Friday 23 September 2011

செய்திகள் 23/09


மகிந்த மீது அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது, நியுயோர்க் நீதிமன்றத்தில் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி போர்க்குற்ற வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றிலேயே இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி சார்பில் நியுயோர்க் மாநில நீதிமன்றத்தில் இந்த வழக்கினை சட்டத்தரணியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருமான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தாக்கல் செய்துள்ளார்.
கேணல் ரமேஷ் யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு அறிவிப்பை மேற்கொண்டிருந்ததுடன் ரமேஷின் இறந்த உடலையும் பல்வேறு தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தியிருந்தது.
கொல்லப்பட்ட ரமேஷின் உடலை அவரது மனைவி வத்சலாதேவி தனது கணவருடையது என உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனாலும் இறப்பதற்கு முன்னர் தளபதி ரமேஷ் இராணுவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சனல் 4 காணொளியானது இராணுவம் மேற்கொண்ட படுகொலைக்கான ஒரு வலுவான சாட்சியமாக அமைந்துள்ளது. 
இராணுவத்தின் தலைமைத் தளபதி என்ற நிலையில் ரமேஷின் படுகொலைக்கு சிறிலங்கா அதிபர் இராஜபக்சவே முதன்மைக் காரணம் என இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படுகொலையானது இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கான வலுவான ஆதாரமென சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன. 
அண்மையில் வெளியான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை, சிறிலங்கா அரசபடைகள் வன்னிப்போரில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன் வன்னிப் போரின்போது 40 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டிருந்தது. 
நிபுணர்குழுவின் இவ் அறிக்கை அண்மையில் ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடருக்கு ஐ.நா பொதுச்செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டமை தெரிந்ததே. 
இவ்வழக்கு சிறிலங்கா அதிபரின் நியுயோர்க் விஜயத்தின்மீது எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
******************

சுவிஸில் போர்க்குற்ற வழக்கு
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சமத்தப்பட்டுள்ளன.
தீங்குகளுக்கு எதிரான சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன.
இதைடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் நாளுடன் கொழும்பு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
******************

பிரித்தானியாவில் இருந்து 150 தமிழர்கள் நாடுகடத்தல்
தமது நாட்டில் அரசியல் மற்றும் அகதிகள் அந்தஸ்த்துக்கோரி அது நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வரும் 28ம் திகதி சுமார் 150 தமிழர்களை தனி விமானம் ஒன்றில் ஏற்றி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்குச் செல்லும் வெளிநாட்டு குடிஉரிமையுள்ளவர்களையே இலங்கை அரசு கைதுசெய்து சிறையில் அடைத்துவரும் நிலையில் இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 150 பேரின் நிலை என்னவாக அமையும் என பல அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளது.
******************

கனடாவின் நடவடிக்கை குறித்து சிங்களம் அதிருப்தி?
இலங்கைக்கு எதிராக கனடா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ரஸ்யா உள்ளிட்ட சில நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தி வருகின்றது.
எனினும், இந்த முயற்சிகளுக்கு ரஸ்யா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை அமைப்புக்களும், மகளிர் அமைப்புக்களும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என இலங்கைக்கு ஆதரவான நாடுகள் கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************

ஐநாவின் தோல்வி?
இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கொழும்பிடம் தோல்வி அடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஓராண்டுகால நடவடிக்கைகள் குறித்து 69 பக்க அறிக்கை ஒன்றை நேற்று ஜெனீவாவில் விடுத்தது.
2010 ஜூலை மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பணிகள் அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகளில் மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தபோதும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளின் விடயத்தில் நடவடிக்கை எடுக்க சபை தவறிவிட்டது என்று கண்காணிப்பகம் சாடியுள்ளது.
அறிக்கையில் இலங்கை குறித்து ஒன்றரைப் பக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களைச் சுட்டிக் காட்டும் கண்காணிப்பகம், நிபுணர் குழு சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக இலங்கை அரசு வெறுமனே குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததாகவும் சாடி உள்ளது.
அத்தகைய அறிக்கையைப் பெறுவதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் அதிகாரம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு இல்லை என்று இலங்கை அரசு தவறாகக் கூறிவருகிறது.
நிபுணர் குழுவில் அடங்கியிருந்தவர்களின் பக்கச்சார்பின்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
அறிக்கையின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று மனித உரிமைகள் சபை உள்ளிட்ட ஐ.நாவுக்கு இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது.
2009ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையின் மீது மீண்டும் கவனம் செலுத்துமாறு நிபுணர் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்தபோதும் மனித உரிமைகள் சபை கடந்த ஜூன் மாதம் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கண்காணிப்பகம் சாடுகிறது.
எனவே, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மீளாய்வு செய்யவேண்டும்.
மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்குத் தான் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை அரசு கடைப்பிடிக்காமை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படி பான் கீ மூனுக்கு மனித உரிமைகள் சபை அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.
குறிப்பாக போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்துச் செயற்படவேண்டும் என்று இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளது.
******************

கடுப்பான அமைச்சர்கள்?
13 வது அரசமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்கப்படுவதை ஆட்சேபிக்கும் இனவாத அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க போன்றோரைச் சமாளிப்பதற்கு இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் பலர் தயாராகியுள்ளதாகத் தெரியவருகிறது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் தீர்வு யோசனைகளைத் தயாரிக்கும் போது 13 வது அரசமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் சென்று சில விடயங்களில் உடன்பாடு காண்பதென்று அரசு யோசித்து வருகிறது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான சர்வதேச அழுத்தமும் அரசுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்கும் விடயத்தை அரசின் கடும்போக்குடைய இனவாதத்தைக் கக்கும் அமைச்சர்கள் ஆட்சேபித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட சில அமைச்சர்கள் இவ்வாறான ஆட்சேபனைகளைத் தெரிவித்து வருவது குறித்தான தமது அதிருப்தியை தமிழ் அரசியல்வாதிகள் பலர் மூத்த அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது.
அமைச்சரவைக்குள்ளேயே இவ்வாறான எதிர்ப்பு வருமாயின் அரசியல் தீர்வு குறித்தான பேச்சுகளை எப்படி நம்பிக்கையுடன் முன்னெடுக்கமுடியும் என்று இந்த தமிழ் அரசியல்வாதிகள் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
தமிழ் அரசியல் பிரமுகர்களின் இந்தக் கவலையை நன்கு செவிமடுத்த மூத்த அமைச்சர்கள் சிலர் இக் கடும்போக்கு அமைச்சர்களுடன் இதுபற்றிப் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்குத் தம்மால் முடியுமென உறுதியளித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதன்படி கடும்போக்குடைய இனவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ ஆகியோருடன் பேசுவதென்றும், 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வு வழங்குவது தொடர்பாக அவர்களின் சிபார்சுகளை உள்ளடக்குவது பற்றி ஆராய்வதென்றும் இந்த மூத்த அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
******************

மீள்குடியேற்ற ஏமாற்றம்
வவுனியா மெனிக்பாம் மூடப்படுவது தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டு;ள்ளது
முன்னர் சுமார் 3 லட்சம் பேரையும் தற்போது 7ஆயிரத்து 400 பேரையும் கொண்டுள்ள வவுனியா மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமை மூடி அதனை வேறு ஒரு இடத்தில் சிறிய வீடுகளுடன் அடங்கியதாக அமைக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரண்டு வாரக் காலப்பகுதியில் இதனை ஏற்படுத்தப் போவதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
எனினும் அரசாங்கம் கூறும் குறித்த இடத்தில் பொதுமக்களை தங்கவைக்கக்கூடிய வசதிகள் இல்லை.
இதற்காக முல்லைத்தீவு கோம்பாவில் என்ற இடத்தில் உள்ள 600 ஏக்கர் காட்டுப்பகுதி ஒன்று துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை சுற்றாடல் துறையினரும் பொதுமக்களும் எதிர்த்து வருகின்றனர்.
எனினும் தாம் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்திட்டங்களை மேற்கொள்கின்ற போதும் சர்வதேசம் அதனை விமர்சனம் செய்வதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த மக்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்த முடியாமைக்கு இன்னும் நிலக்கண்ணிகள் அகற்றப்படாமையே காரணம் என்று அரசாங்கம் காரணம் கூறி வருகிறது.
******************