Tuesday 20 September 2011

செய்திகள் 19/09


அம்பலமாகும் உண்மைகள்
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் இழப்புகள் கூடிக்கொண்டு சென்றதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராஜாங்க திணைக்கத்துக்கு இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
போரின் போது போர் வலயத்துக்குள்ளும் வெளியிலும் நாள் ஒன்றுக்கு 63 பேர் கொல்லப்பட்டதாக இந்த தகவல் பரிமாற்றம் கூறுகிறது.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகளின் தகவல்படி, ஜனவரி 20 முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 4164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளெக், அமெரிக்காவுக்கு அறிவித்துள்ளார்.
சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 7 ஆம் திகதி இலங்கையின் படையினர் முல்லைத்தீவின் 17 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவான கரையோரப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு 33 பொதுமக்கள் போரினால் கொல்லப்பட்டனர்.
அது பெப்ரவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு 63 ஆக உயர்ந்தது.
2009 ஆம் ஆண்டு ஜனவரியில் நாள் ஒன்றுக்கு 184 பொதுமக்கள் வரை காயமடைந்தனர்.
பெப்ரவரி மாதக்காலப் பகுதியில் அது 145 ஆகவும் மார்ச்சில் 115 ஆகவும் இருந்தது.
இலங்கை அரசாங்கத்தினால், முல்லைத்தீவில் இரண்டாவது பாதுகாப்பு வலயம் பிரகடனப்படு;த்தப்பட்ட பெப்ரவரி 12 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் அங்கு 2ஆயிரத்து 452 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 5ஆயிரம் பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய நாடுகளின் தகவல்படி பொதுமக்களின் இலக்குகள் மீது இலங்கைப் படையினர் நாளாந்தம்; எறிகனை தாக்குதல்களை நடத்தி வந்தனர்.
அத்துடன் விமானக்குண்டு வீச்சுகளும் நடத்தப்பட்டன.
ஏ 35 வீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் மாத்திரம், 860 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 3ஆயிரத்து 339 பேர் காயமடைந்தனர்.
பலியானவர்களில் 23 சிறுவர்கள் உள்ளடங்குவர். 345 சிறுவர்கள் காயமடைந்தனர்.
*****************

யாரை நம்புவது?
இந்தியாவையும், அமெரிக்காவையும் நம்புவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் கிடைக்கப் போவதில்லை அதுதான் உண்மையும் கூட என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தனது நாட்டுக்கு ஆதாயம் தேட முனைபவர்களின் மாயைக்குள் தமிழ்த் தலைமைகள் சிக்கிவிடக்கூடாது என்று ஜனநாயக சோஷலிசக் கட்சியின் தலைவர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய எச்சரித்துள்ளார்.
தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் டில்லியில் கூறியிருந்தமை குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசுடன் சமரசம் பேசும் பிளேக் இலங்கைக்கு வெளியே சென்றுதான் வீர வசனம் பேசுகின்றார்.
அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக அடிக்கடி பேசும் இவர், எப்பொழுதாவது காவல்துறை, காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் விடயம் தொடர்பாக எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே ரொபட் ஓ பிளேக் அவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவும் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளாது. ஏனென்றால், மஹிந்த அரசுதான் அவர்களுக்கு முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே முறிவடைந்திருந்த பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
எதை நாம் நம்புவது என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, அரசின் பொறிக்குள் கூட்டமைப்பு சிக்காமல், கவனமாகச் சிந்தித்து பேச்சுகளை முன்னெடுக்கவேண்டும்.
அதேவேளை பேச்சுகள் மீண்டும் ஆரம்பமானதை தான் வரவேற்ப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இதேவேளை, போர்க் காலத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி மஹிந்த அரசைக் காப்பாற்றிய அமெரிக்காவும் இந்தியாவும் இப்பொழுது வேறு வடிவில் மஹிந்த அரசைக் காப்பாற்ற முனைகின்றன என்று ஜனநாயக சோஷலிச கட்சித் தலைவர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் இன்று அரசுக்கு எதிராகவும், அரசியல் தீர்வை வலியுறுத்தியும் போராடுகின்றனர்.
இந்நிலையில், உள்நாட்டில் தாமும் போராட்டங்களை முன்னெடுத்தால்தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
மாறாக அமெரிக்காவையும், இந்தியாவையும் நம்பினால் அது பகல் கனவாகும் எனவும் தெரிவித்தார்.
*****************

சிதைக்கும் முயற்சி தொடர்கின்றது
தமிழ்ப் பெண்களைக் கேவலப்படுத்தி தமிழர்கள் வாழும் பிரதேசங்களை உல்லாச புரியாக்க இலங்கை இராணுவம் முனைகிறது.
போரினால் சிதைந்து போயுள்ள வடபகுதியையும், அவல நிலையில் வாழும் தமிழ் மக்களையும் காட்சிப் பொருளாக்கி இங்கே தென்பகுதிச் சிங்களவர்களை அழைத்து வந்து கண்காட்சி நடத்துகின்றது அரசு என்று கூட்டமைப்பின் இணைச் செயலர் மாவை சேனாதிராசா சாடியுள்ளார்.
நேற்று முன்தினம் நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய மாவை சேனாதிராசா இராணுவத்தினர் தான் கிறீஸ் பூதங்களாக நடமாடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
இவர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களின் மீதே குறிவைத்து சேட்டைகளில் ஈடுபட முனைகின்றனர்.
இவ்வாறான செயல்களை எவரும் பொறுக்க மாட்டார்கள், பொங்கி எழுவார்கள் என்ற நோக்குடனேயே இப்படிக் கேவலமான செயல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்படித் தரங்கெட்ட முறையில் தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு மீண்டும் ஒரு இன அழிப்புக்கே திட்டமிடுகின்றனர்.
இந்தக் கிறீஸ் பூதங்கள் ஏன் தென்பகுதிச் சிங்களப் பெண்களைத் தாக்கவில்லை. தீவகப்பகுதிக்குள் போகவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
*****************

இணையவழி நுழைவிசைவு ஏன்?
சிறிலங்காவுக்கான இணையவழி நுழைவிசைவு பெறுவதற்கான விண்ணப்பங்களை செப்ரெம்பர் 28ம் நாள் தொடக்கம் இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும
78 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கா வரும்போது முன்கூட்டியே நுழைவிசைவுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வருகை நுழைவிசைவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் நாளுடன் நிறுத்தப்படவுள்ளது.
ஜனவரி 1ம் நாளுக்குப் பின்னர் சிறிலங்கா வரவிரும்பும் 78 நாடுகளின் குடிமக்கள் முன்கூட்டியே இணைய மூலம் விண்ணப்பித்து நுழைவிசைவு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், சிங்கப்பூர் , மாலைதீவு நாடுகளுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*****************

பதிவு ஏன்?
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு காணிகளை வழங்குவதாகவும் அவர்களது காணிக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் உறுதியினை வழங்குவதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்து காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் மண்ணின் மகிமை வேலைத்திட்டம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக செயற்படுத்தப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் என பலரும் தெரிவிக்கின்றனர்.
2 மாத கால தவணையில் காணிகள் அனைத்திற்குமான பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமென பதில் காணி உரித்து நிர்ணய ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இந்தவகையில் தற்போது புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களும் தமது காணிக்கான பதிவுகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமையால் பலரும் இப்பதிவு தொடர்பில் சந்கேத்துடன் பார்க்கின்றனர்.
வடபகுதியில் மட்டுமே மேற்கொள்ளப்படும் இப்பதிவு நடவடிக்கையால் பதிவு செய்யப்படாத அனைத்து காணிகளையும் அரசு சுவீகரித்துக்கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் வட மாகாண காணித்திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பாக மேலதிக விபரங்களை அதற்கான இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும்.
*****************

யுத்தக் குற்றவாளிகளுக்கு ஆப்பு!
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில் தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரி.பி.மடுவெகெதரவின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.
இந்தநிலையில் பேர்லினில் உள்ள சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசிடம் பதில் தூதுவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரை பதில் தூதுவராக ஏற்றுக் கொள்ள சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுத்து விட்டதாக ஜெனிவா அதிகார வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு ரி.பி.மடுவெகெதர தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்களுக்குத் துணைபோனதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் சுவிற்சர்லாந்து அரசாங்கம் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை ஏற்க மறுப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
ஆனால் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை நிராகரித்துள்ளாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை ஜேர்மனிக்கான தூதுவராக இருந்த மடுவெகெதர தற்போது கொழும்பு திரும்பியுள்ளார்.
அவருக்குப் பதிலாக சரத் கொங்கஹகே தூதுவர் பதவியை ஏற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயசும் விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
*****************

ஆளும் கட்சியின் அட்டகாசம்
தெஹிவளை கல்கிஸை மாநகரசபைக்கு அரச தரப்பின் மேயர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள வேட்பாளரொருவர் முற்றிலும் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அரசுத் தலைவர்த் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றை மிஞ்சும் வகையில் அவரது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பதால் பிரசார நடவடிக்கைகளுக்கு வாகனங்களைக்கூடப் பயன்படுத்த வசதியில்லாமல் வேட்பாளர்கள் தவிக்கும் நிலையில், குறித்த வேட்பாளர் உலங்குவானூர்தி மூலம் பறந்து சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்றார்.
ஆடம்பரமாகவும், சற்று வித்தியாசமாகவும் இருக்கட்டும் என்று பறந்து பறந்து நேற்று உலங்கு வானூர்திகளில் இருந்து விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தெஹிவளை கல்கிஸை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்திலுள்ள வடிகான்களிலும், குப்பைத் தொட்டிகளிலும், தரைகளிலும், வீட்டுக் கூரைகளிலும் விழுந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************

தொடரும் சந்திப்புக்கள்
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்ததலைவர் முரளி மனோகர் ஜோசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா அரசாங்கம், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண உறுதியானதும் வெளிப்படையானதுமான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்று இரா. சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மகாபோதி நிலையதில் அநகாரிக தர்மபால நினைவுச்சொற்பொழிவு ஆற்றுவதற்காக முரளிமனோகர் ஜோசி கொழும்பு சென்றிருந்த போது, அவரை சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரட்ண, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
கொழும்புக்கான பயணத்தின் முடிவில் கருத்து வெளியிட்டுள்ள முரளி மனோகர் ஜோசி, எல்லாக் குடிமக்களும் சமமானவர்கள் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்றும் அதற்கு சிறிலங்காவின் வடபகுதி விதிவிலக்காக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் வடக்கிலுள்ள மக்கள் தமக்கும் சமஉரிமை உள்ளது என்று உணரத்தக்க நிலை விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், எல்லா வாக்குறுதிகளும் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
*****************