Tuesday 13 September 2011

செய்திகள் 13/09


அறிக்கை அனுப்பி வைப்பு!
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் வெளியிடுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு நிபுணர்குழுவின் அறிக்கையை அனுப்பவுள்ளது குறித்து நேற்று சிறிலங்கா அரசுக்கு முறைப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையை இன்று தமக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இதனால் சிறிலங்கா விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த நகர்வு சிறிலங்காவை அனைத்துலக விசாரணைகளுக்குக் கொண்டு செல்லக் கூடும் என்று வொய்ஸ் ஒவ் அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்ததுடன், இதுபற்றி விசாரிக்க அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதிக்க இணங்கிய பின்னரே ஐ.நா பொதுச்செயலரால் விசாரணை ஒன்றுக்கு ஆணை வழங்க முடியும் என்றும் வொய்ஸ் ஒவ் அமெரிககா தகவல் வெளியிட்டுள்ளது.
*******************

மூன்றாம் தரப்பு மூலம் தெரிந்து கொண்ட ஸ்ரீலங்கா!
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது பற்றி சிறிலங்கா அரசு மூன்றாவது தரப்பின் ஊடாகவே அறிந்து கொண்டதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9ம் நாள் ஜெனிவாவில் சிறிலங்கா பிரதிநிதிகள் குழு, மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 29 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தது.
அந்தச் சந்திப்பின் போதே, நிபுணர் குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக, நவநீதம்பிள்ளை தமக்குத் தெரியப்படுத்தியதாக சில நாடுகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இது சிறிலங்கா தரப்புக் குழுவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே, நேற்றைய கூட்டத்தொடரில் உரையாற்றிய மகிந்த சமரசிங்க, பான் கீ மூன் அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்புவது பற்றிய தகவலை தாம் மூன்றாவது தரப்பின் ஊடாகவே அறிந்து கொண்டதாகவும், இது நவநீதம்பிள்ளையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் அவர், இன்று சிறிலங்காவுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கலாம் என்று அனைத்துலக சமூகத்தையும் எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா குழுவினர் ஜெனிவா சென்றடைந்த பின்னரே ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.
இது சிறிலங்கா தரப்புக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்ததாகவும், அதன் காரணமாகவே மகிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*******************

ஆதரவு தேடும் ஸ்ரீலங்கா!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டால், தமக்கு ஆதரவாக சீனாவும், பாகிஸ்தானும் துணை நிற்பதாக ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியதாக, இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்காக 54 இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் கோரியுள்ளதாகவும், சீனா தமக்கு பலமான ஆதரவை வழங்குவதாகவும் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
தமக்கு ஆதரவாக மாலைதீவு அதிபரும் ஜெனிவா வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, முன்னதாக தமக்கு ரஸ்யாவும் ஆதரவு வழங்கி வருவதாகவும், ஐ.நாவில் எத்தகைய தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதனை முறியடிக்க ரஸ்யா உதவும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.
ஆனால் இந்தச் செவ்வியில் ரஸ்யாவின் ஆதரவு பற்றி மகிந்த சமரசிங்க தகவல் எதையும் வெளியிடவில்லை.
சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஆதரவாக இருப்பது பற்றியே கூறியுள்ளார்.
இதனால் ரஸ்யாவின் ஆதரவை சிறிலங்கா இழந்து விட்டதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
*******************

எண்ணிப் பார்க்கும் பீரிஸ்?
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சபையின் 18ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாவதற்கு முன்னதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய சந்திப்புக்களில் மிகச் சாதகமான மறுமொழி தமக்குக் கிடைத்ததாக அவர் கூறினார்.
மதிய வேளையில் 29 நாடுகளினதும் மாலையில் 10 நாடுகளினதும் பிரதிநிதிகளை தாம் வெள்ளியன்று சந்தித்துப் பேசியதாகவும், இதற்கான விசேட நிகழ்வு இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகள் தமக்குச் சாதமாகப் பதிலளித்துள்ளன என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
போர் முடிந்த குறுகிய காலத்துக்குள் இலங்கை அடைந்துள்ள இலக்குகளை அறிவதில் அந்தப் பிரதிநிதிகள் மிக ஆர்வமாக இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. கூட்டத் தொடர்களில் எந்த விடயம் விவாதிக்கப்பட முடியும் எத்தகைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட முடியும் என்பன தொடர்பில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளன.
அப்படிப்பட்ட நிலையில் ஐ.நாவின் செயல்பாடுகளில் எத்தகைய குறைகளும் ஏற்படாமல் விழிப்பாக இருங்கள் என்று அந்த நிகழ்வுகளில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
2012ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19ஆவது கூட்டத் தொடர் வரைக்கும் இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளிடம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
*******************

ரொபேர்ட் ஓ பிளேக் யாழிற்கு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் இன்று யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.
அங்கு அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அவர் நேடியாகக் கேட்டறிந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிய வருகிறது.
எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சின் மக்கள் உறவுகள் மற்றும் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் நாயகம் சரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
*******************

கொள்ளையடித்த சவேந்திர டி சில்வா!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி விதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வாவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த விசேட புலனாய்வு அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மூன்று புலனாய்வு அதிகாரிகள் இவ்வாறு அமெரிக்கா சென்றுள்ளனர்.
அதில் இருவர் அரசுத் தலைவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
மற்றைய அதிகாரி, சாவேந்திரா சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என அந்த இணைய ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்றக் காலத்தில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகையான தங்க ஆபரணங்களை சவேந்திரா சில்வா பதுக்கி வைத்து, தற்போது அவற்றை பணமாக மாற்றிக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் சவேந்திராவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாரியளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சவேந்திரா சில்வா முயற்சி செய்து வருவதாகவும் அந்த இணைய ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
*******************

அமெரிக்காவுக்கு விளக்கமளிக்கும் ஸ்ரீலங்கா
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது நடந்தவை குறித்தும் போரின் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட சனல்4 தொலைக்காட்சி, வெளியிட்ட ஸ்ரீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப் படத்துக்குப் பதிலாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தயாரித்த வீடியோவும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
வொஷிங்ரனில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் சாலிய விக்கிரம சூரியவினால் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
போருக்குப் பின்னர் இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சாலிய விக்கிரமசூரிய விளக்கினார்.
அப்போது அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்த நல்லிணத்துக்காக கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நிச்சயமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
*******************


குடும்ப சொகுசுக்கு உலங்குவானூர்தி
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமானவர்களின் போக்குவரத்துத் தேவைகளுக்காகவே ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் வாங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரச வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்யநாட்டு கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள ஹெலிகளின் பெறுமதி 135 கோடி ரூபாவாகும்.
அதற்கமைய அரசு ரஷ்யாவிடமிருந்து கடனுக்கு வாங்கவுள்ள 14 ஹெலிகளுக்கும் 1895 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டியுள்ளது.
அரசு வாங்கவுள்ள இந்த ஹெலிகள் பிரபுக்களின் பயன்பாட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளன.
விசேட இலங்கை விமானப்படை மற்றும் ரஷ்யாவிலுள்ள ரொசொ பொரொன் எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்குமிடையே இந்த ஹெலிகளின் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவற்றைத் தருவிப்பது தொடர்பாக அரசும் விமானப்படையும் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே தெரிவிக்கின்றன.
இந்த ஹெலிகள் இலங்கையின் கடல் வலயத்தைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாகவே தருவிக்கப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆனால் விமானப்படைத்தளபதி எயார் வைஸ்மாஷல் ஹர்ஸ அபேகுணவர்த்தனவின் கூற்றுக்கு அமைய, இந்த ஹெலிகள் சிவில் விமானப்போக்குவரத்துச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவே தருவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உலங்குவானூர்தியொன்றில் ஒரு தடவை ஒன்பது பயணிகள் மட்டுமே பயணிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.
இரண்டு ஹெலிகளை முன்பு தருவிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அதுதொடர்பாக 231 கோடி ரூபாய்கள் செலவு ஏற்படும் என்று லங்கா செய்திப்பத்திரிகை தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
*******************

ஐதேகவுடன் கூட்டுச் சேர முடியாது - ஜே.வி.பி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் இணைந்து செயற்பட உள்ளதாக வெளியான செய்திகளில் எதுவித உண்மையும் கிடையாது.
வெளிநாடுகளுக்கு அடிபணிந்து, கொள்ளையிடும் பொருளாதார முறைமையை ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டுக்கு அறிமுகம் செய்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவ்வாறான ஓர் கட்சியுடன் இணைந்து நாட்டை நல்லவழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள முடியாது.
மாற்று சமூகப் பொருளாதார முறைமையுடைய ஓர் ஆட்சியே தற்போது நாட்டுக்கு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
*******************

லஞ்சம் கோரும் காவல்துறை
குற்ற விசாரணைப் பிரிவின் உயரதிகாரி அனுர டி சில்வா லஞ்சம் கோரியதாக பெண் ஒருவர் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான விசாரணைகளை காவல்துறைப் பரிசோதகர் அனுர டி சில்வா மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காணி பிணக்கு ஒன்றைத் தீர்ப்பதாகத் தெரிவித்து, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் ஒரு பகுதி காணியை லஞ்சமாக கோரியதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யாது நேரடியாக அவர் நீதிமன்றில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
சட்டத்தரணி ஒருவரின் ஊடாக சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரத்தைப் பிரயோகம் செய்து தம்மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்துவதாக குறித்த உயரதிகாரி தம்மை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்துள்ளார்.
காணிப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து தம்மை விடுவிப்பதாகவும் அதற்கு பிரதி உபகாரமாக 15 பேர்ச் காணியில் ஒரு பகுதியை தமக்கு வழங்குமாறும் காவல்துறை பரிசோதகர் அனுர டி சில்வா தம்மிடம் கோரியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசடியான முறையில் தம்மிடம் வாக்குமூலமொன்றை குறித்த அதிகாரி பெற்றுக் கொண்டதாக மேலும் தெரிவித்துள்ளார்.
*******************