மேற்கொண்ட நல்லிணக்க முயற்சிகள் மற்றும் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை முன்னிறுத்தியே ஜெனீவாவில் அரச தரப்பு தன்னை நியாயப்படுத்தும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக, வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களின் முழுமையான விவரம் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் விவரங்கள் என்பவற்றை வடக்கில் உள்ள அரச செயலகங்களில் இருந்து அரசு பெற்றுக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
******************
இராணுவத்தை அகற்ற கோரிக்கை
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலிருந்து இராணுவத்தினரை அகற்றி அவர்களை பிரதான முகாம்களுக்குள் மட்டும் முடக்குவதே, யாழ்ப்பாணத்திலும் வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் இன்று காணப்படும் குழப்ப நிலைகளைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி.
அதனைச் செய்யவில்லையேல், மக்கள் கிளர்ந்து இந்தப் பகுதிகளில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படவே அது வழிவகுக்கும் என்று யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படையினரால் தாக்கிக் காயப்படுத்தப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுப் பேசிய பின்னர் அவர் விடுத்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் வடக்குகிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரை முகாம்களுக்கு முடக்க அரசு தவறியதே தற்போது இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.
சிவில் சமூகத்துக்குள் இராணுவம் தேவையில்லை.
வடக்கு கிழக்கில் இராணுவம் குடிமனைகளுக்கு நடுவில் ஆங்காங்கே சிறிய கொட்டகைகளிலும் மினி முகாம்களிலும் சிறிய சிறிய முகாம்களிலும் இருப்பதுதான் இப்போதைய குழப்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.
இவ்வாறு இருக்கும் இராணுவத்தினர்தான் கிறிஸ் பூதமாக அல்லது மர்ம மனிதர்களாக தமது வீடுகளுக்குள் நடமாடுகிறார்கள் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
சந்தேகத்துக்கு இடமாக நடமாடுபவர்களைத் துரத்திச் செல்லும் ஒவ்வொரு தடவையும், எங்காக இருந்தாலும் இராணுவத்தினர் அந்த இடங்களுக்கு வந்துவிடுகிறார்களே? அது எப்படி? என்று மக்கள் எழுப்பும் கேள்வி நியாயமானதே.
இராணுவத்தினரும் சும்மா வருவதில்லை. கொட்டன்கள், பொல்லுகளுடனேயே வருகிறார்கள். அவர்கள் மக்களைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் பொதுமக்களைச் சோதனையிடுவதற்கும் அவர்களைத் தாக்குவதற்கும் இராணுவத்தினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக இனவாதம் ஊட்டி வளர்க்கப்பட்ட சிங்கள இராணுவம், இப்போது போர் இல்லாத நிலையில் தனது வெறியைத் தீர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டே இதுபோன்ற மர்ம மனிதர்கள் விவகாரத்தை உருவாக்கி, மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவதற்கு எல்லா நியாயங்களும் இருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுத் தலைவரும் அரசும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று உண்மையில் விரும்பினால் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் மக்கள் கிளர்ந்தெழுவதைத் தடுக்க முடியாது.
நீங்கள் விரைந்து செயற்படவில்லை எனில், அவர்கள் விரைந்து முடிவெடுப்பார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
******************
தன்மானமிழந்த ஸ்ரீலங்கா அமைச்சர்கள்
18 ஆவது அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அமைச்சர்கள் தன்மானத்தை இழந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் நாட்டின் கௌரவத்தையும் மக்களின் கௌரவத்தையும் இழக்க நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு உடற்கூற்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட போதே சரத் பொன்சேக்கா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மக்களுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எண்ணியுள்ளதாக தெரிவித்த அவர் அழகானதொரு நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
******************
கையெழுத்திட தயங்கும் ஸ்ரீலங்கா
சட்டவிரோதமான காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தலை விடுத்துள்ளது.
இந்தக்குழு இலங்கைக்கு வருகைத்தர பல தடவைகள் அனுமதி கோரியபோதும் அதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என்று சட்டவிரோதமாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுபபினர் மார்டிஸ் ஜோசு பெல்லாடோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறும் நிறுவன நிகழ்வுக்கு வருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பில் இரண்டு ஞாபகமூட்டல் கடிதங்களை ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத காணாமல் போவோர் தொடர்பான நடவடிக்கைக்குழு, இலங்கைக்கு அனுப்பியபோதும் அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் 12ஆயிரத்து, 230 முறைப்பாடுகளை ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் நடவடிக்கை குழு கொண்டிருக்கிறது.
இதில் 40 முறைப்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
6ஆயிரத்து 535 முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைனைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
எனினும் 5ஆயிரத்து 653 முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
இதேவேளை இலங்கை அரசாங்கம் தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காணாமல் போதல் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு பலதடவைகளாக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
******************
அச்சமடைந்துள்ள மகிந்த!
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் போது ஹொஸ்டனில் தனது குடும்பத்தினரை சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டிருந்த திட்டம் திடீரெனக் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ம் நாள் நியுயோர்க்கில் ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் போது, சில நாட்கள் முன்னதாவே ஹொஸ்டனுக்குச் சென்று குடும்பத்தினருடன் சில நாட்களை கழிக்க சிறிலங்கா அதிபர் திட்டமிட்டிருந்தார்.
தற்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டு ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை ஒட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற சிறிலங்கா அதிபருக்கு செப்ரெம்பர் 23ம் நாள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே அவர், பொதுச்சபையின் ஆரம்ப அமர்வுகளில் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அமெரிக்காவில் அதிக நாட்கள் தங்கியிருப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் சிறிலங்கா அதிபருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் மீது அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் அமெரிக்கப் பயணத்தை சுருக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************
கொழும்பு செல்லும் பிளேக்
அமெரிக்காவின உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மூன்ற நாள் பயணமாக செப்ரெம்பர் 12ம் நாள் கொழும்பு செல்லவுள்ளார்.
கடந்த மாத இறுதியில் கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த பிளேக் ஐரின் சூறாவளியினால் தனது பயணங்களைப் பிற்போட்டிருந்தார்.
தற்போது அவர் தனது பயணத் திட்டங்களை மாற்றியமைத்து எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு செல்வதற்கு ஒழுங்குகளைச் செய்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செல்லும் பிளேக் இரண்டு விடயங்களை வலியுறுத்தவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு கொண்டு செல்வது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை மீளத் தொடங்குவது குறித்தும் சிறிலங்கா அரசிடம் அவர் வலியுறுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 19வது கூட்டத்தொடரில் விவாதிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 12ம் நாள் தொடங்கும் 18வது கூட்டத்தொடரில் கொண்டு வருவது குறித்து அமெரிக்கா இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக சிறிலங்காவுக்குத் தெரியப்படுத்தியிருந்தது.
ஆனால் அது சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்தி விடும் என்பதால், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அந்தத் திட்டத்தை உடனடியாகவே நிராகரித்து விட்டது.
எனினும் இந்தப் பயணத்தின் போது பிளேக் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இறுக்கமாக வலியுறுத்துவார் என்றும் சிறிலங்காவின் நிலைப்பாட்டை மீளாய்வு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தொடர்ச்சியாக மறுத்து வருவதால் மற்றொரு நாடு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று கவலையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் மத்தியில் தோன்றியுள்ளது.
மூன்று நாள் சிறிலங்கா பயணத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்ல திட்டமிட்டுள்ள பிளேக், கொழும்பில் இருந்து செப்ரெம்பர் 14ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ளார்.
அங்கு அவர் தூதுவர் நிலையில் அல்லாத அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
******************
பதறியடித்து பறந்து திரியும் பீரிஸ்!
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு செல்லத் திட்டமிட்டுள்ளதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது ஜெனிவா பயணத் திட்டங்களை கைவிட்டு அவசரமாகக் கொழும்பு திரும்பவுள்ளார்.
சிங்கப்பூர், தென்கொரியா, பிரித்தானியா, சேர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கான பயணத்தின் முடிவில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரது பயணத் திட்டம் பிளேக்கின் வருகையால் குழம்பிப் போயுள்ளது.
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் செப்ரெம்பர் 12ம் நாள் கொழும்பு வருவதால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஜெனிவா பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு கொழும்பு திரும்பவுள்ளார்.
செப்ரெம்பர் 11ம் நாள் ஜெனிவா செல்லும் அவர் அன்றைய நாள் மட்டுமே அங்கு தங்கியிருப்பார்.
அதுவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெனிவா வரும் பிரதிநிதிகள் பலருக்கும் மதிய மற்றும் இரவு விருந்து அளிப்பதற்காகவே அவர் ஜெனிவாவில் தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பின்னர் அவர் உடனடியாகவே கொழும்பு திரும்பவுள்ளார்.
******************
ம(h)து போசனமளிக்கும் ஸ்ரீலங்கா!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு கொழும்பில் இரவு விருந்து கொடுத்து வளைத்துப் போடும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா சார்பில் பங்கேற்கும் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவே இந்த இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா அரசின் மூத்த சட்ட ஆலோசகர் மொகான் பீரிஸ் ஆகியோரும் இந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தனர்.
காலிமுகத்திடல் விடுதியில் நடந்த இந்த இரவு விருந்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பங்களாதேஸ், கியூபா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு, நோர்வே, கட்டார், ரஸ்யா, சவூதிஅரேபியா, சுவிற்சர்லாந்து, தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அதேவேளை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதே சிறிலங்காவின் தற்போதைய இலக்கு என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் எதிர்வரும் 12ம்நாள் ஆரம்பமாகி 30ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும்.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியன தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்பதால், சிறிலங்கா அரசு அதனை முறியடிப்பதற்கான முயற்சிகளை கடந்தவாரம் உச்சவேகத்தில் முடுக்கி விட்டிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் மகிந்த சமரசிங்க தலைமையிலான சிறிலங்கா பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 8ம் நாள் கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது.
அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, அமைச்சரவையின் சட்டஆலோசகர் மொகான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
முன்னதாகவே, ஜெனிவா செல்லும் சிறிலங்கா பிரதிநிதிகள் குழு அங்கு ஐ.நா மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது, வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
******************