Tuesday 6 September 2011

செய்திகள் 06/09


தமிழர் கொல்லப்படுவதை பார்த்து பூரித்த மகிந்த!
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது எறிகணை நடத்தும் செய்மதிக் காட்சிகள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமெரிக்க ராஜதந்திரிகளினால் காண்பிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கனரக ஆயுத பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததன் பின்னர் இந்தக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்ததாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த வீடியோ காட்சிகள் அரசுத் தலைவருக்கும், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணேவிற்கும் காண்பிக்கப்பட்டதாக அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என அரசுத் தலைவர் அறிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மே மாதம் 2ம் திகதி வைத்தியசாலை மீது தாக்குதல் நட்டதப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்ததாகவும், அந்தப் பகுதியில் வைத்தியசாலைகள் கிடையாது என அரசுத் தலைவர் அதனை மறுத்ததாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
எறிகணைத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளதாக அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செய்மதிப் படங்களில் எந்தத் தரப்பினர் தாக்குதல் நடத்தினார்கள் என்பதனை துல்லியமாக வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த நடவடிக்கைகளை இந்தியா செய்மதி மூலம் கண்காணித்து வருவதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, டேவிட் மூரிடம் தெரிவித்துள்ளார்.
*******************

எதையும் சமாளிக்கலாம் என எதையும் சமாளிக்க முடியாமல் திணறும் ஸ்ரீலங்கா!
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது இலங்கைக்கு எதிராக எந்தவகையான அழுத்தங்கள் வந்தாலும் அதனை சமாளிக்கும் நோக்குடனேயே அங்கு செல்வதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்படும் பட்சத்தில் இலங்கையில் தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தி அந்த நாடுகளின் ஆதரவைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறினார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்தே அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கியது எனக் கூறப்படும் கருத்துகளை தான் அடியோடு மறுப்பதாக தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தாம் கடந்த வருடம் நடைபெற்ற ஜெனிவா கூட்டத்தொடரின்போதே கவனஞ் செலுத்தியதாகவும், அரசு தாமாகவே முன்வந்துதான் அவசரகாலச் சட்டத்தை நீக்கியது. இதனை அரசுத் தலைவர் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்திற்கொண்டே அரசு இதுவரைகாலமும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது.
ஆனால், தற்போது நாட்டில் சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்திற்கொண்டே அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்குத் தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கும் அரசு அதைவிட மோசமான விதிகளை பயங்கரவாத தடைச் சட்டத்தில் இணைத்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவதானிகள் இதனை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*******************

பிதற்றும் சிங்களம்?
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சி செய்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 46 அரச சார்பற்ற நிறுவனங்களும், 262 நபர்களும் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் 95 வீதமானவை மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவை.
இந்த நிறுவனங்களுக்காக குரல் கொடுக்கும் உள்நாட்டு முகவர்கள் பற்றியும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசுத் தலைவர்த் தேர்தலுக்கு முன்னதாக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்று 200 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை அரசு பலமான சர்வதேச நெருக்கடியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசும் அரசு சார்புடையவர்களும் செய்வதறியாது தம்மை மறந்து உளறுவதாக அவதானியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
*******************

மறுக்கும் அமெரிக்க தூதரகம்
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் செப்ரெம்பர் 14ம் நாள் சிறிலங்கா வரவள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.
றொபேட் ஓ பிளேக்கின் மீள் பயணத்திட்டம் குறித்து இன்னமும் எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக ஊடக அதிகாரி கிறிஸ்ரொபர் எல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்தமாத இறுதியில் சிறிலங்கா வரத் திட்மிட்டிருந்த பிளேக் ஐரின் சூறாவளியினால் தனது பயணத்தைப் பிற்போட்டிருந்தார்.
எனினும் அவர் எதிர்வரும் 12ம் நாள் கொழும்பு வரவுள்ளதாக சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.
அதேவேளை மற்றொரு கொழும்பு ஊடகம் எதிர்வரும் 14ம் நாள் பிளேக் கொழும்பு வரவுள்ளதாக நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.
இந்தநிலையிலேயே, பிளேக்கிள் மீள்பயண திட்டம் குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை எனறு அமெரிக்க துதரக ஊடக அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
*******************

மார்தட்டி பொய் சொல்லும் மகிந்த அரசு
நாடு அபிவிருத்தியடைந்து வருவதாக மார்தட்டும் அரசு, பொருட்களின் விலைவாசிகளை அதிகரிக்கின்றது.
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் காலத்தை இழுத்தடிக்கின்றது.
சர்வதேசத்திடமிருந்து அதிக வட்டிக்கு நாளாந்தம் கடன் பெறுகிறது.
இதுதான் மகிந்த சிந்தனையின் அபிவிருத்தியா என ஜே.வி.பி. கேள்வியயழுப்பியுள்ளது.
அரசின் திட்டமொன்று வெற்றியடைந்தால் அதன் நன்மைகளை நுகரும் அரசு, மஹிந்த சிந்தனைக்கு கிடைத்தவெற்றி என வர்ணிக்கும்.
மாறாக அத்திட்டத்தில் ஏதாவது முறைகேடு இடம்பெற்றால் அந்தப் பழியை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பித்துக்கொள்வதற்கு முயலும்.
தரம் குறைந்த பெற்றோல் விவகாரத்திலும் இதுவே நடந்தது என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள அதன் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
*******************

ஆட்சி மாற்றம் தேவை - ஜே.வி.பி
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மாற்றுக் கொள்கையுடைய பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு ஆட்சி மாற்றம் அவசியமானது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிற்போக்கான செல்வந்தர்களது வர்க்கத்தினால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.
தற்போதைய ஆட்சியாளர்கள் போலியான தேசிய பொருளாதாரமொன்றை வெளிக்காட்டுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளையே தற்போதைய ஆட்சியாளர்களும் பின்பற்றுகின்றனர்.
சோசலிச கொள்கைகளின் அடிப்படையிலான நாட்டுக்கு பொருத்தமுடைய பொருளாதார முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலியான அபிவிருத்தி என்று மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றுகின்றனர்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சாரங்கள் வெறும் மாயையே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அரசுத் தலைவர் அளித்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவிலான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி அவதியுறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
*******************

விற்பதற்கு எதுவுமில்லாத மகிந்த ஆட்சி - சரத்
எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டவர்களுக்கு நிலங்களை விற்கப்போவதில்லை என அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி தற்போது விற்பதற்கு இங்கு எஞ்சியுள்ள நிலங்கள் என்று எதுவுமே இல்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
100 ஏக்கர் நிலப்பரப்பை விற்று 50ஆயிரம் மில்லியனை அரசு தன் வசப்படுத்தியது.
அரசு இராணுவத்தினரது வீடுகள், சிறைச்சாலை இடங்கள் என எல்லாவற்றையும் விற்று தீர்த்து விட்டது.
இவ்வாறு மக்களின் சொத்துக்களை அரசு கொள்ளையடிக்கிறது.
லிபியாவில், எகிப்தில் கடாபி மற்றும் முபாரக் போன்றோரும் இதைத் தான் செய்தனர்.
மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற வேளை அங்கிருந்த மக்களுக்களிடம் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
*******************