Sunday 18 September 2011

செய்திகள் 17/09



காலம் கடந்த ஞானம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வலியுறுத்தல்களுக்கமைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் இனியும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணிவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதி மொழியின் பிரகாரம் கௌரவமான சமாதானத்துடனான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் நிலையானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வே இறுதியானதாகும். 
இதனை சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும் வரையில் தட்டிக்கழித்து வந்தமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. 
ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்ற நிலையில் அரசியல் தீர்வு தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பதிலளிக்குமாறு பேரவையின் அங்கத்துவ நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தியுள்ளன. 
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டினை விளக்குகையிலேயே அக்கட்சியின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இதனைத் தெரிவித்தார். 
யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போதும் அது நிறைவு பெற்றதன் பின்னரும் கூட இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றின் அவசியம் குறித்து ஐக்கிய தேசியகட்சி ஒரே நிலைப்பாட்டிலும் மாறா நிலைப்பாட்டிலும் இருந்து வருகின்றது. 
கடந்த கால இருண்ட யுகங்கள் மறக்கப்பட வேண்டுமெனில் அரசியல் தீர்வினூடாக இந்நாட்டுக்கு நிரந்தரமானதொரு அமைதியே அவசியமாகும். 
ஐக்கிய தேசியகட்சி இது தொடர்பில் பல தடவைகளில் முயற்சித்த போதும் மாற்றுத்தரப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை. 
ஆனாலும் அன்று மாற்றுத்தரப்பினர் பின்பற்றிய கொள்கையில் ஐ.தே.க இன்று இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
வட்டமேசை மகாநாடு
இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. 
எதிர்வரும் 20ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்வதேச ஜூரிகள் சபையின் தலைவர் ஜோன் டோவ்ட், நியூ சௌத் வெல்சின் முன்னாள் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************

அமெரிக்க தலையீடு காரணமில்லையாம்?
சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். 
இருதரப்பும் பேச்சு மேசைக்குத் திரும்ப அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலர் பிளேக்கின் அழுத்தங்களே காரணம் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்தே இரா. சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். 
அமெரிக்காவின் தலையீடுகள் எதுவும் இருக்கவில்லை என்று தெரிவித்தள்ள அவர் அடுத்த சுற்றுப்பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரல் குறித்துக் கருத்து எதனையும் வெளியிட அவர் மறுத்துள்ளார்.
அதேவேளை நேற்று நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பாக இருதரப்பும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒப்பமிட்டு இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். 
இந்தக் கூட்டறிக்கையில், செப்ரெம்பர் 2ம் நாள் சிறிலங்கா அதிபருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே நேற்று பேச்சுக்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 
விரைவான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக, கடந்த மார்ச் 18ம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்துரையாடல் ஆவணம் மற்றும் அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்கள், அறிக்கைகளின் அடிப்படையில் பேச்சுக்களை மீளத் தொடங்க முடியும் என்று இந்தச் சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மீளவும் பேச்சுக்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
நேற்றைய பேச்சுக்களில் சிறிலங்கா அரசின் சார்பில் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், மற்றும் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சட்டவாளர் கனகஈஸ்வரன்ஆகியோரும் பங்கேற்றனர். 
அடுத்த சுற்றுப்பேச்சு ஒக்போரபர் 3ம் நாள் நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
பேச்சுக்களின் போது, முன்னதாக வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்து, குறிப்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, சந்திரிகா குமாரதுங்கவின் தீர்வுப்பொதியும் கூட கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 
அதேவேளை பேச்சுக்கள் பற்றிய தகவல்கள் வெளியிடுவதில்லை என்று இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இதன்காரணமாக பேச்சுக்களில் பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தவிர்ந்த வேறு எந்தத் தகவலையும் வெளியிட மறுத்துள்ளார். 
****************

அப்பால் செல்வது எப்போது?
இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியிருக்கின்றன. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்கனவே கையளித்திருந்த தீர்வு யோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்த 18 அதிகாரங்கள் 13ஆவது திருத்துக்கு அப்பாலானவை இருந்த போதும் அவை தொடர்பில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. 
நேற்றுப் பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சில் இந்த இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது. 
தடைப்பட்ட அரசு கூட்டமைப்புப் பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. 
கடந்த ஜனவரியில் ஆரம்பமான இந்தப் பேச்சுக்கள் ஓகஸ்ட் மாதம் வரை 10 சுற்றுக்களுக்கு நீண்டன. 
எனினும் அவற்றில் காணப்பட்ட இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசு தீர்க்கமான பதிலை வழங்காமை போன்ற காரணங்களால் தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதற்கு கூட்டமைப்பு மறுத்திருந்தது.
அதன் பின்னர், 40 நாள்கள் கடந்த நிலையில் நேற்று பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 
கடந்த 2ஆம் திகதி அரசுத் தலைவருக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் பின்னர் நேற்று பேச்சுக்கான திகதி குறிக்கப்பட்டது என்று அரசு  கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
நேற்றைய பேச்சில் இரு தரப்பினருக்கும் இடையில் அரசியல் தீர்வு குறித்த விடயங்களே முக்கியமாக ஆராயப்பட்டன என்று கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் கிறீஸ் பூத விவகாரம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டாலும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் குறித்தே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையளித்த தீர்வு தொடர்பான யோசனைகளின் அடிப்படையில் தொடர்ந்து பேசுவதற்கான இணக்கம் நேற்றுக் காணப்பட்டதாக கூட்டறிக்கை கூறுகின்றது.
விரைவில் மேற்கொள்ளப்படும் அரசமைப்பு ஏற்பாடுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதற்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட தீர்வுப் பொதிகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அறிக்கைகளை பேச்சுக்கான அடிப்படைகளாகக் கொள்வதற்கு இரு தரப்பும் இணங்கி இருக்கின்றன என்றும், அமைச்சர் நிமால் சிறீபால டிசில்வா மற்றும் ஆர்.சம்பந்தன் கையெழுத்திட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஏற்கனவே 51 விடயங்கள் அடங்கிய யோசனை தம்மால் முன்வைக்கப்பட்டிருந்தது. 
அவற்றில் 18 அதிகாரங்கள் மாகாண சபையின் வரையறைகளைத் தாண்டிச் செல்வதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். 
எனினும் அடுத்துவரும் சந்திப்புக்களில் அவை குறித்துக் கலந்துரையாடி அவற்றைத் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்கள் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் மாகாண அலகுக்கு உரியவை என்று தாம் கேட்டிருந்த அதிகாரங்களில் சிலவற்றை மத்திய அரசும் கையாள வேண்டிய தேவை இருப்பதாக அரச தரப்பினர் தெரிவித்திருக்கின்றார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். 
எனினும் அவை என்ன விடயங்கள் என்று அவர்கள் இன்னும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************

ஓடித்திரிந்து மெலிந்து போகும் தெளிவற்ற பீரிஸ்!
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று அவசரமாக ஜெனிவா புறப்பட்டுச் சென்றுள்ளார். 
இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா சென்றிருந்த சிறிலங்கா அரசின் உயர் மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையிலேயே ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா சென்றுள்ளார். 
ஜெனிவா மாநாட்டுக்காக சிறிலங்கா அரசாங்கம், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, மற்றும் நாடாளுமன்ற உறப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்திருந்தது. 
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டதால், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜெனிவா சென்ற கையோடு கொழும்பு திரும்பியிருந்தார். 
இதனால் ஏனைய நான்கு பேர் கொண்ட உயர்நிலைக்குழுவே ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தது. 
இந்தநிலையில் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அடங்கலான குழுவினர் நேற்று காலையும், அமைச்சர் மகிந்த சமரசிங்க தனியாகவும் நாடு திரும்பியுள்ளனர். 
இந்தநிலையிலேயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நேற்று ஜெனீவா பயணமாகியுள்ளார். 
அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் அடுத்தவாரம் மீண்டும் ஜெனிவா செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதை தடுத்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதும், ஜெனிவாவில் இன்னமும் கடுமையான நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுவதாகவும், அதனைச் சமாளிக்கவே அமைச்சர்களை மாறி மாறி அனுப்பி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
****************

மார்தட்டிச் சொல்லும் ஸ்ரீலங்கா அணி சொல்வது உண்மையா?
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி விட்டதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 
ஜெனிவா சென்ற சிறிலங்கா குழுவில் இடமபெற்றிருந்த நிமால் சிறிபால டி சில்வா நேற்று கொழும்பு திரும்பிய பின்னரே இவ்வாறு கூறியுள்ளார். 
ஐ.நா பொதுச்செயலர் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த குழுவின் அறிக்கைய ஐ.நா வோ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையோ விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று உறுப்புநாடுகளின் பிரநிதிநிதிகளிடம் எடுத்துக் கூறியிருந்தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
சுமார் 40 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து விளக்கமளித்ததன் மூலம், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களை ஐ.நா.வில் ஆராயும் முயற்சி தடுக்கப்பட்டதாகவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 
நிபுணர்குழு அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டால், சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியானதுமான நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்று எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
சிறிலங்காவின் தற்போதைய நிலைமையை நேரில் வந்து அவதானிக்குமாறு பல நாட்டு தூதுவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நிபுணர்குழு அறிக்கை குறித்து ஜெனிவாவில் ஆராயப்படாது என்றே முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 
அதேவேளை, மனிதஉரிமைகள் பேரவையில் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு எதிராக, பெரும்பாலான உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டியுள்ளதாக சிறிலங்கா குழுவின் தலைவர் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 
இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்படாது என்ற பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 
இந்த அறிக்கையை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் 18வது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் பின்கதவால் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
அதிகமான நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும், நிபுணர்குழு அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க அவை எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 
ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பக்கசார்பான செயற்பாடுகளுக்கு மத்தியிலும் பெரும்பாலான நாடுகள் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
நவநீதம்பிள்ளை எல்லா நாடுகளையும் சமமாக நடத்தாமல், குரோத மனப்பான்மையுடன் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள மகிந்த சமரசிங்க, அவர் தொடர்ந்தும் ஒரு தலைப்பட்சமாக நடந்தால், அவருக்கு எதிராக பகிரங்கமாக விமர்சிக்கப் போவதாக எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
****************

மீண்டும் கற்காலம் நோக்கிச் செல்ல விரும்பும் சிங்களம்?
நாட்டில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென மக்கள் விரும்புவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 
சிறைச்சாலை கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் போது பெரும்பான்மையான மக்கள் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளனர். 
மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற தயட்ட கிருள கண்காட்சியின் போது இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜீ.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 
நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு பாரிய குற்றச் செயல்களைக் கருத்திற் கொண்டு மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென மக்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படாத போதிலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட 347 கைதிகள் போகம்பரை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
****************

ஊழல் மலிந்த தேசம்?
அரசாங்கத்திற்கு எதிராக நாள்தோறும் 25 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்யப்படுவதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி குறிப்பிட்டுள்ளார். 
ஆணைக்குழு இயங்காமல் இருந்த காலப்பகுதியில் கிடைக்கப் பெற்ற 3700 முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள
****************

பிச்சைக்கார நிலையில் இருந்து கவலைப்படும் சரத்!
இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்றுவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 
தரம் குறைந்த பெற்றோல் தரம் குறைந்த சிமேந்து போன்றவற்றை இறக்குமதி செய்து இந்த நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. 
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். 
இந்த விடயங்களை மக்கள் புரிந்துகொள்ளத் தவறினால் எதிர்காலத்தில் இலங்கை வறிய நாடாக மாற்றமடையும் என குறிப்பிட்டுள்ளார். 
சுவாசப்பை பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
****************